

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக சுஷாந்த் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் உலக அளவில் அவர் பிரபலமானார். இந்நிலையில் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
சுஷாந்தின் தற்கொலை தொடர்பாக சுஷாந்தின் நண்பர்கள், ஊழியர்கள் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட போது சுஷாந்த் அணிந்திருந்த ஆடைகளை மும்பை போலீஸார் ‘இழுவிசை’ பரிசோதனைக்காக பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து மும்பை போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இழுவிசை (டென்ஸில்) பரிசோதனை என்பது ஒரு ஆடை ஒரு குறிப்பிட்ட எடையை தாங்குகிறதா என்பதை பரிசோதிப்பதற்காக செய்யப்படுகிறது. சுஷாந்த்தின் எடை 80 கிலோ. அவர் அணிந்திருந்த ஆடை அவரது எடையை தாங்குகிறதா என்பதை கண்டறிய அவரது ஆடைகள் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இறுதி பிரேத பரிசோதனை கிடைக்க இன்னும் மூன்று நாட்கள் ஆகும்.
பொதுவாக பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க 8 முதல் 10 நாட்கள் ஆகும். ஆனால் இது மிகவும் முக்கியமான விவகாரம் என்பதால் பரிசோதனையின் போது எந்தவித தவறுகளும் ஏற்பட்டுவிடாமல் இருக்க நிபுணர்கள் மிகுந்த கவனத்துடன் பணியாற்றி வருகிறார்கள்.
இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.