Published : 03 Jul 2020 12:48 PM
Last Updated : 03 Jul 2020 12:48 PM

தனித்துவமான ஆசான்; சகாப்தம் மறைந்தது: சரோஜ் கான் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்

மும்பை

நடன இயக்குநர் சரோஜ் கான் மறைவுக்கு, திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

பாலிவுட்டில் பழம்பெரும் நடன இயக்குநராக வலம் வந்த சரோஜ் கான் இன்று (ஜூன் 3) அதிகாலை மாரடைப்பால் காலமானார். 'ஏக் தோ தீன்', 'தாக் தாக்', 'ஹவா ஹவா', 'தம்மா தம்மா' போன்ற பல்வேறு புகழ்பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் சரோஜ் கான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாதுரி தீட்சித், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெரும்பாலான படங்களுக்கு ஆஸ்தான நடன இயக்குநராக சரோஜ் கான் பணியாற்றியுள்ளார்.

சரோஜ் கானின் மறைவு பாலிவுட் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவு தொடர்பாக திரையுலகினர் வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீட்களின் தொகுப்பு:

அக்‌ஷய் குமார்: பிரபல நடன இயக்குநர் சரோஜ் கான் மறைந்துவிட்டார் என்ற வருத்தமான செய்தியை காலை கண் விழித்ததும் அறிந்தேன். நடனம் என்பது மிக எளியது போலவும், யாரும் நடனமாடலாம் என்பது போலவும் காட்டியவர் அவர். துறைக்கு மிகப்பெரிய இழப்பு. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

மாதுரி தீட்சித்: எனது நண்பர், ஆசான் சரோஜ் கானின் இழப்பில் நான் நொறுங்கிப் போயிருக்கிறேன். நடனத்தில் எனது முழு திறமையை நான் எட்ட அவர் செய்த உதவிக்கு நான் என்றென்றும் கடன்பட்டிருப்பேன். அற்புதத் திறமையாளர் ஒருவரை இந்த உலகம் இழந்துவிட்டது. உங்கள் இழப்பை நாங்கள் உணர்வோம். அவரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆன்மா சாந்தியடையட்டும் சரோஜ் ஜி.

கங்கணா ரணாவத்: ஒரு அரிய கலைஞர், தனித்துவமான ஆசான். பல சூப்பர் ஸ்டார்களின் பயணத்தில் சரோஜ் கான் முக்கியப் பங்கு வகித்தார். 'தனு வெட்ஸ் மனு' திரைப்படத்தின் ஜுக்னி பாடலில் மறக்க முடியாத நடன அசைவுகளைத் தந்தார். 'தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தில் கனி பவாரி பாடலில், 'மணிகார்ணிகா'வில் டக்டாகி என்ற தாலாட்டுப் பாடல் என அவரது பங்களிப்புக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.

ரித்தேஷ் தேஷ்முக்: ஆன்மா சாந்தியடையட்டும் சரோஜ் ஜி. இந்த இழப்பு திரைத்துறைக்கும், திரைப்பட விரும்பிகளுக்கும் அளவிட முடியாதது. 2000 பாடல்களுக்கு மேல் நடன இயக்கம் செய்துள்ள சரோஜ், ஒரு பாடல் எப்படிப் படமாக்கப்பட வேண்டும் என்ற இலக்கணத்தையே தனியாளாக மாற்றியமைத்தார். 'அலா வுதீன்' திரைப்படத்தில் அவரது நடன இயக்கத்தில் ஆடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததன் மூலம் எனது கனவுகளில் ஒன்று நிறைவேறியது.

காஜல் அகர்வால்: உங்கள் வழிகாட்டுதலின் கீழ் நடனமாடவேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவு. ஆன்மா சாந்தியடையட்டும் சரோஜ் கான். உங்கள் இழப்பைக் கண்டிப்பாக உணர்வோம்.

ஃபாரா கான்: ஆன்மா சாந்தியடையட்டும் சரோஜ் ஜி. என்னையும் சேர்த்துப் பலருக்கு நீங்கள் ஒரு உந்துதலாக இருந்தீர்கள். உங்கள் பாடல்களுக்கு நன்றி.

தமன்னா: மூத்த நடனக் கலைஞர் சரோஜ் கான் மறைந்த மனமுடையும் செய்தியைக் கேட்டுக் கண்விழித்தேன். அவரது மறக்க முடியாத நடன அசைவுகள் என்னை என் இளம் வயதிலேயே அதிகம் ஈர்த்தன. ஆன்மா சாந்தியடையட்டும் சரோஜ் ஜி. உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.

ஜான் ஆபிரஹாம்: மனமுடைந்துவிட்டேன். ஆன்மா சாந்தியடையட்டும்

ரகுல் ப்ரீத் சிங்: 2020, தயவுசெய்து இதற்கு மேல் எந்த மோசமான செய்தியும் வேண்டாம். சரோஜ் கான் மறைவு பற்றிக் கேள்விப்பட்டு மிக்க வருத்தமடைந்தேன். அவரது இயக்கத்தில் ஒரு பாடலிலாவது நடனமாட வேண்டும் என்று எப்போதும் கனவு கண்டிருக்கிறேன். உங்கள் நயமும், இந்திய சினிமாவுக்கு உங்கள் பங்களிப்பும் என்றும் நினைவில் இருக்கும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். அவர் குடும்பத்துக்கு என் ஆறுதல்கள்.

அதிதி ராவ்: நடன இயக்கத்தில் எங்களுக்கு ஒரு சகாப்தம். ஆன்மா சாந்தியடையட்டும் சரோஜ் கான். நீங்கள் தந்த நினைவுகளுக்கு, பாடங்களுக்கு, விட்டுச் சென்றுள்ள மரபுக்கு நன்றி.

மகேஷ் பாபு: மூத்த நடன இயக்குநர் சரோஜ் கான் மறைவைக் கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். அவரது காலத்தை வென்ற நடனம் வரும் பல்வேறு தலைமுறைகளைத் தொடர்ந்து ஈர்க்கும். ஒரு சகாப்தத்தின் முடிவு. அவரது குடும்பத்துக்கும், நெருக்கமானவர்களுக்கும் என் மனமார்ந்த இரங்கல்கள். ஆன்மா சாந்தியடையட்டும் சரோஜ் ஜி.

அமிஷா படேல்: என்னால் இதை நம்ப முடியவில்லை. எங்கள் அனைவரையும் ஆட்டுவித்த நடன இயக்குநர் மறைந்துவிட்டார் என்பதைக் கேட்டு அதிக வருத்தமடைந்தேன். நமது துறையில் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு நடன இயக்குநர். ஆன்மா சாந்தியடையட்டும் சரோஜ் ஜி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x