Last Updated : 02 Jul, 2020 06:11 PM

 

Published : 02 Jul 2020 06:11 PM
Last Updated : 02 Jul 2020 06:11 PM

’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்!’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக் 

’டேட் சன் பிக்சர்ஸ்’ எனும் தலைப்பில், அப்பாவும் இயக்குநருமான கே.பாக்யராஜை, மகன் சாந்தனு வீடியோ பேட்டியெடுத்தார்.

இதுவரை மூன்று பாகங்களாக பேட்டி வந்துள்ள நிலையில், மூன்றாவது பாகத்தில், ‘என்னுடைய அப்பாவின் பெருமைமிகுந்த குணங்களாக நான் சொல்லிக்கொள்வதற்கான விஷயங்களைச் சொல்லுங்க அப்பா’ என்று சாந்தனு கேட்டார்.

இதற்கு பதிலளிக்கும் போது, ‘குருநாதர் பாரதிராஜா, அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் முதல் பட டைரக்‌ஷன் வாய்ப்பு வாங்கவேண்டும் என்பதற்காக, துரோகம் செய்துவிட்டதாக நினைத்தார். இல்லவே இல்ல சார் என்று எவ்வளவோ சொன்னேன். கேட்கவே இல்லை. அதுக்குப் பிறகு, எஸ்.ஏ.ராஜ்கண்ணு, ‘கன்னிப்பருவத்திலே’ படத்துக்காகவும் முதல் பட டைரக்‌ஷனுக்காகவும் ரெண்டு பிளாங்க் செக் கொடுத்தார். ஆனா நான் மறுத்துட்டேன். நம்ம மேல குருநாதர் சந்தேகப்பட்டுட்டார். அதனால இந்தக் கம்பெனிக்கு முதல் படம் பண்ணக் கூடாதுன்னு உறுதியா இருந்தேன். மறுத்தேன். பகவதி கிரியேஷன்ஸ் கோபிநாத்துக்குத்தான் முதல் படம் பண்ணினேன்.

அப்புறம், நான் உதவி இயக்குநரா இருந்தப்போ, நாச்சியப்பனுக்கும் அவரோட வேலை பாத்தவருக்கும் படம் பண்ணித்தரேன்னு சொல்லிருந்தேன். ‘அந்த 7 நாட்கள்’ படம் அவங்களுக்காகத்தான் பண்ணிக் கொடுத்தேன்’.

சொன்ன வார்த்தையைக் காப்பாத்தணும். அது வாழ்க்கைல ரொம்பவே முக்கியம். நீயும் உன் லைஃப்ல, வெற்றி தோல்விங்கறதையெல்லாம் தாண்டி, சொன்ன வார்த்தையைக் காப்பாத்தணுங்கறதுல உறுதியா இரு. கேரக்டர்ங்கறதுதான் முக்கியம். அதுக்காகத்தான் இதைச் சொல்றேன்’ என்று பாக்யராஜ் சொன்னார்.

அடுத்து, சாந்தனு... ‘உங்களைப் பாத்து நான் பிரமிக்கிற இன்னொரு விஷயம்... சுட்டுப்போட்டாலும் டான்ஸ் வராதுன்னு நல்லாத் தெரிஞ்சிருந்தும் கூட, ரொம்ப தைரியமா, உங்களுக்குன்னு டான்ஸ்ல ஒரு ஸ்டைலை வைச்சிக்கிட்டு, டான்ஸ்ல தனியா பேருவாங்கி, அந்த டான்ஸுக்கு யுனிக்கா ஒரு பேரும் வாங்கி சாதிச்சிட்டீங்க. இப்போ, அந்த யுனிக் ஸ்டைலை மக்களுக்குக் காட்றோம்’ என்றார்.

‘’நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஆடுறோம். எல்லாரும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க’’ என்றார்.

’’இதையே, நாம பேசுறதையே மக்கள் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பாங்க. இதுல இப்போ, டான்ஸ்னு ஒண்ணு ஆடி,’இவருக்கு இது தேவையா’ன்னு கேக்கப் போறாங்க’’ என்று வெட்கத்துடன் சிரித்தபடி தெரிவித்தார் பாக்யராஜ்.

‘’ ‘சின்னவீடு’ படத்துல ‘அட மச்சம் உள்ள மச்சான்’ பாட்டுக்கு, டபுள் ஆக்‌ஷன் பண்ணிருப்பேன். அதுலலாம் டான்ஸ் நல்லாத்தான் ஆடியிருப்பேன். என்னால எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு ஆடியிருக்கேன்’’ என்று விளக்கினார். ’’நீங்களாம் நினைக்கிற அளவுக்கு, பிரேக் அது இதுன்னு கையை நெளிச்சிக்கிட்டு, கழுத்தை நெளிச்சிக்கிட்டு ஆடுறதெல்லாம் என்னால பண்ணமுடியாது.

இந்த விஷயத்துல, பிரபுதேவா மேல கோபம்னா கோபம்... அப்படியொரு கோபம். ‘என் ரத்தத்தின் ரத்தமே’ படத்துக்காக சுந்தரம் மாஸ்டர் பையனோட வந்தார். ‘இது என் பையன், பேரு பிரபு’ன்னு சொன்னாரு. அப்புறம் மியூஸிக் போட்டாங்க. பிரபுதேவா டான்ஸ் ஆடிக்காட்டினாரு. நான் மிரண்டு போயிட்டேன். கையை அப்படி வளைக்கிறாரு. கழுத்தை அப்படி ஒடிக்கிறாரு. ‘அய்யய்யோ... இதுமாதிரிலாம் நாம எப்படி ஆடமுடியும். இவரு நம்மளை நினைச்சு பண்றாரா, எப்படி பண்ணமுடியும்’னு கலங்கிப் போய் ஷாக்காயிட்டேன்.

‘என்ன சுந்தரம் மாஸ்டர்... உங்க பையன் இப்படி ஆடிக்காட்றாப்ல. என்னால இதெல்லாம் முடியாது மாஸ்டர்’னு சொன்னேன். ‘இல்ல இல்ல... இது உங்களுக்கு இல்ல. உங்களுக்கு ஸ்டெப்ஸை நான் சொல்லித் தரேன். அது மீனாட்சி சேஷாத்திரிக்கு சொல்லிக் கொடுக்கறான்’னு சொன்னாரு.

அப்பாடான்னு நிம்மதியானேன். அப்புறம் எனக்கு ஈஸியா சொல்லிக் கொடுத்துட்டிருக்காரு. நான் அதைப் பண்ணிக்கிட்டே மீனாட்சி சேஷாத்திரியைப் பாத்தேன்.

ஆனா, மீனாட்சி சேஷாத்திரி பிரபுதேவாகிட்ட மாட்டிகிட்டு முழிச்ச முழி இருக்குதே..! மீனாட்சி சேஷாத்திரி பெரிய டான்ஸர்தான். ஆனா, புதுப்பையனை வைச்சு ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுக்க விட்டிருக்காரேனு கோபம். மாஸ்டர், ஹீரோவுக்கு மட்டும் சொல்லிக் கொடுக்கறாரு. தமிழ் ஆளுங்கறதால அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கறாரு. எனக்கு மட்டும் மாஸ்டர், தன் பையனை அனுப்பிச்சிருக்காரு. நான் எவ்ளோ பெரிய டான்ஸர்னு கொஞ்சம் எரிச்சலோடயே கத்துக்க வந்தாங்க.

இப்படிப் பண்ணுங்க அப்படிப் பண்ணுங்கன்னு சொல்லிக்கிடிருக்காரு. அதையெல்லாம் சட்டுன்னு கத்துக்கிட்டாங்க. நான் அதுக்குள்ளே எனக்குக் கொடுத்த சிம்பிளான ஸ்டெப்ஸையெல்லாம் பண்ணிட்டு, ரெடியா உக்கார்ந்து, இதையெல்லாத்தையும் கவனிச்சிட்டிருந்தேன். அப்புறம் பிரபுதேவா சொன்ன ஸ்டெப்ஸையெல்லாம் கத்துக்கிட்டு ரெடியாகி வந்தாங்க.

பிரபுதேவாவோட கேரியர், என் படத்துலேருந்து ஸ்டார்ட் ஆச்சுங்கறது, இப்பவும் என் கண்ணுக்கு முன்னாடி அப்படியே நிக்கிது’’ என்று பெருமிதத்துடன் தெரிவித்தார் பாக்யராஜ்.

‘சரி ஆடுவோமாப்பா’ என்றார் சாந்தனு. ‘இங்கே பாரு... எனக்கு முடியற மாதிரியா, ஈஸியா இருக்கற மாதிரி ஒரு பாட்டைப் போடு’ என்றார். சரியென்றார் சாந்தனு.

அதையடுத்து சாந்தனு ஸ்டைலீஷாக ஆட, பாக்யராஜ் தனக்கே உரிய ஸ்டைலில் ஆட, சாந்தனுவுக்கும் அதைச் சொல்லிக் கொடுத்ததெல்லாம் ஏகத்துக்குமான கலாட்டா காமெடி.

பின்னர், நிறைவாக, ‘’கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களோட ஆன்மா சாந்தியடைய நம்ம குடும்பம் சார்பா பிரார்த்தனை பண்ணுவோம். அப்புறம் தன்னலம் பாக்காம, டாக்டர்ஸ், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள்னு எல்லாரும் இன்னமும் சின்ஸியரா பாடுபட்டுட்டிருக்காங்க. அவங்களுக்கு மனமார்ந்த நன்றி. கையைக் கழுவுவோம். முகத்தைக் கழுவி சுத்தமா இருப்போம்’’ என்றார் பாக்யராஜ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x