Last Updated : 30 Jun, 2020 05:22 PM

 

Published : 30 Jun 2020 05:22 PM
Last Updated : 30 Jun 2020 05:22 PM

’’எனக்கு முதல் டைரக்‌ஷன் சான்ஸ்; ‘பிளாங்க் செக்’ கொடுத்ததையே வேணாம்னு சொன்னேன்; ஏன் தெரியுமா?’ - சாந்தனுவிடம் பாக்யராஜ் ப்ளாஷ்பேக்

டேட் சன் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜை, அவரின் மகன் சாந்தனு பேட்டி எடுத்தார்.

மிக நீண்ட உரையாடல் கலந்த பேட்டி. சுவாரஸ்யம் நிறைந்த பேட்டியில் சாந்தனு கேட்ட கேள்விகளும் பாக்யராஜ் அளித்த பதில்களும் .

‘’அப்பா. நீங்க பெரிய ஸ்கிரிப்ட் ரைட்டர். நல்ல நடிகர். பிரமாதமான டைரக்டர். இசையமைப்பாளர். இப்படி நிறைய சொல்லலாம். எல்லாரும் அப்படிச் சொல்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. இந்த சினிமாவையெல்லாம் தாண்டி, சினிமாவே இல்லாம, நான் உங்களை பெருமையா, சூப்பரான அப்பான்னு சொல்லிக்கிறதுக்கு என்ன விஷயம் இருக்குன்னு நினைக்கிறீங்க?’’ என்று சாந்தனு கேள்வி எழுப்பினார்.

அதற்கு பாக்யராஜ் பதில் அளித்ததாவது:

‘’சினிமாவெல்லாம் விட்டுட்டுச் சொல்லச் சொல்றே? இருக்கு. சொல்றேன். ஆனா, இதை எனக்காகச் சொல்லல. உனக்காக, நீ அதை ஃபாலோ பண்ணனுங்கறதுக்காகச் சொல்றேன்.

எங்க டைரக்டர்கிட்ட (இயக்குநர் பாரதிராஜா) நான் எவ்ளோ மரியாதையோட இருக்கேன்னு உனக்கு நல்லாவே தெரியும். எங்க டைரக்டருக்கும் ‘16 வயதினிலே’ படத்தோட தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கும் சின்னதா ஒரு மனஸ்தாபம் வந்துருச்சு. அந்த சமயத்துல பாரதிராஜா சார் என்ன நினைச்சிட்டார்னா, ‘அடுத்தாப்ல பட வாய்ப்பு கிடைக்குங்கறதுக்காக, நானும் பாலகுரு சாரும் சேர்ந்து, ஏதோ ராஜ்கண்ணு சார்கிட்ட ஏதேதோ போட்டுக் கொடுத்துட்டோம்னும் அதனாலதான் ரெண்டுபேருக்கும் இந்த சண்டையே வந்துச்சுன்னும் நினைச்சிட்டார்.

நான் சான்ஸ் தேடுறதுக்காகத்தான் பாலகுருவோட சேர்ந்து இப்படிப் போட்டுக் கொடுத்துட்டதா எங்க டைரக்டர் சார் முடிவு பண்ணிட்டார்.
டைர்க்டர்கிட்ட நான் எவ்வளவோ சொன்னேன்... ‘இல்ல சார். என்னை தப்பா நினைக்காதீங்க சார். உங்க மேல நான் எவ்ளோ மரியாதை வைச்சிருக்கேன்னு உங்களுக்கேத் தெரியுமே சார். நான் அப்படி எதுவுமே பண்ணல சார்’னு சொன்னேன். ஆனா அவர் அந்த நினைப்புல உறுதியா இருந்தார். ‘இல்லடா... வாய்ப்புக்காகத்தான் நீ இப்படிப் பண்ணிட்டே. பாலகுருவைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். இப்படி பண்ணிட்டீங்களேடா’ன்னாரு.

என்னடா இது... நம்ம குரு இந்த அளவுக்கு காயப்பட்டுத் திட்டுறாரேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்.

அப்போ டைரக்டர் சார்கிட்ட சொன்னேன்... ‘சரி சார்... என்னோட முதல் படம் அம்மன் கிரியேஷன்ஸுக்கு செய்யமாட்டேன். வேற எந்தக் கம்பெனிக்கு வேணும்னாலும் பண்ணுவேன். ஆனா, ராஜ்கண்ணு சாரோட அம்மன் கிரியேஷன்ஸுக்கு என் முதல் படம் பண்ணவே மாட்டேன் சார். சான்ஸுக்காக, நான் குரு துரோகம் பண்ணிட்டதா நினைக்கிறீங்க. உங்க மனசுல ஆழமா அப்படிப் பதிஞ்சிருச்சு. அதனால நான் அவருக்கு முதல் படம் பண்ணமாட்டேன்.
அப்போ... ‘கன்னிப்பருவத்திலே’ படம் முடிஞ்சுது. அப்பவே சினி ஃபீல்டுல எம் மேல ஒரு நம்பிக்கை வர ஆரம்பிச்சிருச்சு. நான் பெரியாளா வருவேன்னு எல்லாருமே உறுதியா நம்பினாங்க. ராஜ்கண்ணு சாருக்கு எம் மேல மிகப்பெரிய பிரியமும் நம்பிக்கையும் வந்துருச்சு. ஏன்னா... ‘16 வயதினிலே’ படத்தோட கதையை டைரக்டரைச் சொல்லச் சொல்லுவாங்க. இல்லேன்னா என்னைச் சொல்லச் சொல்லுவாங்க.

அதுக்கு அப்புறமா, ‘கிழக்கே போகும் ரயில்’ மிகப்பெரிய சக்ஸஸ். மூணாவதா ‘கன்னிப்பருவத்திலே’. அந்தப் படம் முடியும்போது, ராஜ்கண்ணு சார் எங்கிட்ட ரெண்டு பிளாங்க் செக் கொடுத்தாரு. ஒண்ணு... அந்தப் படத்துக்கு அஸோஸியேட் டைரக்டரா ஒர்க் பண்ணினேன். ஸ்கிரிப்டும் பண்ணியிருந்தேன். பாலகுரு அண்ணனுக்கு முழுக்க முழுக்க எல்லா வேலைகளையும் கூட இருந்து பண்ணினேன். படம் நல்லா வரணும், வெற்றி அடையணும்னு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செஞ்சேன்.

ராஜ்கண்ணு சார், ‘பாருங்க... ராஜனுக்கு (பாக்யராஜை அப்படித்தான் அழைப்பார்) எவ்ளோ வேணாலும் சம்பளம் தரலாம். ஆனா, அவன்கிட்ட பிளாங்க் செக் கொடுத்திருக்கேன். பாருங்க... அவன் கம்மியான தொகையைத்தான் எழுதுவான்’னு எல்லார்கிட்டயும் சொன்னார். ‘அவன் கம்மியாத்தான் போடுவான். ஆனா, நான் அதைவிட அதிகமாத்தான் போட்டுக் கொடுப்பேன்’னு சொன்னார். ஒரு பிளாங் செக்... அதுக்குன்னு சொல்லிக் கொடுத்தார். இன்னொரு பிளாங்க் செக்... அம்மன் கிரியேஷன்ஸ்ல நான் டைரக்ட் பண்றதுக்குன்னு சொல்லிக் கொடுத்தார்.

எனக்கு மைண்ட் முழுக்க, டைரக்டர் சார் என்னைப் பத்தி நினைச்சதுதான் இருந்துச்சு. சான்ஸுக்காகத்தான் ராஜ்கண்ணு சார்கிட்ட ஏதோ போட்டுக்கொடுத்துட்டேன்னு என்னை தப்பா நினைச்சாரில்லையா?

அதனால நான் ரெண்டு ’செக்’கையுமே திருப்பிக் கொடுத்தேன். ‘இந்த ஒரு ‘செக்’ல மட்டும் நீங்களே ஃபில் பண்ணிக் கொடுங்க சார்னு சொன்னேன். அதாவது, ‘கன்னிப்பருவத்திலே’க்கு ஒர்க் பண்ணின சம்பளம். ‘நீ எவ்ளோ வேணாலும் எழுதுய்யா. நான் தப்பா நினைக்கமாட்டேன்’னு சொன்னார். எவ்ளோ சொன்னேன். கேக்கல. அப்புறம் நான் ரொம்ப ரொம்ப கம்மியா ஒருதொகை சொன்னேன். உடனே சுத்தி இருந்தவங்ககிட்ட, ‘பாத்தீங்களா, ராஜன் பத்தி நான் சொன்னது கரெக்டாயிருச்சா? அதிகம் கேக்கமாட்டான்னு சொன்னது நடந்திருச்சா’ன்னு சொன்னாரு.

சரி... இன்னொரு செக்? அதை ஏன் திருப்பிக் கொடுக்கிறேனு கேட்டாரு. ’இல்ல சார்... டைரக்‌ஷன் அப்புறமாத்தான் பண்ணலாம்னு இருக்கேன். இப்போ பண்ற மாதிரி இல்ல சார்’னு சொன்னேன். ‘என்னய்யா... உம் மேல இண்டஸ்ட்ரிலயே நம்பிக்கை வைச்சிருக்கு. எவ்ளோ சம்பளம் வேணும்னு கேளு. அதையே தரேன்’னு சொன்னாரு. திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். நான் உறுதியா மறுத்துட்டேன். கிளம்பி வந்துட்டேன்.

அப்புறம், பல தடவை ராஜ்கண்ணு சார், எங்கிட்ட கேட்டுக்கிட்டே இருந்தாரு. ஆனா புதுக்கம்பெனி பகவதி கிரியேஷன்ஸ். கோபிநாத் சார். அவர்கிட்ட பணமும் பெருசா இல்ல. ஏதோ அப்படி இப்படின்னு உருட்டிப்புரட்டி பண்ணலாம்னு சொல்லி, பண்ணலாம்னு இருந்தாரு. ‘பாக்யராஜ் நாம எப்படியாவது பண்ணிடலாம்’னு எம் மேல நம்பிக்கையை மட்டும் வைச்சிக்கிட்டு பண்றதுக்கு வந்தார். அந்தக் கம்பெனிக்கு முதல் படம் டைரக்ட் பண்ண ஒத்துக்கிட்டேன்.

அதுக்கு அப்புறமா அவங்க மனைவியோட வந்து, 500 ரூபா அட்வான்ஸ் கொடுத்தாரு. சரின்னு சந்தோஷமா வாங்கிக்கிட்டு வேலையை ஆரம்பிச்சேன். பூஜைக்கு இன்விடேஷன் ரெடி பண்ணினோம். அப்போ எங்க டைரக்டர், ‘சிகப்பு ரோஜாக்கள்’ ஷூட் பண்ணிட்டிருந்தாரு. ராஜேஷ்கண்ணாவை வைச்சு சீன்ஸ் எடுத்துட்டிருந்தாரு.

நான் அங்கே போனேன். ‘படம் பண்றேன் சார். இன்விடேஷன் சார்’னு சொல்லிக் கொடுத்தேன். ‘ஆமாமாம்... கேள்விப்பட்டேன்யா. நல்லாப் பண்ணுய்யா’ன்னாரு. அப்புறம் இன்விடேஷனைப் பிரிச்சுக் காட்டினேன். ‘கம்பெனி பாருங்க சார்’னு சொன்னேன். ‘தெரியும்யா. கோபிநாத் தானே. கே.ஆர்.ஜி.யோட பிரதர்தானே... தெரியும் தெரியும்’னு சொன்னார். ‘கம்பெனி பேரு பாருங்க சார்’னு சொன்னேன். ‘பகவதி கிரியேஷன்ஸ்’னு வாசிச்சாரு.
உடனே நான், ‘பாத்துக்கோங்க சார்... ‘பகவதி கிரியேஷன்ஸ்’தான். ‘அம்மன் கிரியேஷன்ஸ் இல்ல சார்’னு சொன்னேன். அப்படியே என்னைப் பாத்தாரு.
‘பிளாங்க் செக் கொடுத்தாங்க சார். ஆனா நீங்க என்னைப் பத்தி மனசுல வேற விதமா நினைச்சிட்டீங்க. முதல் டைரக்‌ஷன் வாய்ப்புக்காக, நான் என்னவோ பண்ணிட்டேன்னு நினைச்சிட்டீங்க சார். அதனால அம்மன் கிரியேஷன்ஸ்ல ஒத்துக்கல சார்’னு சொன்னேன்.

உடனே டைரக்டர், ‘யோவ், நான் அன்னிக்கி என்னவோ ஒரு கோபத்துல சொன்னேன். அதையே நினைச்சிக்கிட்டு என்னய்யா இப்படிப் பண்ணிட்டே? அவனவன் முதல் டைரக்‌ஷன் சான்ஸ் கிடைக்குதுங்கறதுக்காக என்ன வேணா செய்வான். எப்படியாவது ஏதாவது பண்ணி வாய்ப்பு வாங்குவான். ஆனா நீ என்னய்யா சான்ஸ் கொடுத்தும் வேணாம்னு சொல்லிட்டே’ன்னு சொன்னாரு.

’இல்ல சார்... உங்ககிட்ட வேலை கத்துக்கிட்டவன் நான். உங்களை காயப்படுத்திட்டு, ஒரு படவாய்ப்பு வாங்கற மாதிரி நினைச்சீங்க. அது வேணாமேன்னுதான் சார் இப்படி வேற கம்பெனி கிடைக்கற வரை காத்திருந்தேன்’னு சொன்னேன். எங்க டைரக்டர் ஒருமாதிரி ‘ஃபீல்’ ஆயிட்டாரு. பிளாங்க் செக் மேட்டர்லாம் அவருக்கு அப்பவே தெரியும்.

இதை எதுக்குச் சொல்ல வர்றேன்னா.. குருகிட்ட வேலை பாத்திருக்கோம். அவர், நம்மளால காயப்பட்டுடக் கூடாது. அவரைக் காயப்படுத்திட்டு, அந்தக் கம்பெனிக்குப் படம் பண்ணினா, அவருக்கு நான் துரோகம் பண்ணிட்ட மாதிரி அவர் நினைப்பாருன்னுதான் வந்த வாய்ப்பையே வேணாம்னு சொன்னேன்.

டைரக்‌ஷன் சான்ஸ் கிடைக்கறது சாதாரண விஷயமே இல்ல. எங்க டைரக்டரெல்லாம் முதல் வாய்ப்பு கிடைக்கறதுக்கு அவ்ளோ கஷ்டப்பட்டிருக்காருன்னு எனக்கு நல்லாவே தெரியும். எத்தனையோ பேர் கஷ்டப்பட்டிருக்காங்க, முதல் வாய்ப்புக்காக! ஆனா எனக்கு ஈஸியா கிடைச்சும் கூட அதை வேணாம்னு புறக்கணிச்சேன்.

இது... இந்த விஷயம்... என்னை நினைச்சு நானே பெருமையா, மரியாதையா நினைக்கிற விஷயம். இதை எங்க டைரக்டரும் மறுக்கவே முடியாது’’ என்று பெருமைக்கு உரிய விஷயத்தை மனம் திறந்து விவரித்தார் பாக்யராஜ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x