Published : 29 Jun 2020 06:58 PM
Last Updated : 29 Jun 2020 06:58 PM

நல்ல தரமான படங்களுக்காகக் காத்திருக்கிறேன்: தேவயானி

சென்னை

நல்ல தரமான படங்களுக்காக, கதாபாத்திரத்துக்காகக் காத்திருக்கிறேன் என்று தேவயானி தெரிவித்துள்ளார்.

மக்களிடையே கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் திரையுலகினரை வைத்து விளம்பரப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறது தமிழக அரசு.

'யமுனா', 'கட்டில்' படங்களின் இயக்குநர், நடிகர் இ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் தேவயானி நடித்த கரோனா விழிப்புணர்வு விளம்பரம் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த விளம்பரம் குறித்து தேவயானி கூறியிருப்பதாவது:

"இந்த நெருக்கடியான கரோனா காலத்தில் எங்களைப் போன்ற கலைஞர்கள் மக்களிடம் பாடலின் மூலமும் குறும்படங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்போது அது மிக வேகமாக அனைவரிடமும் சென்றடைகிறது. இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்த தமிழக முதல்வருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விளம்பரப் படத்தில் தேசிய விருதுபெற்ற 'ஆடுகளம்' வ.ஐ.ச ஜெயபாலனுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒரு தந்தை மகளுக்கான பாசப்பிணைப்போடு இந்த விளம்பரம் அமைந்திருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு 'பாரதி' படத்தில் எனக்கு மருமகனாக நடித்து இப்போது 'கட்டில்' திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் கணேஷ்பாபு நான் பங்கேற்ற 'கவசம் இது முகக்கவசம்' பாடலையும் இந்த விளம்பரத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் எனது குடும்பத்தோடு அந்தியூர் அருகிலுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன். இடைப்பட்ட நாட்களில் அரசு அனுமதியோடு சென்னைக்கு வந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்துச் சென்றிருக்கிறேன். கிராமங்களின் வாழ்க்கையை முழுமையாக நான் இப்போது அனுபவித்து வருகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்போது தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவது, கிராமத்து சமையல் செய்வது, குழந்தைகளோடு விளையாடுவது, தினமும் இரவு நேரத்தில் என் மூத்த மகள் பகவத்கீதை வாசிக்க அதை நாங்கள் குடும்பத்தோடு கேட்பது, குழந்தைகளுக்கான கல்வி இப்படி வாழ்க்கையின் அர்த்தங்களை முழுமையாகச் செயல்படுத்தி வருகிறோம். 'மகாபாரதம்', 'ராமாயணம்' போன்ற தொடர்கள் தொலைக்காட்சிகளில் மறு ஒளிபரப்பாகிறது. இதைக் குடும்பத்தோடு பார்த்து மகிழ்ந்து வருகிறோம்.

கரோனா வைரஸிடமிருந்து நாமெல்லாம் மீண்டு ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் முழுவீச்சுடன் நான் செயல்படுவேன். நல்ல தரமான படங்களுக்காக, கதாபாத்திரத்துக்காகக் காத்திருக்கிறேன். நிச்சயமாக தமிழக மக்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன்".

இவ்வாறு தேவயானி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x