Published : 29 Jun 2020 10:01 AM
Last Updated : 29 Jun 2020 10:01 AM

ஜானகி அம்மா நீடூழி வாழ வேண்டும்; ஏன் இப்படி செய்கிறீர்கள்? - வதந்தி பரப்புவோருக்கு எஸ்.பி.பி கடும் கண்டனம்

இந்திய திரையுலகில் பழம்பெரும் பாடகியாக இருப்பவர் ஜானகி. 17 மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேள்' என்று செல்லமாக அழைக்கப்படுபவர். 4 தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள் என இவர் அடைந்த பெருமைகள் ஏராளம்.

2013-ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசாங்கம் பத்ம பூஷன் விருது அறிவித்தது. ஆனால், இது தனக்கு தாமதமானது என்று நிராகரித்துவிட்டார் ஜானகி. 2016-ம் ஆண்டு தான் திரையுலகிலிருந்து விலகுவதாக அறிவித்து, ஹைதராபாத்தில் தனது மகனுடன் வாழ்த்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்னதாக, இவரது உடல்நலம் குறித்து வதந்தி உருவானது. அதற்கு அவரும், அவரது குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, இன்று (ஜூன் 28) மதியம் முதலே ஜானகி குறித்து மீண்டும் வதந்தி உருவானது. இதனால் சமூக வலைதளத்தில் பரபரப்பு உண்டானது. இதற்கு அவருடைய மகன் முரளி கிருஷ்ணா மற்றும் இசையமைப்பாளர் தீனா ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இது போன்ற வதந்திகளை பரப்புவோருக்கு பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது குறித்து எஸ்.பி.பி வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

ஜானகி அம்மாவின் உடல்நலம் குறித்து காலையிலிருந்து 20 தொலைபேசி அழைப்புகள் வந்துவிட்டன. சமூக வலைதளத்தில் யாரோ ஒருவர் ஜானகி அம்மா இறந்துவிட்டார் என்ற பொய் தகவலை பரப்பி இருக்கிறார். என்ன முட்டாள்த்தனம் இது?

நான் ஜானகி அம்மாவிடம் பேசினேன். அவர் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார். ஒரு கலைஞரை ஆத்மார்த்தமாக நேசிக்கும் மக்களுக்கு இது போன்ற செய்திகள் மாரடைப்பை ஏற்படுத்தலாம். தயவுசெய்து சமூக வலைதளங்களை நேர்மறையான விஷயங்களுக்கு பயன்படுத்துங்கள்.

இது போன்ற விஷயங்களை கேலிப் பொருளாக்காதீர்கள். சமூக வலைதளங்களை தீய விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டாம். ஜானகி அம்மா நீடூழி வாழ வேண்டும். ஏன் இப்படி செய்கிறீர்கள்? கடவுள் நம் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்.

இவ்வாறு எஸ்.பி.பி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x