Last Updated : 20 Jun, 2020 04:15 PM

 

Published : 20 Jun 2020 04:15 PM
Last Updated : 20 Jun 2020 04:15 PM

’’ஏ.எல்.ராகவனுக்கு ரொம்பப் பிடித்த பாட்டு அது!’’ - முக்தா சீனிவாசன் மகன் உருக்கம்

’’ஏ.எல்.ராகவன் சாருக்கு அவர் பாடிய அந்தப் பாட்டு ரொம்பவே பிடிக்கும். அப்பா அதைப் பத்தி அடிக்கடி சொல்லிருக்கார். எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கும் ஏ.எல்.ராகவன் சாரையும் அவரோட மென்மையான குரலையும் மறக்கவே முடியாது’’ என்று இயக்குநர் முக்தா சீனிவாசனின் மகன் தெரிவித்தார்.

நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவரும் நடிகை எம்.என்.ராஜம் அவர்களின் கணவருமான ஏ.எல்.ராகவன், உடல்நலக்குறைவால் நேற்று 19ம் தேதி வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகினரும் தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி, ஏ.எல்.ராகவன் குறித்து பகிர்ந்துகொண்டதாவது:

‘’ஏவிஎம் தயாரித்து, வீணை பாலசந்தர் இயக்கிய ‘அந்தநாள்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் அப்பா (முக்தா சீனிவாசன்). அந்தப் படத்தில் சிறுவனாக, இளைஞனாக ஏ.எல்.ராகவன் சார் நடித்திருந்தார். ஆக, அப்போதிருந்தே அப்பாவுக்கு அவரைத் தெரியும்.அதன் பிறகு எப்போது பார்த்தாலும் எங்கே பார்த்தாலும் ‘என்னடா ராகவா, நல்லாருக்கியா?’ என்று எல்லோருக்கு முன்பாகவும் உரிமையாகவும் அன்பாகவும் பேசுவார் அப்பா. ஏ.எல்.ராகவன் சாரும் அப்பாவிடம் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் நடந்துகொள்வதை நானே பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறேன்.

’பூஜைக்கு வந்த மலர்’ என்ற படத்தை அப்பா இயக்கினார். அதில் ஜெமினிகணேசன், சாவித்திரி, முத்துராமன், நாகேஷ் நடித்திருந்தார்கள். கதை வசனம் பாலசந்தர் சார். இந்தப் படத்துக்கு எம்.எஸ்.வி.சார்தான் இசை. ஏ.எல்.ராகவன் சார் படத்துக்காக பிரமாதமான பாடலைப் பாடினார். ரிக்கார்டிங் எல்லாம் முடிந்துவிட்டது.

ஆனால், அந்தப்பாட்டின் மெட்டு, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் ‘அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை’ என்ற பாட்டைப் போல இருந்ததால், அந்தப் பாட்டைப் பயன்படுத்த வேண்டாம் என அப்பா முடிவு செய்துவிட்டார். அதேபோல், எம்.எஸ்.வி. சாரும் வேறு ஒரு மெட்டைக் கொடுத்தார். அந்தப் பாடல்தான் படத்தில் இடம்பெற்றது.

அதேசமயம், படத்தில் இடம்பெறாத,பயன்படுத்தாத அந்தப் பாடல் அப்பா உட்பட எல்லோருக்குமே ரொம்பப் பிடித்திருந்தது. முக்கியமாக, ஏ.எல்.ராகவன் சார் ரசித்துப் பாடியிருந்தார். அவருக்கும் அந்தப் பாட்டு பிடித்திருந்தது. ’திங்களுக்கு என்ன இன்று திருமணமோ...’ என்ற அந்தப் பாடலைப் பிரமாதப்படுத்தியிருப்பார்.

இதில் ஒரு சுவாரஸ்யம் நடந்தது. அப்போதெல்லாம், பாடல் ரிக்கார்டிங் செய்ததும் அந்தப் பாடல்களை சிலோன் ரேடியோவுக்கு கேசட்டில் அனுப்பிவைப்பார்கள். ‘பூஜைக்கு வந்த மலர்’ படத்தின் பாடல் என்று படத்தில் சேர்க்காத பாடலை அப்படி அனுப்பிவிட்டார்கள்.

சிலோன் ரேடியோவில், அந்தப் பாடலை திரும்பத் திரும்பப் போட்டார்கள். ரசிகர்களுக்கும் அந்தப் பாடல் ரொம்பவே பிடித்துவிட்டது. அதன் பின்னர், ஏ.எல்.ராகவன் சாரைப் பார்க்கும் போதெல்லாம், ’என்னடா ராகவா, நீ பிரமாதமான பாடின பாட்டை, சிலோன் ரேடியோல போட்டுக்கிட்டே இருக்கான் கேட்டியா? திருப்திதானே’ என்று கேட்பார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ராகவன் சார், லேசாகச் சிரிப்பார்.

முக்தா பிலிம்ஸ் 60ம் ஆண்டு விழாவை கடந்த வருடம் நடத்தினோம். அதற்கு ஏ.எல்.ராகவன் சாருக்கும் அழைப்பு கொடுத்து வரவேண்டும் என விரும்பிக் கேட்டுக் கொண்டோம். ஆனால் அப்போது அவரால் வரமுடியவில்லை. ‘அப்பாவோட எண்பதாம் கல்யாணத்துக்கெல்லாம் வந்தேன். ஆனா இப்போ நடக்கமுடியல. தப்பா எடுத்துக்கவேணாம்’ என்று தயங்கித் தயங்கி சொன்னார்.

அப்பாவுக்கும் ஏ.எல்.ராகவன் சாருக்கும், 54ம் ஆண்டிலிருந்தே பழக்கம். அவர்களுக்குள் அப்படியொரு பந்தமும் பாசமும் உண்டு. ஏ.எல்.ராகவன் சாரின் மரணம், அவரைப் பற்றி அப்பா எங்களிடம் அன்போடு சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகின்றன.

ஒரு மகாகலைஞனை தமிழ்த் திரையுலகம் இழந்துவிட்டது. குழந்தையைப் போல் சிரிக்கும் ராகவன் சாரின் முகத்தையும் சிரிப்பையும் இனி பார்க்கவே முடியாது எனும் துயரத்தை, அவரின் பாடல்களும் குரலும்தான் ஆறுதலாக இருந்து நம்மை அமைதிப்படுத்தும்'' என்று நெகிழ்ந்து தெரிவித்தார் முக்தா ரவி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x