Last Updated : 20 Jun, 2020 12:38 PM

 

Published : 20 Jun 2020 12:38 PM
Last Updated : 20 Jun 2020 12:38 PM

ஆக்கபூர்வமாகக் கையாளலாமே ஓடிடி தளங்களை!

ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பவர்கள் பொழுதுபோக்குவதற்கு உதவுபவை ஓடிடி தளங்கள். அமேசான், நெட்ஃபிளிக்ஸ், ஜீ 5, ஹாட் ஸ்டார் எனப் பல இணையதளங்கள் திரைப்படங்கள், தொடர்கள் போன்றவற்றைத் தொடர்ந்து அளித்துவருகின்றன. ஜீ 5 தளத்தில் வெளியாகவிருந்த ‘காட்மேன்’ தொடருக்கு எதிராக எழுந்த சர்ச்சை ஓடிடி தளத்தின் தாக்கம் எந்த அளவுக்குச் சமூகத்தில் உள்ளது என்பதை எடுத்துச் சொல்லும் சரியான சான்றாகும். இந்தத் தளங்கள் தயாரிக்கும் தொடர்களே திரைப்படங்களை மிஞ்சும் அளவில் உள்ளன. ஆனால், ஓடிடி தளங்களில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களின் தரம் எந்த அளவில் உள்ளன? பொழுதுபோக்குத்தன்மையை அளவுகோலாகக் கொண்டால்கூட அவை தாக்குப் பிடிக்குமா? அண்மையில் ’பொன்மகள் வந்தாள்’, ’பெண்குயின்’ என இரண்டு படங்கள் ஓடிடி தளத்தில் மட்டுமே வெளியாயின. இரண்டும் பெரிய அளவில் ரசிக்கத்தக்கவை அல்ல என்னும் விமர்சனமே பரவலாக உலவி வருகிறது.

தொடர்ந்து இப்படியான படங்களே ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றால் அது பெரிய ஆபத்தாக முடியக்கூடும். ஒருவகையில் ஓடிடி தளம் என்பது பெரிய வரப்பிரசாதம். சுயாதீனத் திரைப்பட முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் சிறப்பான படங்களை உருவாக்கி அவற்றை ஓடிடி தளங்களில் வெளியிடலாம் எனும் ஒரு வாய்ப்பு இப்போதைக்கு உள்ளது. அதிலும், பெரிய படங்களை மீறிச் சிறிய படங்கள் எந்த அளவுக்கு வெளிவரும் என்பது கேள்விக்குறிதான். என்றபோதும், ஏதோ ஒரு வாய்ப்பாக இது எஞ்சியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இப்படியான சூழலில் ஓடிடி தளத்தில் தரமற்ற திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகும் என்றால் அது மக்கள் மனத்தில் ஒரு அலட்சிய உணர்வை உருவாக்கிவிடும்.

திரையரங்குகளில் வெளியிடப் போதுமான தரமற்ற படங்களே ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற புரிதலுக்கு வெகுமக்கள் வரக்கூடும். அது ஓடிடி தளத்தை நம்பி உருவாக்கப்படும் படங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைய நேரிடலாம். இப்போதைக்குத் திரையரங்குகள் மூடிக்கிடப்பதால் ஓடிடி தளங்கள் கைகொடுக்கின்றன. எதிர்வரும் காலத்தில் இவை ஒரு பெரிய மாற்று ஊடகமாக இருக்கும் என்னும் ஊகத்தில் உண்மை இல்லாமலில்லை. அவற்றை உரிய முறையில் பயன்படுத்தாமல் அலட்சியமாகக் கையாண்டால் அந்த ஊடகத்தின் பயன் நினைத்த அளவுக்குக் கிட்டாமல் போகக்கூடும். இப்போதைக்கு வெளியான இந்த இரண்டு படங்களுமே பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தியவை. இது கிட்டத்தட்ட தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு ஈடானவை. தொலைக்காட்சி அலைவரிசைகளின் நெடுந்தொடர்களில்தாம் பெண்மையக் கதாபாத்திரங்கள் பெருமளவில் இடம்பெறுகின்றன. ஆனால், அவை பெண்களுக்குப் பெருமை தரும் வகையில் அமைந்துள்ளனவா என்பது மில்லியன் டாலர் கேள்வி. தமிழில் நெடுந்தொடர்களின் தரம் எவ்வளவு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது.

ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் படங்கள் நெடுந்தொடர்களின் நீட்சிபோல் அமைந்துவிடுவது ஆபத்தின் அறிகுறி. ஓடிடி படங்கள் என்றாலே ரசிகர்கள் தலைதெறிக்க ஓடிவிடும் அளவுக்கான படங்களே ஓடிடியில் வெளியாகும் எனில் அது யாருக்கும் பயன்தராமல் போகக்கூடும். எனவே, ஓடிடியில் ஓரளவு நல்ல படங்களை வெளியிடுவதே அந்த ஊடகத்துக்கான மதிப்பை அதிகப்படுத்தும். இத்தகைய பொறுப்புணர்வுடன் ஓடிடியில் படங்கள் வெளியானால் மட்டுமே அது ரசிகருக்கும் படத்தை உருவாக்கியவருக்கும் பயனுள்ளதாக அமையும். அதைவிடுத்து, ஏதோ வாய்ப்பு கிடைத்தது என்பதற்காக ஓடிடியில் இப்படியான படங்கள் தொடர்ந்து வெளியாகும் என்றால் ஓடிடியின் திரைப்படங்கள் வெறும் பட்டியலில் ஒன்றாக அமையுமே தவிர பார்ப்பதற்கு உகந்ததாக அமையாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x