Last Updated : 19 Jun, 2020 09:19 PM

 

Published : 19 Jun 2020 09:19 PM
Last Updated : 19 Jun 2020 09:19 PM

’’நடிப்பு ராட்சஷன் பிரகாஷ்ராஜ்; சாக்லெட் பாய் பிரசாந்த்;  என் படத்தில் அஞ்சு ஃபைட்டு, துரத்திய காட்டெருமைகள்’’ - ’அப்பு’ குறித்து இயக்குநர் வஸந்த் பிரத்யேகப் பேட்டி

உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படமெடுப்பதும் அதன் வழியே நம் மனதை ஊடுருவித் துளைப்பதும் சாதாரணமல்ல. அப்படிப்பட்ட படங்களை எடுப்பதில், கவிதைக்காரர், ரசனைக்காரர் என்றெல்லாம் பெயர் பெற்றவர்... அப்படியே, முழுக்க ஆக்‌ஷன் படமொன்றைச் செய்தார். ரசிகர்களின் புருவங்கள், ஆச்சரியக்குறியாகின. அட... போட்டன. மெல்லிய உணர்வுகளைப் படம் பிடிக்கும் அந்த இயக்குநர் வஸந்த் (வஸந்த் எஸ்.சாய்). அப்படி ஆக்‌ஷன் களத்தில் புகுந்து புறப்பட்ட அந்தப் படம் ‘அப்பு’.


பிரசாந்த், பிரகாஷ்ராஜ், தேவயானி முதலானோர் நடித்த ‘அப்பு’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளாகிவிட்டன. 2000வது ஆண்டு, ஜூன் 16ம் தேதி வெளியானது ‘அப்பு’.
‘கேளடி கண்மணி’, ‘நீ பாதி நான் பாதி’, ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்று பூ மாதிரியான மெல்லிய உணர்வில் இருந்து கோடு போட்டு, படமெடுத்தவர், ஹைவேஸ் வெயிலில் தகதகக்கும் உஷ்ணம் போல், ‘அப்பு’வை கொடுத்திருந்தார்.


அதென்ன ‘அப்பு’? பிரசாந்த் எப்படி? ‘மகாராணி’ கேரக்டருக்கு பிரகாஷ்ராஜ் ஏன்?, தேவயானியின் நடிப்பு எப்படி?... எனும் கேள்விகளை இயக்குநர் வஸந்த் எஸ்.சாயிடம் கேட்க, இருபது வருடங்களுக்கு முந்தைய பட அனுபவங்களை, ஏதோ இருபது நிமிடங்களுக்கு முன்பு நடந்தது போல் மளமளவென விவரிக்கத் தொடங்கினார்.


’’என்னுடைய சினிமாக் கம்பெனிக்கு இப்போது கே3ன்னு பேர் வைச்சிருக்கேன். சித்ரா டாக்கீஸ்னு பேர் வைச்சிருக்கேன். 2000ல நான் ஆரம்பிச்ச கம்பெனியோட பேரு ‘ரே சினிமா’. சத்யஜித்ரே பைத்தியம் நான். அவரை எனக்கு அவ்ளோ பிடிக்கும். எனக்கு ரொம்பப் பிடிச்ச டைரக்டர். அவரோட படங்கள் எல்லாமே பிடிக்கும். இப்போ புரிஞ்சிருக்கும் ஏன் ‘அப்பு’ன்னு வைச்சேன்னு! ‘அப்பு ட்ரையாலஜியே’ அத்தனை பிரபலமாச்சே! அதனாலதான் ‘அப்பு’ன்னு கேரக்டருக்கும் படத்துக்கும் பேர் வைச்சேன்.


அப்புறம் மகாராணி கேரக்டர் (திருநங்கை). பிரகாஷ்ராஜ் பண்ணிருந்தார். அப்பவே நிறையபேர் கேட்டாங்க... ‘பிரகாஷ்ராஜ்தான்னு முடிவு பண்ணினீங்களா? எப்படி செலக்ட் பண்ணினீங்க?’ன்னெல்லாம் கேட்டாங்க. அந்த ‘மகாராணி’ கேரக்டருக்கு சாய்ஸே கிடையாது. வேற யாரையும் என்னால நினைச்சுக் கூட பாக்கமுடியல. பிரகாஷ்ராஜைத் தவிர வேற யாரும் பண்ணவே முடியாது. நானும் அவரும் சேர்ந்து பண்ணனும்னு முடிவு பண்ணினோம். அது ‘ஆசை’யை விட, இன்னும் ஹெவி ரோலா இருக்கணும்னு நினைச்சோம். ஒரு சேலஞ்சிங்கான கேரக்டர் இருக்கணும்னு நானும் விருப்பப்பட்டேன். அவரும் ஆசைப்பட்டார்.


உடல்மொழின்னு சொல்றோமே... அந்த பாடிலாங்வேஜ்லேருந்து எல்லாத்தையும் அப்படி நுணுக்கி நுணுக்கி, பாத்துப் பாத்து அந்தக் கேரக்டரைப் பண்ணிருப்பார் பிரகாஷ்ராஜ். மறக்கவே முடியாது. பிரகாஷ்ராஜ், நடிப்பு ராட்சஷன். அப்பவே இதுல நிரூபிச்சிருந்தாரு.


அப்புறம் ஹீரோ பிரசாந்த். இன்னிக்கி வரைக்கும் பல பேர் எங்கிட்ட சொல்றது இதுதான்... பிரசாந்த் சாக்லெட் பாய். அவரை ‘அப்பு’ படத்துல ஆக்‌ஷன் பண்ணவைச்சிருப்பீங்க. உம்முன்னு படம் முழுக்க சிரிக்கவே மாட்டார். சீரியஸ் ரோல்ல வரவைச்சிருப்பீங்க. அதேபோல, ஆக்‌ஷன் கிங் அர்ஜூன். ‘ரிதம்’ படத்துல, அவரை ஆக்டிங் கிங்கா மாத்தியிருப்பீங்க. இதை நிறைய பேர் சொல்லுவாங்க. இப்படி மாத்திப்பண்றது நமக்கும் நல்லாருக்கும். அவங்களுக்கும் இன்னும் சுவாரஸ்யமா இருக்கும்.


பிரசாந்த், இந்தப் படத்துல ரொம்ப டெடிகேட்டடா, சின்சியரா, ரொம்பவே விருப்பப்பட்டு நடிச்சார். அவரோட ஒர்க்கிங், எக்ஸலண்டா இருந்துச்சுன்னுதான் சொல்லுவேன். பிரசாந்த், மிகப்பெரிய திறமைசாலி. டான்ஸோ ஃபைட்டோ அவருக்கு பெரிய விஷயமே இல்ல. தூங்காம இருக்கற கேரக்டர்... ‘இன்சோம்னியா’ல கஷ்டப்படுற கேரக்டர். சிரிக்கவே மாட்டார்னு அந்தக் கேரக்டருக்கு நான் என்னெல்லாம் நினைச்சிருந்தேனோ அதையெல்லாம் அவ்ளோ பிரமாதமா கொடுத்திருந்தார்.


தேவயானி... ‘ஆசை’ படத்துலயே பாத்திருந்தேன். ஆனா, அந்தப் படத்துல என்னால அவங்களோட ஒர்க் பண்ணமுடியல. இந்தப் படத்துலதான் சேர்ந்து பணியாற்றினோம். சவுத் ஆப்பிரிக்கா மேல எனக்கு அப்பலேருந்தே ஒரு மயக்கம். ’ஆப்பிரிக்கன் சஃபாரி’ படம் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. ’டர்பன்’ங்கற ஏரியால ஓபன் மிருகக்காட்சி சாலைல அந்தப் படம் எடுத்தாங்க. அந்த திறந்தவெளி மிருகக்காட்சி சாலைல, ’ஆப்பிரிக்கன் சஃபாரி’ ஷூட் பண்ணின பகுதிகள்ல, ‘அப்பு’ படத்தோட பாடல்களை ஷூட் பண்ணினேன். இதெல்லாம் மறக்கமுடியாத அனுபவம்.


இன்னுமொரு மறக்கமுடியாத அனுபவம்... ஜீப்ல எல்லாரும் இருந்தாங்க. நானும் ஒளிப்பதிவாளர் வினோத்தும் மட்டும், எங்கே எடுக்கலாம், கேமராவை எங்கே வைக்கலாம்னெல்லாம் பாக்கறதுக்காக நடந்தே போனோம்.ஜீப்லேருந்து ஒருகிலோ மீட்டர் வந்திருப்போம். அந்த திறந்தவெளி மிருகக்காட்சி சாலைல, அதுவொரு பொட்டல்காடு. செம்பட்டை கலர்ல இருக்கிற நாணலைத் தேடி போயிட்டிருந்தேன்.


அப்போ, திடீர்னு ஜீப்கிட்ட நின்னுட்டிருந்த பிரசாந்த், தேவயானி, எங்க குழுவினர் எல்லாரும் குரூப்பா கத்துனாங்க. ’முன்னாடி பாருங்க முன்னாடி பாருங்க’ன்னு கத்துனாங்க. பாத்தா... ஒருபத்துப்பதினஞ்சு காட்டெருமைங்க, தடதடன்னு எங்களை நோக்கி ஓடி வந்துட்டிருக்கு. என்ன பண்றதுன்னே தெரியல.


அப்புறமா சொன்னாங்க... காட்டெருமைங்க ஓடிவரும்போது, அப்படியே படுத்துட்டா, அதுங்ககிட்டேருந்து தப்பிச்சுக்கலாம், அது ஒண்ணும்பண்ணாதுன்னு சொன்னாங்க. அதுசரி... நாங்க அப்படியே விழுந்துகிடந்து, அதுங்கபாட்டுக்கு எங்களை மிதிச்சிட்டுப் போனா என்னாகும்னு யோசிக்கக் கூட முடியல. பி.டி.உஷா ரேஞ்சுக்கு ஓடினோம். வாழ்க்கைல இதைவிட வேகமா ஓடமுடியாதுங்கற அளவுக்கு ஓடினோ.ஜீப்ல ஏறிக்கிட்டோம். மறக்கவே முடியாது.


அடுத்து ‘ஆசை’ல டெல்லி. ‘அப்பு’ல மும்பை. ஒரு நகரத்தோட வாழ்க்கையை, ஒரு சினிமாக்குள்ளே கொண்டு வர்றது அழகா இருக்கும்னு நினைச்சேன். மறுபடியும் ‘ரிதம்’ல கூட நிறைய பாம்பேல எடுத்தேன். பாம்பே எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலதான் அங்கே பண்ணினேன்.


கொல்கத்தா கூட ரொம்பப் பிடிக்கும். ‘நேருக்கு நேர்’ படத்துல ஒரு பாட்டுக்குள்ளே கொல்கத்தாவோட முக்கியமான அழகையெல்லாம் கொண்டு வந்திருப்பேன். பொதுவாவே, எனக்கு ஊர் சுத்திப் பாக்கறது ரொம்பப் பிடிக்கும். அது படங்கள்லயும் பாடல்கள்லயும் வந்துரும்.


அப்புறம்... இயற்கையான இடங்கள்ல படம் பிடிக்கிறதுதான் எனக்குப் பிடிக்கும். இந்த செட்ல படம்ங்கறது, பாட்டுலதான் பண்ணிருக்கேன். இந்தப் படத்துல, மும்பையை அப்படியே சென்னைல கொண்டுவரவேண்டிய தேவை இருந்ததால, பெரிய செட் ஒண்ணு, சத்யா ஸ்டூடியோல போட்டு பண்ணினேன். மகி ரொம்ப அற்புதமா செட் போட்டிருந்தாரு.


‘அம்பது ரூபா பாட்டு’ பாத்தீங்கன்னா தெரியும். நடுவுல ஆறு வாய்க்கால் மாதிரி ஓடும், இடைல பாதை இருக்கும். இதுவும் எனக்கு புது அனுபவம்தான்.
கத்தி மேல நடக்கிற மாதிரியான கதை. இதை ஒரு சேலஞ்ச் மாதிரிதான் எடுத்துக்கிட்டேன். என் படங்கள்ல பெருசா ஃபைட் வைச்சதே இல்ல. எமோஷனல் படங்கள் பண்றவன் நான். இதுல தேவையா இருந்துச்சு. அதனால இந்தப் படத்துல அஞ்சு சண்டைக் காட்சிகள் வைச்சேன். விக்ரம் தர்மா மாஸ்டர்தான் பண்ணினார். டான்ஸ் ராஜூசுந்தரம். வினோத் கேமரா. ஸ்ரீதர் எடிட்டிங் பண்ணினார். அப்புறம் வைரமுத்து சார் பாடல்கள். ‘அம்பது ரூபாதான்’, ‘நினைத்தால் நெஞ்சுக்குள்’ , ’மனசுக்குள் வரலாமா’ன்னு பாட்டெல்லாம் சிறப்பா கொடுத்திருந்தார். முக்கியமா என் குருநாதர் கவிதாலயோவோட படம். புஷ்பா கந்த்சாமிதான் தயாரிச்சாங்க. முழு சுதந்திரத்தோட, உற்சாகமா பண்ணினேன். குருநாதர் கம்பெனில, எனக்கொரு நல்ல படமா அமைஞ்சிச்சு ‘அப்பு’ படம்.


தேவா சாரும் அப்படித்தான். ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’, மூணாவதா ‘அப்பு’ படம். எனக்கு ரொம்பப் பிடிச்ச பாடல்களாக் கொடுட்த்தார். கம்போஸிங்ல உக்கார்ந்தது மறக்கவே முடியாது. எனக்கும் அவருக்கும் அவ்ளோ திருப்தியா வந்துச்சு எல்லாப் பாடல்களுமே!


இப்படி ‘அப்பு’ அனுபவங்கள் 20 வருடங்களானாலும் இன்னமும் அப்படியே பச்சக்னு இருக்கு, மனசுக்குள்ளே’’ என்று நினைவடுக்கில் இருந்து அலங்கரித்து வைத்திருந்த அனுபவங்களை அழகுற விவரித்தார் வஸந்த் (வஸந்த் எஸ்.சாய்).

'அப்பு’ குழுவினருக்கு வாழ்த்துகள் வஸந்த் சார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x