Published : 18 Jun 2020 09:58 PM
Last Updated : 18 Jun 2020 09:58 PM

மீண்டும் கார்த்தியை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு மீண்டும் கார்த்தி நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தீபாவளி வெளியீடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு கரோனா அச்சுறுத்தல் எல்லாம் முடிந்து சகஜநிலை திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பினால் மட்டுமே சாத்தியம்.

'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு கமல் தயாரிப்பில், ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ் என்று தகவல் வெளியானது. இதனை ரஜினி - கமல் இருவருக்கும் நெருக்கமானவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

இதனிடையே, தற்போது ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு எப்போது என்றே தெரியவில்லை. அந்தப் படத்தை முடித்துவிட்டுத் தான் லோகேஷ் கனகராஜ் படத்துக்கு அவர் வரவேண்டும். ஆனால் லோகேஷ் கனகராஜோ 'மாஸ்டர்' படத்தின் பணிகளை முடித்துவிட்டார். இன்னும் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டும் முடித்து வந்தால் இணைக்க வேண்டும் என்கிறார்கள் படக்குழுவினர்.

ரஜினி எப்போது தேதிகள் கொடுப்பார் என்பது முடிவாகாத சூழல், கார்த்தியை வைத்து 'கைதி 2' படத்தைக் குறைந்த நாட்களுக்குள் முடித்துவிடலாம் என்று லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கத் தயாராகவே இருக்கிறார் என்கிறார்கள். ஏனென்றால் இந்த கரோனா ஊரடங்கில் 'கைதி 2' படத்துக்கான திரைக்கதையினை முழுமையாக முடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்திற்கான கெட்டப்பில் இருக்கிறார் கார்த்தி. அந்தப் படம் நிறையப் போர்க் காட்சிகள் இருப்பதால், கரோனா அச்சுறுத்தல் முழுமையாக முடிந்தால் மட்டுமே படப்பிடிப்பு என்ற சூழல் உருவாகியிருக்கிறது. இதனால் லோகேஷ் கனகராஜ் படத்தைக் குறைந்த நாட்களில் முடித்துவிடலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும் தறுவாயில், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் அதிகாரபூர்வ அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புக்குச் சென்றுவிடுவார்கள் எனத் தெரிகிறது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x