Published : 18 Jun 2020 07:32 PM
Last Updated : 18 Jun 2020 07:32 PM

மீண்டும் படமாக்கப்படும் டயானாவின் வாழ்க்கை!

வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த பிரிட்டன் இளவரசி டயானாவின் வாழ்க்கை மீண்டும் திரை வடிவம் பெறுகிறது.

2013-ல், நயோமி வாட்ஸ் நடிப்பில் முதன்முதலில் ‘டயானா’ என்ற பெயரில் அவரது வாழ்க்கை படமாக்கப்பட்டது. தற்போது, ‘ட்வைலைட்’ (Twilight) பட வரிசையில் நடித்துப் புகழ்பெற்ற க்ரிஸ்டன் ஸ்டூவர்ட் நடிப்பில் ‘ஸ்பென்ஸர்’ எனும் பெயரில் படமாக்கப்படுகிறது.

டயானா மேற்கொண்ட சமூக சேவைகளும், துன்பத்தில் தவிக்கும் மக்களின்பால் அவர் கொண்டிருந்த கருணை உணர்வுமே அவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. டயானா உடுத்திய உடை மற்றும் நகைகளுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உண்டு. தன் கணவரான இளவரசர் சார்லஸுடன் ஏற்பட்ட மனக் கசப்பினால் அவருடனான திருமண பந்தத்தை முறித்துக் கொண்ட டயானா, தன் காதலன் டோட்டி அல்.ஃபாய்டுடன் காரில் பயணிக்கும்போது விபத்தில் இறந்தார். அவரது மறைவு உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற சம்பவங்களின் அடிப்படையில், ஆலிவர் ஹைர்ஷ்பெய்கல் இயக்கத்தில் ‘டயானா’ திரைப்படம் வெளியானது. சார்லஸுடன் ஏற்பட்ட மண முறிவுக்குப் பிறகு நிகழ்ந்த விஷயங்களை மையமாகக் கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. நயோமி வாட்ஸ் சிறப்பான நடிப்பை அளித்திருந்தாலும் திரைக்கதை சுவாரசியம் இல்லாமலும், டயானாவின் சுபாவத்தை உண்மைக்கு நெருக்கமாகச் சித்தரிக்காமலும் அமைக்கப்பட்டிருந்ததால் படம் தோல்வி அடைந்தது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கத் திரை விமர்சகர்கள் படத்தை வறுத்தெடுத்துவிட்டனர்.

இந்நிலையில், மீண்டும் அவரது கதை படமாக்கப்படுவது பலருக்கும் ஆச்சரியம் தந்துள்ளது. ஆனால், இம்முறை டயானாவின் கதை சிறப்பாகப் படமாக்கப்படும் எனும் நம்பிக்கை வலுத்திருக்கிறது. காரணம், இப்படத்தை இயக்கவிருப்பவர் பாப்லோ லரய்ன். இவர் ஜான் எஃப்.கென்னடியின் மனைவி ஜாக்குலின் கென்னடியின் வாழ்க்கையை அற்புதமான திரைக்கதையுடன் ‘ஜாக்கி’ எனும் பெயரில் படமாக்கியவர். 2016-ல், வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் அது. இவர் கவிஞர் பாப்லோ நெருடாவின் வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்து ‘நெருடா’ என்ற திரைப்படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டயானா என்ற இளவரசியைப் பற்றி விவரிக்காமல் டயானா என்ற பெண்ணின் வாழ்கையையும், அவர் சந்தித்த வலியையும் வேதனையும் உண்மையின் மறுவடிவமாகச் சித்தரிக்கும் வகையில் ‘ஸ்பென்ஸர்’ உருவாகி வருவதாக ஹாலிவுட் பட்சிகள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படம் காலத்தால் நிலைத்து நிற்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எல்லாம் சரி, அது என்ன 'ஸ்பென்ஸர்' என்று கேட்கிறீர்களா? அது டயானாவின் குடும்பப் பெயர்!

-க.விக்னேஷ்வரன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x