Last Updated : 16 Jun, 2020 07:14 PM

 

Published : 16 Jun 2020 07:14 PM
Last Updated : 16 Jun 2020 07:14 PM

’’அந்த ‘சொப்பனசுந்தரி’...’’ - கங்கை அமரன் விளக்கம்

’கரகாட்டக்காரன்’ படத்தை யாரால்தான் மறக்கமுடியும்? படம் வெளியாகி 31 ஆண்டுகளாகின்றன. இன்று படம் வெளியான நாள் (1989, ஜூன் 16).
‘கரகாட்டக்காரன்’ பட அனுபவங்களை கங்கை அமரன் பகிர்ந்துகொண்டார்.

அந்த வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இதோ...

’’இன்றைக்கும் ‘கரகாட்டக்காரன்’ படத்தை டிவியிலோ வேறு எதிலோ பார்த்துவிட்டு, எனக்கு நிறையபேர் போன் செய்கிறார்கள். இத்தனை வருடங்கள் கழித்தும் இன்றைக்கும் அந்தப் படம் மக்கள் மனங்களில் இருக்கிறது. மாதத்துக்கு ஒருமுறை, இரண்டுமுறை என்று எப்போது டிவியில் போட்டாலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘கரகட்டாக்காரன்’ படத்தின் பட்ஜெட் என்று பார்த்தால், 18ல் இருந்து 20 லட்சத்துக்குள்ளேதான் இருக்கும். ஆனால் வியாபாரம் பெரிதாக இல்லை. அப்போது ‘அண்ணனுக்கு ஜே’ என்று ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தோம். ‘கரகாட்டக்காரன்’ படமும் எடுத்துக் கொண்டிருந்தோம். ’கரகாட்டக்காரன்’ படத்தைப் பார்த்துவிட்டு, ‘படம் கிராமத்துக் கதையா இருக்கு, ஆட்டமும் பாட்டுமா இருக்கு’என்று ஏதேதோ காரணங்கள் சொல்லி, விலையைக் குறைப்பதில் குறியாக இருந்தார்கள்.

எங்களுக்கும் இந்தப் படம் அப்படி ஓடும் இப்படி ஓடும் என்றெல்லாம் பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. படம் ஜாலியா இருக்கு, பொழுதுபோக்கா இருக்கு. மக்கள் ரசிக்கிற மாதிரி இருக்குன்னுதான் நினைச்சோம். அப்போது, நட்பு ரீதியா நண்பர்களுக்கெல்லாம் போட்டுக் காட்டினோம். சத்யராஜ் அந்தப் பக்கம் இருந்தார். ‘வாங்களேன், படம் பாருங்களேன்’ என்று கூப்பிட்டோம். படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னார். இப்படி பல நடிகர்கள் படம் பார்த்திருக்கிறார்கள்.ஆனால் இவ்வளவு பெரிய சக்ஸஸ் ஆகும்னு தெரியலை.

ரஜினி சார், எங்களுக்கு ‘ராஜாதி ராஜா’ பண்ணினார். அப்போது வந்து, ‘எப்படி சாமி, இந்தக் கதையை திங்க் பண்ணினீங்க’ என்று கேட்டார். ‘இதுல திங்க் பண்றதுக்கு என்னங்க இருக்கு? எங்க ஊர்ல கரகாட்டம் ஆடிக்கிட்டிருப்பாங்க. அவங்க லைஃப் எப்படி இருக்கும்னு கதை பண்ணினோம். அவ்ளோதான்’ என்றோம்.
பொதுவாகவே, கரகாட்ட கோஷ்டி என்றில்லை. சங்கீத குரூப், டிராமா குரூப் எல்லாமே ஜோக் அடித்துக்கொண்டு, ஜாலியாக இருப்பவர்கள்தான். எப்போதும் கேலியும் கிண்டலும் நக்கலும் எனப் பேசிக்கொண்டிருப்பார்கள். அதனுடைய உச்சம், கரகாட்டக்காரர்கள்தான். அதையெல்லாம் வைத்துக் கொண்டு பண்ணியதுதான் ‘கரகாட்டக்காரன்’ படம். இந்த டைட்டில்தான் முடிவு பண்ணினோம். அப்படியே வைத்தோம்.

ராமராஜன் முதலில் நடித்த படத்துக்கு இசை நான் தான். அவரை வைத்து ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ பண்ணியிருந்தேன். தவிர, அந்த சமயத்தில் கிராமத்து ஆள் என்றால் அது ராமராஜன் தான். அதனால் அவர்தான் நாயகன் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிட்டோம்.

மோகனைப் போடலாம் என்றால் அவர் கலராக இருப்பாரே. ஆனால் ராமராஜன், கலரை ஏற்றிக்கொண்டார். மேக்கப் அதிகம் போட்டார். கரகம் ஆடுபவர்கள் அப்படித்தான் போட்டுக்கொள்வார்கள்.

ராஜா அண்ணாமலைபுரத்தில், நாங்கள் இருந்த வீட்டுக்கு அடுத்த தெருவில் கனகா வீடு இருந்த்து. தேவிகாம்மாவும் கனகாவும் தினமும் வாக்கிங் வருவார்கள். எங்கள் வீட்டுப் பக்கம் வரும்போது என் மனைவியுடன் என்னுடனெல்லாம் பேசுவார். வீட்டுக்கு வந்து காபி சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருப்போம்.

அப்போது, படம் பற்றிச் சொன்னேன். புதுமுகம் பயன்படுத்தும் எண்ணத்தைச் சொன்னேன். அப்போது என் மனைவி, ‘இந்தப் பொண்ணு நல்லாருக்கும்ங்க’ என்று சொன்னார். எனக்கும் சரியென்று பட்டது. அப்படித்தான் கனகா அறிமுகமானார். ஒரு டெஸ்ட் எடுத்துப்பார்த்தோம். எல்லோருக்கும் பிடித்துவிட்டது. மற்றபடி அவர் டான்ஸ் நன்றாகவே கற்றிருந்ததால், பெரிதாக வேலை வைக்கவில்லை எங்களுக்கு.

மற்றபடி, என் டீம் எப்போதும் போலவே எல்லோரும் இருந்தார்கள். என் முதல் படமான ‘கோழி கூவுது’க்கு நிவாஸ் ஒளிப்பதிவாளர். அந்த சமயத்தில் பாரதிராஜாவுக்கும் நிவாஸுக்கும் சண்டை. வருத்தத்தில் இருந்தார் நிவாஸ். அவரை அழைத்து, ‘வாங்க, நம்ம படத்துக்கு ஒர்க் பண்ணுங்க’ என்று ‘கோழிகூவுது’ பண்ணவைத்தேன். அதன் பிறகு இரண்டு மூன்று படங்கள் செய்தோம். மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர். அப்புறம் சபாபதி. நிவாஸின் அஸிஸ்டெண்ட்டுதான் சபாபதி.

சினிமாவில் வெற்றிக்கான இலக்கணம் என்று பார்க்கக் கூடிய விஷயமெல்லாம் ‘கரகாட்டக்காரன்’ படத்தில் உண்டு. யோசித்துப் பார்த்தால், எல்லாமே நம் வாழ்க்கையில், நாம் பார்க்கிற விஷயங்களில்தான் இருக்கின்றன. அங்கிருந்துதான் எடுத்து காட்சியாக்கினோம். அதனால்தான் அத்தனை இயல்பாக இருந்தன, எல்லாமே! சண்முகசுந்தரம் பேசும் ஒரேயொரு காட்சி மட்டும், கொஞ்சம் நடிப்பது போல் இருக்கும்.

அதேபோல, காந்திமதியும் சண்முகசுந்தரமும் அக்கா, தம்பி என்று இல்லாமல் கூட கதை பண்ணியிருக்கலாம். ஆனாலும் ரெண்டுபேரும் கரகாட்டக்காரங்க, அப்படியொரு உறவுன்னு வைத்தால் நன்றாக இருக்குமே என்று அப்படி வைத்தோம். விட்டுப்போன உறவு, பாசம், இடைவேளை ப்ளாக்... எல்லாமே ஒர்க் அவுட்டாகும் என்று வைத்தோம். ஒர்க் அவுட்டும் ஆனது.

கவுண்டமணி - செந்தில் பற்றி சொல்லணும். அப்போ கொஞ்சம் படம் கம்மியாகத்தான் இருந்த நேரம். மதுரைக்கு பக்கத்தில் கிராமம். உள்ளே போய் பார்த்ததுமே, பிடித்துவிட்டது. இது அவங்க வீடு, அது இவங்க வீடு என்று முடிவு செய்து, படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டோம்.

நாங்கள் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே கவுண்டமணியெல்லாம் பழக்கம். சங்கிலி முருகன் அண்ணன் டிராமான்னு இருந்தோம். அதில் ஓஏகே. தேவர்தான் ஹீரோ. தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் எல்லாரும் நடித்தார்கள். நாங்கள்தான் மியூஸிக். பாவலர் பிரதர்ஸ்னு இசையமைச்சிட்டிருந்தோம்.

அப்பவே, டிராமால, கவுண்டமணி நடிப்பைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்போம். மியூஸிக் இன்ஸ்ட்ரூமெண்ட் வரைக்கும் வந்துருவார். ஸ்டேஜ்ல எங்ககிட்ட விழுற மாதிரி வருவாரு. இப்படி கலாட்டா பண்ணுவாரு கவுண்டமணி. அப்பலேருந்தே பழக்கம். அப்புறமா செந்திலும் பழக்கமாயிட்டார். இப்படித்தான் எங்க படத்துல அவங்க வந்தாங்க.

’சொப்பனசுந்தரி’ன்னு அந்தக் காலத்துல ஒரு படம் வந்துருந்துச்சு. ஐம்பதுகள்ல வந்த படம் அது. சும்மா விளையாட்டா பேசிட்டிருந்தோம். அப்பதான் இந்த சொப்பனசுந்தரி கிடைச்சிச்சு. முப்பது வருஷத்துக்கு முன்னாடி ஒரு சின்னப்பொண்ணுன்னு ஒரு கற்பனை. அவ யாரு, எப்படி இருப்பா, எதுவுமே தெரியாது யாருக்கும். அந்தக் காமெடி இந்த அளவுக்கு ஹிட்டாகும்னு நினைக்கவே இல்லை.

அதுசரி... ‘கரகாட்டக்காரன் படமே இந்த அளவுக்கு ஓடும்னெல்லாம் நாங்க நினைக்கவே இல்லையே..’’ என்று வியப்பும் மகிழ்வுமாக, கங்கை அமரன் தெரிவித்தார்.

‘கரகாட்டக்காரன்’ படத்தின் 30ம் ஆண்டான கடந்த வருடம் கங்கை அமரன் ‘இந்து தமிழ் திசை’ க்கு அளித்த வீடியோ பேட்டி.

வீடியோ பேட்டியை முழுமையாகக் காண :

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x