

சுஷாந்த் மரணத்தால் தோனி மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார் என்று தயாரிப்பாளர் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் நேற்று (ஜூன் 14) தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. திடீரென்று தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தற்போது வரை கிரிக்கெட் வீரர் எந்தவொரு இரங்கலுமே தெரிவிக்கவில்லை. இதனிடையே தோனியின் முன்னாள் மேலாளரும், எம்.எஸ்.தோனி படத்தின் தயாரிப்பாளருமான அருண் பாண்டே அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
"இது நடந்திருக்கிறது என்பதையே எங்களால் நம்ப முடியவில்லை. என் துயரத்தை வெளிப்படுத்தும் நிலையில் கூட நான் இல்லை. தோனியும் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். வெறும் 34 வயதான சுஷாந்துக்கு செழிப்பான வாழ்க்கை, தொழில் காத்திருந்தது. எனக்கு அதில் சந்தேகமே இல்லை. எல்லோர் வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் வரும்.
'எம்.எஸ்.தோனி' படப்பிடிப்பின் போது நான் சுஷாந்துடன் 18 மாதங்கள் செலவிட்டேன். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முழு கவனத்துடன் இருந்தார். தோனி போல ஆட 9 மாதங்கள் பயிற்சி செய்தார். 15 நாட்கள் தோனியுடன் செலவிட்டார். தனது பணி கச்சிதமாக இருக்க எல்லா முயற்சிகளையும் செய்யும் ஒரு நடிகர் சுஷாந்த்.
பயிற்சியின் போது அவருக்கு அடிபட்டது, அவரது முதுகெலும்பில் சிறிய முறிவும் ஏற்பட்டது. ஆனால் அவர் தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்து ஒரு வாரத்துக்குள் தேறிவிட்டார். அவரது அர்ப்பணிப்பைப் பார்த்து தோனியும் ஆச்சரியப்பட்டார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சிறந்த நடிகர் இவர் தான் என்பது தோனி உட்பட அனைவருக்குமே தெரிந்திருந்தது"
இவ்வாறு அருண் பாண்டே தெரிவித்துள்ளார்