

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் நேற்று (14.06.20) தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'சுதேசி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. இந்நிலையில் சுஷாந்த் சிங் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு இந்தியத் திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுஷாந்தின் அலுவலகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''சுஷாந்த் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. அவரது ரசிகர்களாகிய நீங்கள் இத்தனை நாட்களும் செய்தது போலவே அவரை உங்கள் நெஞ்சில் நிறுத்தி அவரது வாழ்வையும், பணியையும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த துயர்மிகு நேரத்தில் எங்கள் அந்தரங்க உரிமைகளைப் பாதுகாக்க எங்களுக்கு உதவுமாறு ஊடக நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்''.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.