Published : 13 Jun 2020 09:46 PM
Last Updated : 13 Jun 2020 09:46 PM

அஞ்சலி: ஒளிப்பதிவாளர் பி.கண்ணன்- ஆகாயத்தின் மறுபக்கம் இரண்டு கண்கள்!

சினிமாவைக் காட்சியின் கலையாக முன்னிறுத்தும் கலைச் சமூகம் ஒளிப்பதிவாளர்களுடையது. எல்லீஸ் ஆர்.டங்கன் காலம் தொடங்கி தமிழ் சினிமா தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களைக் கண்டிருக்கிறது. ஆனால், எல்லா ஒளிப்பதிவாளர்களும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டதில்லை. தமிழ் சினிமா ஒளிப்பதிவு முன்னோடிகளில் மார்கஸ் பார்ட்லி 1969-ம் ஆண்டு வெளிவந்த ‘சாந்தி நிலையம்’ படத்துக்காக தேசிய விருது பெற்றார். அதன்பின்னர் ஒளிப்பதிவாளர், இயக்குநர் பாலுமகேந்திரா தொடங்கி பலர் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள். அவர்களில் பி.கண்ணன் ‘கடல் பூக்கள்’ படத்துக்காக தேசிய விருதைவிட உயர்ந்ததெனக் கருதப்படும் சாந்தாராம் விருது பெற்றார். பின்னர் ‘கண்களால் கைது செய்’ படத்துக்கு மாநில விருது பெற்றார். இவரைப் பற்றி எண்ணும்போது இரண்டு விஷயங்கள் சட்டென்று வியப்பூட்டுகின்றன. ஒளிப்பதிவை தனது துறையாகத் தேர்ந்துகொண்ட ஒருவருக்கு ‘கண்ணன்’ என்ற இயற்பெயர் அமைந்தது முதல் வியப்பு! காட்சிமொழியே பிரதானமாகக் கொண்ட கலைகளின் வரிசையில், ரசிகன் கண்டதும் அவனை கைது செய்துவிடும் ஆற்றல் ஒளிப்பதிவுக்கே உண்டு என்பதும், அதைக் குறியீடாக உணர்த்தும் தலைப்பினைக் கொண்ட படத்துக்கு அவருக்கு மாநில விருது கிடைத்ததும் இரண்டாம் வியப்பு!

மண்ணும் மனிதர்களும்

உண்மையில் திரையுலகமும் ரசிகர்களும் வியப்பது, பாரதிராஜா எனும் இயக்குநருடன் 40 ஆண்டுகள் ஒரு ஒளிப்பதிவாளர் இணைந்து மேற்கொண்டிருக்கும் நீண்ட நெடிய பயணத்தை! ஒளிப்பதிவு என்றாலே உள்ளரங்கில் நடத்தப்படுவது என்றாகிப்போன தமிழ் சினிமாவின் ‘ஸ்டுடியோ சிஸ்ட’த்தை மீறியெழுந்த சுதந்திர விரும்புகள் பாரதிராஜாவும் பி.கண்ணனும். வண்ணப்படக் காலத்தின் தொடக்கத்தில் துளிர்விடத் தொடங்கிவிட்ட பொழுதுபோக்கு யதார்த்த அலை சினிமாவின் முன்னோடிக் கலைஞர்களில் பாரதிராஜா எனும் இயக்குநருக்கும் கண்ணன் எனும் ஒளிப்பதிவாளரும் மண்ணின் கதைகளோடும் ஒளிப்பதிவுக் கருவிகளோடும் கோடம்பாக்கத்திலிருந்து வெளியேறி மக்களின் வசிப்பிடங்களை நோக்கிப் போனவர்கள்.

‘16 வயதினிலே’ படத்தின் மூலம், அசலான வானத்துக்குக் கீழே ரத்தமும் சதையுமாக மண்ணின் மனிதர்கள் வாழும் உண்மையான கிராமத்தின் தோற்றங்களை ரசிகர்களின் கண்களுக்குக் கொண்டுவந்து காட்டினார் பாரதிராஜா. அவரின் அந்த முதல் படத்துக்கே பி.கண்ணன் பணியாற்றிருக்க வேண்டியது தவறிப்போனாலும் ‘நிழல்கள்’ படத்திலிருந்து கண்ணன் இயற்கை ஒளியின் நிழலையும், வானத்தின் அழகையும் பசுமையான நிலப்பரப்புகளையும் காட்டத் தொடங்கிவிட்டார். இந்தக் கூட்டணி ஸ்டுடியோவை விட்டு பரந்த நிலப்பகுதிகளை நோக்கி வெளியேறியதில், அன்று கோடம்பாக்கத்தில் இயங்கிவந்த 17 ஸ்டுடியோக்கள் அலறின.

குயில் கூவும் காட்சி, பறவைகள் சிறகடிப்பது, மந்தைகள் நோக்கி மாடுகளும் ஆடுகளும் செல்வது, காட்சியும் ஆட்டின் முதுகில் வாலாட்டும் குருவியை அறிமுகப்படுத்தியது, கருப்புத் தோட்டத்தையும் களத்து மேட்டினையும் காதல் விளையும் மடியாக்கியது, கிராமியத்தின் வற்றாத அன்பினைப்போல் வயலில் தண்ணீர் பாய்ந்தோடுவது, அள்ளிக் குளங்களில் சிறுவர்கள் குதிப்பது, ஊரை ஒட்டிச் சலசலத்துக்கொண்டிருக்கும் ஆற்றியும் ஓடையிலும் கதாபாத்திரங்கள் நீராடுவது, கண்மாய் கொண்ட கிராமியம் எனில் கரையையும் அங்கே தலையசைக்கும் மரங்களையும் கூட கதாபாத்திரங்கள் ஆக்கியது, வறண்ட கரட்டு பூமி என்றால் சுள்ளிக்காட்டையும் முள்ளின் நுனியில் ஒளியும் பனித்துளியையும், கள்ளிக்காட்டையும் கள்ளிப்பூக்களையும் அதில் தேனெடுக்கும் கருவண்டையும் கூட கண்ணனின் கேமரா பால் வடிய படம்பிடித்துக் காட்டியது. நெய்தல் நிலமென்றாலோ பாறையில் அலைகள் மோதும் ஆர்ப்பரிப்பை கதாபாத்திரங்களின் உணர்ச்சியுடன் அத்தனை அழகாகப் பொருத்திக்காட்டியது என கண்ணன் கதைக்கும் களத்துக்குமான பிணைப்பைக் காட்ட, இயக்குநரின் காட்சிக் கற்பனைக்கு வெளியிலான காட்சித் துணுக்குகள் வழியாக கிராமிய வாழ்வியலைப் பதிவு செய்து காட்டிய அவரது ஒளி வித்தைகள் வார்த்தைகளுக்குள் அடங்காதவை.

கௌரவம் பெற்ற கண்கள்

அதனால்தான் பாரதிராஜா, “நான் படப்பிடிப்புக்கு கேமராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனின் இரண்டு கண்களைத் தான் எடுத்துச் செல்கிறேன். அவருக்குத்தான் ஆகாயத்தின் மறுபக்கத்தையும் பார்க்கத் தெரியும் என்று சொல்லியிருக்கிறேன்” என்று தனது கண்களைக் காணச் சென்னைக்கு வரமுடியாமல் அல்லி நகரத்திலிருந்து அழுது கொண்டிருக்கிறார். வெளிப்புறப் படப்பிடிப்பில், படக்குழு காலை 6 மணிக்கு கண்விழித்து 9 மணிக்கு முதல் ஷாட்டுக்கு தயாராகும் என்றால், அதிகாலை 4.30 மணிக்கு, படத்தில் நடிக்கும் அறிமுக நடிகர்களை அழைத்துக்கொண்டு தனது ஒரேயொரு உதவியாளரை மட்டும் அழைத்துக்கொண்டு புழுதி கிளம்பாத அந்த அதிகாலையின் அழகில் அந்த அறிமுக நடிகர்களை அங்கும் இங்கும் ஓடவிட்டு, நடக்கவிட்டு கண்ணன் எடுக்கும் மாண்டேஜ் காட்சித் துண்டுகளை பாரதிராஜா ‘படத்தொகுப்பில்’ பாடல் காட்சிகளாகவே உருவாக்கி கண்ணனின் கேமரா கண்களைக் கௌரவப்படுத்தியிருக்கிறார். அப்படியொரு பாடல்தான் ‘முதல் மரியாதை’ படத்தில் இடம்பெற்ற ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ பாடல்.

தொழில்நுட்பத்திலும் முன்னோடி

இத்தனை சிறந்த காட்சிமொழியும் காட்சிக் கற்பனையும் வசப்பட்ட கண்ணன் ஏன் இயக்குநர் ஆகவில்லை என்று எண்ணிப் பார்க்கிறேன். தனது சகோதரர்களில் கோபி.பீம்சிங், பி.லெனின் ஆகியோர் திரை இயக்கத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்தவர்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அதைவிட முக்கியக் காரணமாக நான் நினைப்பது, பாரதிராஜா எனும் படைப்பாளியிடம் கிடைத்த அளப்பரிய சுதந்திரம். பாரதிராஜாவின் ஒவ்வொரு படத்தையும் தனது படமாக நினைத்து அவற்றில் கரைந்துபோனதே. கமலும் பி.சி.ஸ்ரீராமும் படச்சுருளுக்கு மாற்றாக டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தபோது பரிசோதனை செய்து பார்ப்பதற்கும் சற்று முன்னரே, ‘ஆயுள் ரேகை’ என்ற படத்தில் அதைத் திறம்பட முயற்சித்து வெற்றிகண்டதுடன், அந்தப் படத்தில் தனது உதவியாளரை ஒளிப்பதிவாளராக்கி தொழில்நுட்பத்திலும் முன்னோடியாகத் தன்னை அடையாளம் காட்டிய நவீனவாதியாகவும் கண்ணன் நினைவு கூரப்படவேண்டும். பாரதிராஜா உயர்வு நவிற்சியாகக் கூறியது இப்போது உண்மையாகிவிட்டது. அகண்ட, அழகான பெரிய கண்ணனின் இரண்டு கண்கள் இப்போது நிஜமாகவே ஆகாயத்தின் மறுபக்கம் இளைப்பாறுகின்றன.

தொடர்புக்குள்:jesudoss.c@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x