Published : 13 Jun 2020 05:47 PM
Last Updated : 13 Jun 2020 05:47 PM

பூட்டிக் கிடந்தாலும் செலவுதான்: கரோனா முடக்கத்தால் கஷ்டத்தில் தியேட்டர் உரிமையாளர்கள்

பட உதவி: சிவகுமார்

‘யானை அசைந்து திங்கும்... வீடு அசையாமல் திங்கும்’ என்று நாஞ்சில் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. அதற்குச் சற்றும் குறைவில்லாததுதான் திரையரங்குகள். உச்ச நட்சத்திரங்களின் படங்களை வெளியிடும்போது கூட்டம் அள்ளும். ஆனால், இடைவேளையிலேயே இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் படங்களைக் கூறுபோட்டு விமர்சனம் செய்துவிடுகின்றனர் ரசிகர்கள். இதனால் முதல் நாளின் இரண்டாம் காட்சிக்கே காற்றாடும் திரைப்படங்கள் ஏராளம். இதற்கிடையே கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்ட திரையரங்குகள் இன்னும்கூடத் திறக்கப்படவில்லை.

எப்போது திறக்கும் என்பது குறித்தும் நிச்சயத் தகவல் இப்போதுவரை இல்லை. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளில் ரிலீஸாகும் படங்களுக்கு வாசலில் வாழைமரம் கட்டி வரவேற்ற திரையரங்குகள், இப்போது மாதக் கணக்கில் பூட்டிக் கிடக்கின்றன. பார்க்கிங் தலங்கள் இப்போது அறுவடை முடிந்த வயலைப் போலக் காலியாகக் கிடக்கின்றன.

எப்படி இருக்கின்றன லாக்டவுன் பொழுதுகள் என நாகர்கோவில், வள்ளி திரையரங்கின் உரிமையாளர் மனோகரனிடம் பேசினேன்.

“லாக்டவுனுக்கு முன்பே எங்க பொழப்பு ரொம்ப மோசம்தான். தயாரிப்பாளரிடம் இருந்து விநியோகஸ்தருக்கு வந்து, அங்க இருந்து ஏரியா விநியோகஸ்தருக்கு வந்து அவர் மூலமாப் படம் தியேட்டருக்கு வர்றதுக்குள்ள இரண்டு, மூணு கை மாறிடும்.

டிக்கெட் கட்டணம் கூடுதல்னு பொதுவா மக்கள்கிட்ட தியேட்டர் பத்தி கேட்டா குறைப்பட்டு சொல்லுவாங்க. ஆனா, அந்தக் கட்டணத்துக்கே வித்தாலும் லாபம் இருக்காதுன்னு எங்களுக்குத்தான் தெரியும். எங்க தியேட்டரில் எல்லாம் ‘அரங்கு நிறைந்தது’ன்னு போர்டு மாட்டிக் குறைஞ்சது மூணு வருசத்துக்கு மேல இருக்கும். சமீப காலத்தில் ‘விஸ்வாசமும்’, ‘அசுரனும்’தான் கைநட்டம் இல்லாமக் காப்பாத்துச்சு. மத்தபடி ஒவ்வொரு மாசமும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா வரவுக்கும், செலவும் இடையே கைப்பிடித்தம் வராம இருந்தாலே பெரிய விஷயம்தான். இதுக்கு இடையில் கரோனா வேற நாட்டையே உலுக்கி எடுத்துச்சு.

மூணு மாசத்துக்கும் மேல தியேட்டர் பூட்டிக்கிடக்கு. ஆனாலும் மின்சாரக் கட்டணம் மினிமம் சார்ஜ்னு மாசம் 5000 ரூபாய் கட்டணும். மாநகராட்சி வரி வருசத்துக்கு 93,160 ரூபாய் கட்டுறோம். இதுபோக, நிலவரி கட்டணும். 2 காவலாளிங்க உள்பட 8 பேர் வேலை செய்யுறாங்க. அவங்களுக்கு பி.எஃப், இஎஸ்ஐ சகிதம் சம்பளம் தரணும். எல்லாம் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா தியேட்டரில் காட்சியே இல்லாவிட்டாலும் மாசம் 75 ஆயிரத்துக்குக் குறையாம செலவு செய்ய வேண்டியிருக்கு. காட்சிகள் இல்லாததால் இப்போது கேளிக்கை வரி மட்டும் செலுத்த வேண்டியது இல்லை.

அரசு இனி தியேட்டர்களைத் திறக்க அனுமதித்தாலும் பெரிய நடிகர்களின் படங்கள் குறைந்தது ஆறு மாதங்களுக்கேனும் ரிலீஸ் ஆகாது. சிறு பட்ஜெட் படங்கள்தான் ரிலீஸாகும். ரசிகர்கள் மீண்டும் திரையரங்கம் பக்கம் வரவேண்டுமென்றால் பெரிய நடிகர்களின் படம் வந்தால்தான் சாத்தியம். அதற்கு முன் கரோனா முற்றாக ஒழிந்திருக்க வேண்டும். பெரிய நடிகர்களின் படம் வந்தாலும் இப்போதைப்போல் அடுத்தடுத்து இருக்கைகளில் அமர வைக்கவும் இனி வாய்ப்பில்லை.

அரசு இதையெல்லாம் கருத்தில் கொண்டு திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் காலத்திலேனும் வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அல்லது வரியைக் குறைத்து வசூலிக்க வேண்டும். வெளியில் தியேட்டர் ஓனர்னு நாலுபேரு பெருமையா சொல்லுவாங்க. ஆனா, இந்தத் தொழிலில் இருக்குற சங்கடங்கள் எங்களுக்குத்தான் தெரியும்” என்றார் மனோகரன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x