Published : 12 Jun 2020 12:31 PM
Last Updated : 12 Jun 2020 12:31 PM

இதுதான் என் தாஜ்மஹால்: பழைய வீட்டின் நினைவுகளைப் பகிரும் சிவகுமார்

பழைய வீட்டின் முன்பு சிவகுமார்.

வாட்ஸ் அப்பில் வந்த அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் ஆச்சரியமும் ஆர்வமும் தொற்றிக்கொண்டன. பழங்காலக் கட்டிடம். கம்பி போட்ட ஜன்னல்கள். வெளுத்துக் காணாமல்போன பெயிண்ட். கட்டிடத்தின் முன்புறம் ஒரு பைக். அதன் அருகில் நிற்பவர் நடிகர் சிவகுமார்.

புகைப்படத்துடன் ஒரு சிறிய குறிப்பு:
‘1958 -1965. மாதம் 15 ரூபாய் வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு...7 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தபோது வரைந்தவைதான், எனது அத்தனை ஓவியங்களும்...’ என்று நீள்கிறது அந்தக் குறிப்பு.

2011 -ல் ஈரோடு மகளிர் கல்லூரியில் பேசிய உரையால் இப்போது ஏற்பட்டிருக்கும் புதிய சர்ச்சை, வழக்கு, பதிலடி. ஆதரவுக் குரல்கள் என பரபரப்புகளுக்கு இடையில், அதுவும் பொது முடக்கத்துக்கு மத்தியில் மனிதர் எப்போது, எப்படி எடுத்தார் இந்தப் புகைப்படத்தை?
அவரிடமே பேசினேன்.

“இது சென்னையில 55 வருஷத்துக்கு முன்னாடி நான் வாழ்ந்த வீடு. என்னுடைய தாஜ்மஹால்னு சொல்வேன். இந்த வீட்டைப் பத்தி சொல்லும்போதெல்லாம் ‘அந்த வீடு இன்னமும் இருக்காப்பா? பார்க்கணும்’னு சூர்யாவும் கார்த்தியும் கேட்டுக்கிட்டே இருப்பாங்க. சில நாட்களுக்கு முன்பு ஒரு நாள் ராத்திரி 9 மணிக்கு முகக்கவசம் எல்லாம் போட்டுட்டு அங்கே போனோம். வீட்டைக் கண்டுபிடிச்சுட்டோம். இருட்டுலயே பார்த்துட்டுத் திரும்பிட்டோம். பகல் வெளிச்சத்துல ஒரு நாள் போய் பார்க்கணும்னு ஆசையா இருந்துச்சு. நேற்று என் மனைவி அந்த வீட்டைப் பார்க்கணும்னு சொன்னாங்க. கல்யாணம் ஆகி 46 வருஷம் ஆயிருச்சு. இன்னமும் அவங்க அந்த வீட்டைப் பார்த்ததில்லை. சரி, போலாம்னு கிளம்பிப் போனோம்.

அப்படியேதான் வீடு இருக்கு. யாரும் குடியில்லை. பூட்டிக் கிடக்குது. ஒரு லாரி போனா கிடைக்கிற இடைவெளியில ஒரு சின்னப் பையன் நடந்து போக முடியாது. அப்படிப்பட்ட சந்து அது. போனது போயிட்டோம். ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு ஆசை வந்துச்சு. அது முன்னால நின்னேன். டக்குனு ஒரு க்ளிக். எடுத்துட்டு ஓடி வந்துட்டேன்…”

குழந்தைத்தனம் மாறாமல் சொன்னவர் வழக்கம் போல் கொங்கு மொழியில் தனக்கே உரித்தான வேகத்துடன் தன் அனுபவத்தைக் கொட்ட ஆரம்பித்துவிட்டார்.

“1958 செப்டம்பர் மாசத்துல இருந்து 7 வருஷம் இந்த வீட்லதான் இருந்தேன். அசோகா ஓட்டலுக்குப் பின்னாடி இருப்பது புதுப்பேட்டை. அப்ப திருவேங்கடம் நாயக்கர் தெரு. இப்ப சாதிப் பேர் கூடாதுன்னு நாயக்கரை எடுத்துட்டு திருவேங்கடம் தெருவா ஆக்கிட்டாங்க. இது 47-ம் நம்பர் வீடு. அதுல 4 குடும்பங்கள், 2 பேச்சுலர்ஸ் இருந்தாங்க. நான் ஒரு பேச்சுலர். இன்னொருத்தர் பாலா பழனூர். பின்னாளில் அதிமுக எம்.பி.யாக இருந்து நாலு நாள் மத்திய மந்திரியாகக்கூட இருந்தவர். எதிர் அறையில்தான் அவர் இருந்தார்.

என் மாமா பொள்ளாச்சியிலிருந்து அப்ப கல்விக் கடனா மாசம் 85 ரூபாய் மணியார்டர் அனுப்புவார். அதுல ஒரு ரூபாய் போஸ்ட்மேனுக்குக் கொடுத்துடுவேன். ‘கீதா கபே ஜெயராம் அய்யர்’ சாப்பாடு சாப்பிட்டு அலுத்துப் போய், மணியார்டர் வந்தவுடனே மாசத்துல ஒரு நாள் புகாரி ஓட்டல் போவேன். அங்கே அரை பிளேட் பிரியாணி 80 பைசா. ஒரு ஆம்லெட் 50 பைசா. ‘பீஸ் மல்பா’ன்னு ஒண்ணு, ‘மிக்ஸ்டு ப்ரூட்ஸ்’ எல்லாம் போட்டுக்கொடுப்பாங்க. அது ஒரு அம்பது பைசா. இது எல்லாம் சேர்த்து ரெண்டு ரெண்டே கால் ரூபாய்ல முடிஞ்சுபோகும். அப்புறம் 82 ரூபாய் இருக்கும். அதுலதான் பட்ஜெட் போடுவேன். ரூம் வாடகை 15 ரூபாய். அசோகா ஓட்டல் ரவுண்டானாவுல ‘பாந்தியன் கேப்’ங்கிறது இருக்கு. இங்கே மாஜிஸ்திரேட் கோர்ட், நிறைய அரசு அலுவலகங்கள் இருக்கும்.

‘பாந்தியன் கேப்’ல அக்கவுன்ட் ஓப்பன் பண்ணி மாசம் பூரா என்ன சாப்பிடறமோ அதை நோட் பண்ணி வச்சிடுவாங்க. மாசம் ஆனா அதுக்குப் பணம் செலுத்திடணும். அப்புறம் அடுத்த மாசம் புது அக்கவுன்ட் ஓப்பன் பண்ணிடணும். ‘பாந்தியன் கேப்’ ஹிஸ்டரியிலயே (அது 50 வருஷமாவது இருந்திருக்கும்) அட்வான்ஸா 15 ரூபாய் கட்டீட்டு டிபன் சாப்பிட்ட ஒரே ஆள் நான்தான். என் மனசுல ஒரு கம்ப்யூட்டர் இருக்கு. ஒரு தோசை ரெண்டு இட்லி சாப்பிட்டாலும், ஒரு மசால் வடை, தோசை இட்லின்னு சாப்பிட்டாலும், இல்லை ரெண்டு இட்லி, ஒரு மசால் தோசை, வடை சாப்பிட்டாலும் 43, 45 பைசா தாண்டாது. மாசக் கடைசியில அந்த அட்வான்ஸ் பணத்துலேயே ஒண்ணு, ரெண்டு ரூபாய் மிச்சமிருக்கும். அந்தக் கணக்கைச் சரி பண்ணிட்டு அடுத்த மாசம் அட்வான்ஸ் பணம் கட்டிடுவேன்.

இந்தச் சூழ்நிலையில்தான் இந்த ரூம்ல குடியிருந்தேன். பெயிண்டிங் மெட்டீரியல்ஸுக்கு 15 ரூபாய் வச்சுக்குவேன். ‘கீதா கேப்’ல சாப்பாடு டோக்கன்களை ஒரு மாசத்துக்கு 14 ரூபாய் வீதம் 28 ரூபாய்க்கு ரெண்டு டிக்கட் புத்தகமா வாங்கீட்டா 2 வேளை சாப்பாட்டுக்கு டோக்கன்கள் சரியா இருக்கும். பாக்கெட்ல எப்பவும் நாலணா வச்சுக்குவேன். அது சைக்கிள் பஞ்சர் ஆகிப்போனா ஒட்டறதுக்கு. இங்கிருந்து புறப்பட்டு மகாபலிபுரத்துக்கு 56 மைல். வண்டித்தடம் மாதிரிதான் ரோடு. அங்கே ஒரு அக்ரஹாரம் இருக்கும். முற்றம்னு சொல்லக்கூடிய வெளித்திண்ணை தாழ்வாரத்தோட ஒவ்வொரு வீட்லயும் இருக்கும். வீட்டுக்குத் தாழ் போட்டுருவாங்க. தாழ்வாரத்து வெளித்திண்ணையில வெள்ளாட்டுக் குட்டிகள், நாய்கள் படுத்திருக்கும். ஐயருகிட்ட ‘சாமி இங்கே நாங்க படுத்துக்கிறோம்’னு சொன்னா, ‘சரி… சரி’ன்னு சொல்லிட்டுப் போயிடுவாரு.

அங்கே படுத்துட்டு காலையில அஞ்சு மணிக்கு எந்திரிச்சுக்குவேன். காலைக் கடன்களை முடிச்சிட்டு மாமல்லபுரம் கஃபே போயிடுவேன். அங்கே டிபன் சாப்பிட்டுட்டு மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், லைட் ஹவுஸ் எல்லாம் படம் வரைவோம். அங்கிருந்து போகும்போதும் வரும்போதும் திடீர்னு அடை மழை பிடிச்சுக்கும். சைக்கிள்ல ரெண்டு பேர். பின்னாடி பஸ்ல மூணு பேரு போவோம். வாட்டர் கலர் எல்லாம் கரைஞ்சிடும். பஸ்ல வர்றவங்ககிட்ட ‘புடிங்கடா’ன்னு சைக்கிள் கேரியரில் இருந்து கலர் பாக்ஸ் எல்லாம் எடுத்துக் கொடுத்துட்டு, நனைஞ்சுட்டே 15-20 கிலோ மீட்டர் போயிருக்கோம். வாயத் தொறந்தா தண்ணி ரொம்பிடும். அப்படி மழை. ராத்திரி நேரம். லைட் கிடையாது. மின்னல் அடிச்சா வெளிச்சம் வரும். பேய் இருட்டா இருக்கும். இதெல்லாம் 1961-ல நடந்தது.

திருக்கழுக்குன்றம் சத்திரத்தில் தங்குவோம் .. மலை மேல தினம் கழுகு வந்து பிரசாதம் சாப்பிடும். அன்னிக்கு ஏனோ கழுகு வரலே, அப்புறம் மலை மேல உட்கார்ந்து அந்த ஊரையே ஒரு படம் வரைஞ்சுட்டு திரும்பினோம். அடுத்தது செங்கல்பட்டு வருவோம். அங்கிருந்து சென்னை 48 கிலோ மீட்டர்.

சைக்கிள்ல வந்துட்டு இருக்கும்போது ஒரு நாள் ஸ்டேண்டேடு மோட்டார், அசோக் லேலண்ட் கம்பெனி முன்னாடி ஒரே கூட்டம். அன்று ஆயுத பூஜை. உடைஞ்சு போன தேங்காய் சில்லு, வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல், பொரி கடலை கொடுத்தாங்க. சைக்கிளை நிறுத்திட்டு மடியில வாங்கி பாக்கெட்டுல போட்டுக்கிட்டோம். தேங்காய்ச் சில்லு கொறிச்சுட்டே, திரும்ப 30 கிலோ மீட்டர் சைக்கிள் மிதிச்சு மெட்ராஸுக்கு வந்திருக்கோம்.

இது முழுக்க முழுக்க கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் வசிக்கிற இடம். ஒரு இந்துவான என்னை அவங்க குடி வைச்சதே பெரிய விஷயம். அதுலயும் பேச்சுலர். வீட்ல யாரையும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. காலையில 6 மணிக்கெல்லாம் போய் பாத்ரூம்ல குளிச்சுடணும். மற்ற வீடுகளுக்குள்ளே போகக் கூடாது. நண்பர்களை அழைச்சிக்கிட்டு வரக் கூடாது. சுவத்துல ஆணி அடிக்கக் கூடாது. இப்படி ஆயிரம் கண்டிஷன்கள். அந்த எல்லாத் தடைகளையும் தாண்டினேன். அங்கே நான் குடிபோகும்போது ஆறேழு வயசுல ரெண்டு மூணு சிறுமிகள் இருந்தாங்க. அவங்க எல்லாம் வளர்ந்து கல்யாணம் பண்ணிப் போகும்வரை நான் அங்கேதான் இருந்தேன்.

இதுல குடியிருந்தப்போ டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் போய் ஓவியம் வரைவோம். இப்போ அபூர்வமா மாசம் ஒரு தடவை ஞாயிற்றுக்கிழமை ஸ்டார் ஓட்டலுக்குச் சாப்பிடப் போனா 15 ஆயிரம் ரூபாய் பில் வருது. அந்தக் காலத்துல அஜந்தா, எல்லோரா, குதுப் மினார், பதேபூர் சிக்ரின்னு எல்லா இடத்துலயும் போயி ஓவியம் வரைஞ்சிருக்கோம். அதுக்கெல்லாம் 7,500 ரூபாய்தான் செலவாகும். குறைந்த தேவைகளோடும், உயர்ந்த லட்சியங்களோடும் வாழ்ந்த பொன்னான நாட்கள் அவை” என்று நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் சிவகுமார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x