Published : 08 Jun 2020 09:05 PM
Last Updated : 08 Jun 2020 09:05 PM

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்: பள்ளி, கல்லூரிகளுக்கு ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள்

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவது தொடர்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 70 நாட்கள் கடந்தும் திறக்கப்படவில்லை. இதனிடையே தமிழகத்தில் சில தினங்களாக தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியே வகுப்புகள் எடுத்து வருகின்றன.

இந்த ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"நீங்கள் எல்லாம் குடும்பத்துடன் வீட்டில் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். கடந்த சில மாதங்களாக நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் எல்லாம் நமக்குக் கடுமையான மன உளைச்சலை அளிக்கிறது. அதிலும், கடந்த சில வாரங்களாக சின்னக் குழந்தைகளுக்கு ஆன்லைன் க்ளாஸ் என்ற பெயரில் அய்யயோ... பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எல்லாம் 7.30 மணியிலிருந்து 2.30 மணி, 8.30யிலிருந்து 3.30 மணி என்று 8-9 மணி நேரம் குழந்தைகளுக்கு வகுப்பு வைக்கும்போது அந்த மன உளைச்சலை அவர்களால் எப்படிக் கையாள முடியும்.

மன ரீதியாக, உடல் ரீதியாக பாதிப்பு, கழுத்து, கண் எப்படிப் பாதிக்கப்படும் என்று யோசனை செய்துகொள்ளுங்கள். இத்தனை நாட்கள் அப்பா - அம்மா போன் பார்க்காதே... டிவி பார்க்காதே என்று சொன்னவர்கள், இப்போது போன் பாரு, டிவியைப் பார் என்கிறார்கள். பெரியவர்களால் கூட 8 மணி நேரம் கம்ப்யூட்டரை தொடர்ச்சியாகப் பார்த்தால், வேலை செய்தால் பிரச்சினை வரும் என்று மருத்துவர்கள், மனநல நிபுணர்கள் சொல்லும்போது சின்னக் குழந்தைகள், கல்லூரி படிக்கும் மாணவர்கள் இதை எப்படிக் கையாள்வார்கள்?

புரிகிறது. மாணவர்களுக்கு எதாவது செய்தால் மட்டுமே பள்ளிக் கட்டணம் கேட்க முடியும். என்ன செய்தீர்கள் என்று பணம் கட்டும் பெற்றோர் கேட்பார்கள். ஆகையால், வகுப்புகளை ஆரம்பித்துவிட்டார்கள். பாடத்தை முடிக்க வேண்டும், வருடம் போகிறதே என்று நினைப்பது புரிகிறது. நியாயமாகவும் இருக்கிறது. ஆனால், கண்டிப்பாக அதற்கான தீர்வு இதுவா?

காலம் காலமாக ஒரு நாளைக்கு 8 பாடங்கள் / பாடவேளைகள் என்று பின்பற்றிவிட்டு, மாணவர்கள் பள்ளியில் பழகிய விஷயத்தை இப்போது அப்படியே ஆன்லைன் வகுப்புகளுக்கும் அதே முறையைக் கொண்டு வருவது சரியானதா என்று பேசித் தீர்வு காணுங்கள். ஆசிரியர்களுக்கும் எவ்வளவு பெரிய மன உளைச்சல்?

மற்ற மாநிலங்களில் மற்ற பள்ளிகளில் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் எடுப்பதைப் பதிவு செய்து அதை அப்லோட் செய்கிறார்கள். குழந்தைகள் விருப்பப்படும் நேரத்தில் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்துவிட்டு, இந்தத் தருணத்திற்குள் அதை முடித்தால் போதும் என்று சொன்னால் செய்துவிடப் போகிறார்கள்.

வாரத்திற்கு ஒரு பாடம் அல்லது ஒரு நாளைக்கு ஒரு பாடம் இரண்டு மணி நேரங்கள் மட்டும் என எவ்வளவோ மாற்று வழிகளை யோசிக்கலாம். ஏனென்றால் 8 மணி நேரம் ஒரு குழந்தை கம்ப்யூட்டரை, மொபைல் திரையைப் பார்ப்பதில் கஷ்டங்கள் இருக்கின்றன. மின்சாரக் கட்டணம் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

எல்லோர் வீடுகளிலும் ஒரு குழந்தை ஒரு கம்ப்யூட்டர், அவர்களுக்கான அறையில் உட்கார்ந்து கொண்டு கவனிக்கலாம் எனும் அளவு வசதி இருப்பதில்லை. 3 குழந்தைகள் உள்ள வீட்டிலும் ஒரு கம்ப்யூட்டர்தான் இருக்கும், ஒரு மொபைல்தான் இருக்கும். அப்படியிருக்கும்போது 3 குழந்தைகள் எப்படி வகுப்புகளைக் கவனிக்க முடியும்.

ஆகையால் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள், மன உளைச்சல்கள் இருக்கின்றன. எனவே, அன்பார்ந்த பள்ளி, கல்லூரிகளே இந்த இணைய வகுப்பை எப்படி நடத்தலாம் என்பதை மீண்டும் யோசியுங்கள். இதை ஒரு சாதாரண பெற்றோராகக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x