Last Updated : 04 Jun, 2020 05:15 PM

 

Published : 04 Jun 2020 05:15 PM
Last Updated : 04 Jun 2020 05:15 PM

எங்கே நம் இரக்கம் கொண்ட தலைவர் - ட்ரம்ப்பை சாடிய ட்வைன் ஜான்சன்

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஹாலிவுட் நடிகர் ட்வைன் ஜான்ஸன், தேசம் மண்டியிட்டு, கெஞ்சி, அடிபட்டு, கோபத்தில், வெறுப்பில் இருக்கும்போது அதன் தலைவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எங்கே என்று கேள்வியெழுப்பி வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பின அமெரிக்கர், டெரெக் சாவின் என்ற வெள்ளை இன அமெரிக்க காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டார். ஃப்ளாய்டின் கழுத்தில் தனது கால் முட்டியை வைத்து சாவின் அழுத்த, என்னால் மூச்சு விட முடியவில்லை என்று கெஞ்சியபடியே ஃப்ளாய்ட் உயிரை விட்டார்.

இந்த வீடியோ வைரலாகி அது தற்போது அமெரிக்காவையே புரட்டிப்போட்டு வருகிறது. சாவின் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும், தொடர்ந்து கறுப்பின அமெரிக்கர்கள் இப்படிக் குறி வைக்கப்படுவது குறித்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்துள்ளனர். இதற்கு உலக அளவில் பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது blacklivesmatter இயக்கத்துக்கான தனது ஆதரவாக இந்த வீடியோவைப் பதிவேற்றியிருக்கும் ராக் என்று பிரபலமான நடிகர் ட்வைன் ஜான்சன், தேசிய அளவில் போராட்டங்கள் நடக்கும் இந்த நேரத்தில் ட்ரம்ப் சரியான தலைவராகச் செயல்படாதது குறித்து பேசியுள்ளார். இந்த 8 நிமிட வீடியோவில் எங்குமே அவர் ட்ரம்ப்பின் பெயரைக் குறிப்பிடவில்லையென்றாலும் அவரது நோக்கம் என்ன என்பது தெளிவாகப் புரிகிறது.

"எங்கே போனீர்கள்? எங்கே நமது தலைவர்? நமது தேசம் மண்டியிட்டு, கெஞ்சி, அடிபட்டு, கோபத்தில், எரிச்சலில், கையேந்தி வலியில், தங்கள் குரல் கேட்கப்பட வேண்டும் என்று வேண்டும்போது எங்கே போனார் நம் தலைவர்?

மண்டியிடும் நமது தேசத்துக்குக் கை கொடுத்து, 'நீ எழு, என்னுடன் எழு, ஏனென்றால் நான் உன்னுடன் நிற்கிறேன். உனக்குச் செவிமடுக்கிறேன், நீ பேசுவதைக் கேட்கிறேன். நான் சாகும்வரை, எனது கடைசி மூச்சு வரை, எனது அதிகாரத்தில் என்னால் முடியுமோ எல்லாவற்றையும் செய்வேன் என்று உனக்கு உறுதியளிக்கிறேன். என்ன மாற்றம் வர வேண்டுமோ அதற்குத் தேவையான அனைத்தையும் செய்வேன், சமத்துவத்தைச் சகஜமாக்குவேன், ஏனென்றால் கறுப்பின மக்களின் உயிர் முக்கியம்' என்று சொல்லப்போகும் நமது இரக்கமுள்ள தலைவர் எங்கே ?

கண்டிப்பாக அனைத்து உயிர்களுமே முக்கியம்தான். ஆனால் இப்போது இந்த தருணத்தில், இந்த அதி முக்கியமான, திருப்புமுனையான, புரட்சிகரமான தருணத்தில், நமது தேசம் மண்டியிட்டிருக்கும்போது, நாம் கறுப்பின மக்களின் உயிர் முக்கியம் என்ற வார்த்தைகளைச் சொல்ல வேண்டும்.

நாம் எதிர்நோக்கும் தலைவர்களாக நாம் மாற வேண்டும். நான் மீண்டும் ஒரு முறை கேட்கிறேன். எங்கே போனீர்கள்? தனது நாட்டுக்காக, நாட்டு மக்கள் அனைவருக்காகப் பொறுப்பெடுத்துக்கொள்ளும் இரக்கமுள்ள அந்தத் தலைவர் எங்கே?

என்னவென்று நான் சொல்லட்டுமா, நாங்கள் இங்கே இருக்கிறோம். அனைவரும் இங்கே இருக்கிறோம். மாற்றத்துக்கான செயல்பாடு தொடங்கிவிட்டது. அதை தேசம் முழுவதும் நீங்கள் உணரலாம். மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு நேரம் எடுக்கும். நாம் அடிபடுவோம். ரத்தம் சிந்தப்படும். ஆனால், மாற்றத்துக்கான ஆரம்பம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது".

இவ்வாறு ட்வைன் ஜான்சன் பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x