Last Updated : 03 Jun, 2020 07:49 PM

 

Published : 03 Jun 2020 07:49 PM
Last Updated : 03 Jun 2020 07:49 PM

’’ஸ்கூட்டரில் போனேன், ‘இந்தா, காரை எடுத்துக்கோ’ என்றார் நடிகர் ஜெய்சங்கர்’’ - நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி

மகன் விஜய்யுடன் ஸ்கூட்டரில் சென்றேன்; ’இன்னுமா கார் வாங்கலை’ என்று ஜெய்சங்கர் கார் கொடுத்தார்’’ என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.


நடிகர் ஜெய்சங்கர் குறித்து திரையுலகில் பலரும் நல்லவிதமாகவே சொல்லுவார்கள். உதவும் குணம் கொண்டவர் என்பார்கள். ஏதேனும் விழாவுக்குச் சென்றால், அங்கே பத்து பிள்ளையார் பொம்மையை வாங்கி, அதனை ஏலம் விட்டு, அந்தப் பணத்தை அனாதை இல்லங்களுக்கு வழங்குவார். நம்மையும் அப்படிச் செய்ய வலியுறுத்துவார் என்று நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கூட சமீபத்தில் எடுத்த பேட்டியில் குறிப்பிட்டார்.


சம்பள பாக்கி இருந்தாலும் ஜெய்சங்கர் கறாராகக் கேட்க மாட்டார். அவருக்கு வழங்கப்பட்ட காசோலைகள், பணமில்லை என திரும்பி வந்திருக்கின்றன என்றும் அதனால் கோபப்பட்டு, வழக்குத் தொடுப்பதோ பணம் பெறுவதற்கு முயலுவதோ ஜெய்சங்கர் ஒருபோதும் செய்ததில்லை என்று திரையுலகினர் கொண்டாடுகின்றனர்.
பணமில்லை என திரும்பி வந்த காசோலை மூலம் சரியாக பணம் வந்திருந்தால், மூன்று பங்களா வாங்கியிருக்கலாம் என்பார்கள்.


இன்றைக்கு மிகப்பெரிய உச்சநட்சத்திரமாகத் திகழ்கிறார் நடிகர் விஜய். அவரின் ஒவ்வொரு படமும் கோடிகளில் எடுக்கப்பட்டு பல கோடிகளில் வியாபாரமாகி பலப்பல கோடிகளை வசூலாகக் குவிக்கிறது.


நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், எண்பதுகளில் மிகப்பெரிய இயக்குநராக வலம் வந்தவர். விஜயகாந்த், ரஜினிகாந்த், நிழல்கள் ரவி, ராதிகா, விஜயசாந்தி என ஏராளமானவர்களை இயக்கியவர். மிகப்பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.


இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தன் வாழ்க்கை குறித்து ஒரு நூலில் எழுதியுள்ளதன் ஒரு பகுதி இது:


’’நான் மூன்று படங்கள் இயக்கிய பிறகும் என்னிடம் ஒரு ஸ்கூட்டர்தான். ஒருநாள் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஷோபாவையும் விஜய்யையும் உட்கார வைத்து ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு வந்தேன்.


எங்களுக்குப் பின்னால் காரில் வந்த ஜெய்சங்கர், என்னைப் பார்த்ததும் காரை நிறுத்தி, வீட்டுக்கு வா என்று சொல்லிவிட்டுப் போனார்.


உடனே அவர் வீட்டுக்குப் போனேன்.


அங்கு நின்றிருந்த சிகப்புக் கலர் 7121 என்ற எண்ணைக் கொண்ட ஃபியட் காரைக் காட்டி, ’எடுத்துக் கொண்டு போ’ என்று சொன்னார்.


’என்னிடம் பணம் இல்லை, வேண்டாம்’ என்று மறுத்தேன்.


‘பணமே கொடுக்கவேண்டாம். சும்மா எடுத்துக் கொண்டு போ. உனக்கு மனமில்லை என்றால், எப்போது முடிகிறதோ அப்போது பணத்தைக் கொடு’ என்று சொன்னார் ஜெய்சங்கர்.


வேறுவழியே இல்லை. காரை எடுத்துக் கொண்டு போகவேண்டும். அதற்கு முன் காரே ஓட்டியிருக்காத நான், தைரியமாக காரை ஓட்டிக்கொண்டு வந்தேன். அப்போதும் என்னை நம்பி என்னுடன் வர அவர் தயங்கவில்லை.


அந்தக் காருக்கு மாதம் பத்தாயிரம் ரூபாயாக ஆறுமாதங்களில் அறுபதாயிரம் கொடுத்து அந்தக் கடனைக் கழித்தேன். என் வாழ்க்கையில், நான் முதன்முதலாக கார் வாங்கினேன் என்றால், அது ஜெய்சங்கரிடம் இருந்துதான். ‘மூன்று படம் செய்துவிட்டாய். இன்னுமா கார் வாங்கலை’ என்று என் மீது உண்மையான அக்கறையுடன் கேட்டு, காரும் கொடுத்த ஜெய்சங்கர், அற்புதமான மனிதர்’’ என்று இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் .


இன்று நடிகர் ஜெய்சங்கர் நினைவுதினம் (ஜூன் 3ம் தேதி).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x