Published : 31 May 2020 11:06 AM
Last Updated : 31 May 2020 11:06 AM

சின்னத்திரையைப் போல சினிமா படப்பிடிப்பையும் 60 பணியாளர்களுடன் நடத்த அனுமதிக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு பாரதிராஜா கடிதம்

சின்னத்திரைப் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் சின்னத்திரைப் படப்பிடிப்பு தொடங்கிக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதில் அதிகபட்சமாக 20 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுடன் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது, ஆனால் இது போதாது எண்ணிக்கையை உயர்த்தி அனுமதி அளிக்க வேண்டும் என்று மீண்டும் சங்கங்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் 20 என்பதை 60 ஆக அதிகரித்து நேற்றைய தினம் (30.05.20) தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்பை 60 பணியாளர்களுடன் நடத்த அனுமதி கொடுத்ததைப் போல சினிமாவுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தமிழக முதல்வர் பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமிக்கு பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

வணக்கம் முதல்வர் அவர்களுக்கு,

படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.

விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. நன்றிகள்.

அதேசமயம் சினிமாவும் முடங்கிப்போய் கிடக்கிறது. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடுத்த நிலை என்ன எனத் திணறி வருகிறோம்.

பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள். முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாது திகைக்கின்றனர். பணம் கொடுத்தவர்களும் போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாததால் நஷ்டப்பட்டுப் போய் உள்ளனர். சினிமாவை நசிந்துவிடாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

முதல்வர் அவர்கள் தயைகூர்ந்து சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்துள்ளதைப் போன்ற ஒரு அனுமதியை சினிமாவுக்கும் படப்பிடிப்பைத் தொடங்க கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அரசு வரையறுக்கும் கட்டுப்பாடு , பாதுகாப்பு முறைகளுடன் இயங்குவோம் என உறுதியளிக்கிறோம். இதன்மூலம் சிறுபடங்கள் படப்பிடிப்பிற்குச் செல்ல ஏதுவாக அமையும்.

திரையரங்குகளும் தங்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி திறந்து செயல்பட திரையுலகினர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்ன்

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x