Published : 30 May 2020 10:53 AM
Last Updated : 30 May 2020 10:53 AM

அஜய் தேவ்கன் படத்துக்காக போடப்பட்ட 16 ஏக்கர் பிரம்மாண்ட செட் பாதியில் அகற்றம்

அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் ‘மைதான்’ படத்துக்காக 16 ஏக்கர் நிலப்பரப்பில் போடப்பட்ட செட் அகற்றப்பட்டது.

கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் திரையரங்குகள் மூடப்பட்டு, படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சினிமா பிரபலங்கள், திரைத்துறை பணியாளர்கள் அனைவரும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் தயாரிப்பாளர்களுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜய் தேவ்கன் நடிப்பில் கால்பந்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் ‘மைதான்’. இப்படத்தை அமித் ஷர்மா இயக்கி வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்துக்காக மும்பையில் 16 ஏக்கரில் பிரம்மாண்ட செட் போடப்பட்டது. ஆனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால் ‘மைதான்’ படவேலைகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வரும் ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து மகாராஷ்டிராவில் பருவமழை தொடங்கவிருப்பதால், ‘மைதான்’ படத்துக்காக போடப்பட்ட செட் அகற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறியிருப்பதாவது:

மும்பையில் 16 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட செட் ஒன்றை அமைத்திருந்தோம். அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது தான் கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தியது. தற்போது இரண்டு மாத காலமாக அங்கு படப்பிடிப்பு நடக்காத நிலையில் வரவிருக்கும் பருவமழை காரணமாக அந்த செட் தற்போது அகற்றப்பட்டுள்ளது. மீண்டும் இந்த செட்டை அமைக்க குறைந்தது இரண்டு மாதங்களாவது எடுக்கும். செப்டம்பரில் செட் அமைக்க தொடங்கினால் படப்பிடிப்பு ஆரம்பிக்க நவம்பர் ஆகலாம்.

நல்லவேளையாக எல்லா உள்ளரங்கு காட்சிகளையும், சில வெளிப்புற காட்சிகளையும் லக்னோ மற்றும் கொல்கத்தாவில் படமாக்கிவிட்டோம்.

இவ்வாறு போனி கபூர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x