Published : 27 May 2020 02:15 PM
Last Updated : 27 May 2020 02:15 PM

கரோனா ஊரடங்குக்குப் பின் சினிமாவின் எதிர்காலம் என்ன? - இயக்குநர் வெற்றிமாறன் கணிப்பு

கரோனா ஊரடங்கிற்குப் பின் சினிமாவின் எதிர்காலம் என்ன என்பது குறித்துப் பேட்டியொன்றில் இயக்குநர் வெற்றிமாறன் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா ஊரடங்கில் அனைவருமே நேரலையில் பேட்டி மற்றும் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்கள். அவ்வாறு தனியார் யூடியூப் இணையதளம் ஒன்று ஒருங்கிணைத்த கலந்துரையாடலில் பயிற்சியாளர் பாசு ஷங்கர், இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினேஷ் கார்த்திக் மற்றும் வெற்றிமாறன் இருவருக்குமே உடற்பயிற்சியாளராக பாசு ஷங்கர் இருந்து வருகிறார். இந்தக் கலந்துரையாடலில் கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் திரையுலகம் எப்படி இயங்கும் என்பது குறித்துப் பேசியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

அந்தப் பகுதி:

தினேஷ் கார்த்திக்: கோவிட் பிரச்சினையால் திரைத்துறையும் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்போது ஓடிடி தளங்களில் படங்களை நேரடியாக வெளியிடுவது குறித்தும் சில சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

வெற்றிமாறன்: உடனடியாக என்ன நடக்கும் என்றால், குறைவான எண்ணிக்கையில் நடிகர்களை, தொழில்நுட்பக் கலைஞர்களை, பட்ஜெட்டை வைத்துப் படங்களை எடுக்க ஆரம்பிப்போம். குடும்பத்தில், வீட்டுக்குள் நடக்கும் கதைகளாக இருக்கும். ஏனென்றால் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்களை ஒரே இடத்தில் வைத்து வேலை செய்ய முடியாது.

சமூக விலகல் இடைவெளி 3 அடி என்றார்கள், இப்போது 6 அடி என்கிறார்கள். படப்பிடிப்புத் தளம் என்று வந்துவிட்டால் அங்கு சமூக விலகலுக்கு, தனி மனிதர்களுக்கு இடையே இடைவெளிக்கு வாய்ப்பே கிடையாது. ஒளிப்பதிவாளருக்குப் பக்கத்தில் ஃபோகஸ் புல்லர் இருந்துதான் ஆக வேண்டும். நெருக்கமான காட்சிகளை எடுக்கும்போது நடிகர்கள் பக்கத்தில் இருந்துதான் ஆக வேண்டும். எனவே ஒரு திரைப்படப் படப்பிடிப்பைத் திட்டமிடுவது சிக்கலான விஷயமாகிவிட்டது.

அதே நேரம் திரையரங்குகளும் நிறைய சிக்கல்களை எதிர்கொள்ளும். 1000 பேர் உட்காரக் கூடிய திரையரங்கில் இனி 250 பேர் தான் உட்கார முடியும். சமூக விலகல் காரணமாக இரண்டு பேருக்கு நடுவில் ஒரு இருக்கை காலியாக இருக்க வேண்டும். இரண்டு வரிசைகளுக்கு நடுவில் ஒரு வரிசை காலியாக இருக்க வேண்டும். அப்படித்தான் திரையரங்குகள் இயங்க ஆரம்பிக்க வேண்டும். திரையரங்குக்கு வர நகரங்களில் மக்களிடையே பயம் இருக்கும். டவுன், கிராமங்களில் அவ்வளவு பயப்படமாட்டார்கள் என நினைக்கிறேன்.

ஒருசில நாயகர்கள் மட்டும் தான் திரையரங்க வெளியீட்டுக்கான படங்களில் பணியாற்றுவார்கள். அவர்களை இயக்க சில இயக்குநர்கள் இருப்பார்கள். இதை நான் நீண்ட காலமாகக் கூறி வருகிறேன். மற்ற அனைவரும் வேறொரு ஊடகத்தை, தளத்தைச் சார்ந்துதான் இருக்க வேண்டியிருக்கும். இந்தக் கரோனா நெருக்கடி, இயக்குநர்கள் மீது, திரையரங்க உரிமையாளர்கள் மீது, ஒட்டு மொத்த திரைத்துறை மீதும் அழுத்தத்தை ஏற்படுத்தவுள்ளது. ஓடிடி தளங்களுக்கான வெளியீடுகள் அதிகமாகும்.

இவ்வாறு வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x