Published : 26 May 2020 09:46 PM
Last Updated : 26 May 2020 09:46 PM

'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனங்களுக்கு கெளதம் மேனன் பதில்

'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படம் தொடர்பாக வெளியாகியுள்ள விமர்சனங்களுக்கு கெளதம் மேனன் பதிலளித்துள்ளார்.

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்துக்குக் கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து, 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படத்துக்கான கதையை எழுதி வைத்துள்ளார் கெளதம் மேனன். கரோனா ஊரடங்கினால், அந்தக் கதையிலிருந்து ஒரே ஒரு காட்சியை மட்டும் எடுத்து குறும்படமாக இயக்கி வெளியிட்டுள்ளார்.

'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற பெயரில் 12 நிமிடங்கள் கொண்ட இந்தக் குறும்படத்தில் சிம்பு - த்ரிஷா இருவரும் நடித்துள்ளனர். தொலைபேசி வாயிலாக நிகழும் உரையாடலாக இந்தக் குறும்படம் அமைந்திருந்தது. இதில் இடம்பெற்றுள்ள வசனங்களை வைத்து ஒரு விவாதமே சமூக வலைதளத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், பலரும் மீம்ஸ்களும் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் கூறியிருப்பதாவது:

"இந்தப் படம் எடுத்தது, நீங்களும் உங்கள் முன்னாள் காதலியை அழைத்துப் பேசுங்கள் என்று சொல்வதற்காக அல்ல. இது ஜெஸ்ஸி - கார்த்திக்கின் கதை. அவ்வளவுதான். எப்போதுமே என் படத்தைப் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், சுமாராக இருக்கிறது என்பவர்கள் இருந்திருக்கிறார்கள். 'விண்ணைத்தாண்டி வருவாயா' வெளியாகும் போது ஒரு விமர்சனத்தில், இந்தப் படம் பார்ப்பது, சுவரில் ஓவியத்தின் ஈரம் காய்வதைப் பார்ப்பது போல இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சில வருடங்கள் கழித்து அந்தப் படம் கல்ட் என்று என்னிடம் சொன்னார்கள். எந்த விமர்சனத்தையுமே நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் எண்ணம், ஊரடங்கின் போது இரண்டு கதாபாத்திரங்கள் பேசுவதைக் காட்ட வேண்டும் என்பதே. மேலும் இது நான் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு திரைக்கதையிலிருந்து ஒரு காட்சி தான்.

எனக்கு உண்மையில் கலவையான விமர்சனங்கள் பற்றி கவலை இல்லை. ஒரு சிலர் தான் படத்தை வசை பாடுகிறார்கள். சிம்புவைக் கேட்டால், அந்த மீம் எல்லாம் அவருக்கெதிராக யாரோ காசு கொடுத்து ஆள் வைத்து செய்கிற வேலை என்கிறார். எனக்குத் தெரிந்த பெரிய பெரிய இயக்குநர்கள் எல்லோருமே கலவையான விமர்சனங்கள் வருவது நல்லது என்றே கருதுகிறார்கள்.

படம் குறித்து ஏதோ விவாதம் நடக்கிறது என்று அர்த்தம். அதற்காக தானே படம் எடுக்கிறோம். இதைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதே எனக்குப் பெரிய விஷயம் தான். ஏனென்றால் நான் ’பிகில்', 'சர்கார்' போன்ற படம் எடுக்கவில்லை. குறும்படம் எடுத்திருக்கிறேன். ஏதோ ஒரு வகையில் அது மக்களைச் சென்றடைந்திருக்கிறது"

இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x