Published : 25 May 2020 08:23 PM
Last Updated : 25 May 2020 08:23 PM

கேரளாவில் இடித்துத் தள்ளப்பட்ட தேவாலய அரங்கம்: திரையுலகினர் கடும் கண்டனம்; முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

கேரளாவில் படப்பிடிப்புக்காகப் போடப்பட்டிருந்த கிறிஸ்தவ தேவாலய அரங்கை சில வலது சாரி அமைப்புகள் சில சேர்ந்து இடித்துத் தள்ளின.

டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகும் 'மின்னல் முரளி' என்ற படத்துக்காக கேரளாவின் காலடி பகுதியில், பெரியார் ஆற்றங்கரையில், உரிய அனுமதி பெற்ற பின் ஒரு பெரிய கிறிஸ்தவ தேவாலய அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்குக்கு எதிரில் மகாதேவன் கோயில் இருந்ததாகவும், இந்த அரங்கு அமைப்பதற்கு ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்ததாகவும் அந்த்ராஷ்டிர இந்து பரிஷத் என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் ஹரி தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

மேலும், "கொடுத்த புகார்கள் எதுவும் பலனளிக்கவில்லை. நமக்குக் கெஞ்சும் பழக்கம் இல்லை என்பதால் இடிக்க முடிவெடுத்தோம். தன்மானம் காக்கப்பட வேண்டும். இதை இடித்த அனைத்து ராஷ்ட்ரிய பஜ்ரங் தள தொண்டர்கள் மற்றும் அமைப்பின் மாநிலத் தலைவருக்கு மகாதேவன் அருள்புரிவார்" என்று ஹரி குறிப்பிட்டுள்ளார்.

'மின்னல் முரளி' படத்தின் இயக்குநர் பேஸில் ஜோசஃப், "சிலருக்கு இது நகைச்சுவையாக, விளம்பரமாக, அரசியலாக இருக்கலாம். எங்களுக்கு இது கனவு. ஊரடங்குக்குச் சற்று முன்புதான் அந்த அரங்கம் அமைக்கப்பட்டது. இந்தப் படம் சாத்தியப்பட இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்தோம், பாடுபட்டோம்.

கலை இயக்குநரும் அவரது அணியும் பல நாட்கள் உழைத்து இந்த அரங்கத்தைக் கட்டினர். தயாரிப்பாளர் கஷ்டப்பட்டு உழைத்த பணம் செலவு செய்யப்பட்டது. தேவைப்பட்ட அனுமதி அனைத்தும் பெற்ற பின்தான் இந்த அரங்கம் அமைக்கப்பட்டது. எல்லோரும் ஒற்றுமையுடன் நிற்க வேண்டிய இந்த வேளையில் அந்த அரங்கம் இடிக்கப்பட்டுள்ளது. இது நடக்கும் என என் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாகக் கேரளாவில். இதுகுறித்து நான் அதிர்ச்சியும், கவலையும் கொண்டுள்ளேன்" என்று பகிர்ந்துள்ளார்.

கேரளாவில் மதவாத சக்திகள் விளையாட முடியாதென்றும், அரங்கை இடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். பெரும்பாவூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாயகன் டொவினோ தாமஸ், தயாரிப்பாளர் சோஃபியா பால், கேரள திரைப்பட ஊழியர்கள் சங்கம், நடிகை ரீமா கல்லிங்கல், இயக்குநர்கள் ரஞ்சித் சங்கர், ஆஷிக் அபூ, நடிகர் அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x