Published : 25 May 2020 08:11 PM
Last Updated : 25 May 2020 08:11 PM

மிஹீகா பஜாஜ் உடன் காதல் மலர்ந்தது எப்படி? - மனம் திறக்கும் ராணா

மிஹீகா பஜாஜ் உடன் காதல் மலர்ந்தது எப்படி என்று ராணா கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் முக்கிய நடிகராக வலம் வருபவர் ராணா. இவர் பிரபலத் தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன். இவரது தாத்தா ராமாநாயுடுவும் தெலுங்குத் திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர். 'பாகுபலி' திரைப்படத்தின் வில்லனாக நடித்ததன் மூலம் உலக அளவில் ராணா பிரபலமானார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ்ஜை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ராணா தனது சமூக வலைதளப் பக்கங்களில் கடந்த வாரம் அறிவித்தார். மிஹீகா, இன்டீரியர் டிஸைனராக உள்ளார். சொந்தமாக நிகழ்ச்சி மேலாண்மை (event management) நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார்.

மே 21 ஆம் தேதி அன்று குடும்பத்தினர் மற்றும் பங்கேற்க, இவர்களின் நிச்சயார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை ராணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். திருமணத் தேதி குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த வாரம், நடிகர் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராணா நேரலையில் பேசினார். இதில் ராணா எப்படி மிஹீகாவைச் சந்தித்தார், திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி லட்சுமி மஞ்சு ராணாவிடம் கேட்டார்.

இந்தப் பேட்டியில் ராணா பேசியதாவது.

"மிஹீகா, ஆஷ்ரிதாவுடன் படித்தவர். (ஆஷ்ரிதா நடிகர் வெங்கடேஷின் மூத்த மகள்). எனக்கு மிஹீகாவை பல வருடங்களாகத் தெரியும். என் வீட்டுக்குப் பக்கத்தில்தான் அவர் வீடும் இருக்கிறது. அவர் வட இந்தியாவைச் சேர்ந்த குடும்பம். ஆனால் மிஹீகா ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். என் குடும்ப நண்பர். மும்பையில் இருக்கும் என் நண்பர்கள் கூட்டத்துக்கு மிஹீகாவும் நண்பர். இவ்வளவு வருடங்கள் பக்கத்தில்தான் இருந்தார். ஆனால் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது ஊரடங்கு ஆரம்பிப்பதற்கு சற்று முன்தான்.

திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது இப்போதுதான். அப்படியென்றால் அவர் ஏதோ சரியான விஷயத்தைச் செய்திருக்கிறார் என்று தானே அர்த்தம். அப்படியே அந்த வேகத்தில் பேசிவிட்டேன். நல்ல விஷயங்கள் நடக்கும்போது, அது ஏன், எப்படி என்றெல்லாம் நான் கேட்கமாட்டேன். அதனால் நிறைய யோசிக்கவில்லை.

திருமணம் பற்றி மிஹீகாவிடம் கேட்பதற்கு முன் வரை ஒரு நாள் முழுவதும் அதுபற்றி யோசித்தேன். ஆனால் ஒரு விந்தையான காலகட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறேன் என நினைக்கிறேன். சில மாதங்களுக்கு முன் அவரிடம் மீண்டும் நட்பு உருவானது. தொடர்ந்து என்னால் அவருடன் இருக்க முடியும் என்று உணர்ந்தேன்.

நான் என்ன கேட்கப்போகிறேன் என்பது அவருடன் நான் போனில் பேசும்போதே அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால் நான் அவரை நேராகச் சந்தித்துப் பேசினேன். எனக்கு அப்போது பதற்றமாக, பயமாக இல்லை. நிறைய பார்த்தாகிவிட்டது, வளர்ந்துவிட்டேன். அதனால் இதைப் பற்றிப் பேசும்போது தயக்கமில்லை. நான் கேட்டவுடன் மிஹீகா முதலில் ஆச்சரியப்பட்டார், பின் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.

என் பெற்றோரும் சகோதரியும் இந்த விஷயத்தைக் கேட்டு முதலில் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அப்படியே அது சந்தோஷமாக மாறியது. ஏனென்றால் அவர்கள் நீண்ட காலமாக என் திருமண முடிவுக்குக் காத்திருந்தனர். எனவே அவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சிதான்.

என்னைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நேர்மையாக, அர்ப்பணிப்புடன் ஒருவருடன் இருப்பது முக்கியம். அப்படி நான் இருக்க முடிவு செய்தது இதுதான் முதல் முறை. மிஹீகாதான் எனக்குச் சரியானவர் என்று எனக்குத் தோன்றியது. ஒரு நபர், அவரது குணம்தான் அவரைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்க வைக்கிறது".

இவ்வாறு ராணா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x