Published : 24 May 2020 09:19 PM
Last Updated : 24 May 2020 09:19 PM

சதவீத அடிப்படையில் சம்பள முறை: இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி வரவேற்பு

சதவீத அடிப்படையில் சம்பள முறை குறித்து இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சியாக சதவீத அடிப்படையில் சம்பள முறையை வைத்துப் படமொன்று தயாராகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ள இந்தப் படத்தில் சத்யராஜ் நாயகனாக நடிக்கவுள்ளார். பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட சிலர் கவுரவக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஆர்.பி.செளத்ரி மற்றும் திருப்பூர் சுப்பிரமணியம் இணைந்து திரையுலகினர் மக்களிடையே க்ரவுட் ஃபண்டிங் முறையைப் பின்பற்றித் தயாரிக்கிறார்கள்.

இந்த முயற்சி தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து 'ராட்டினம்', 'எட்டுத்திக்கும் மதயானை' ஆகிய படங்களின் இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.எஸ்.தங்கசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"சமீபகாலமாக தமிழ் சினிமா ஏற்கெனவே சந்தித்து வரும் பிரச்சினைகள் போதாதென்று, கரோனாவும் தன் பங்குக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மூடப்பட்ட திரையரங்குகள், நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் என்று பல சிக்கல்கள். இந்தச் சிக்கலான சூழ்நிலையில் நேற்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் ஒரு எளிய தீர்வை முன்வைத்தது மிகவும் வரவேற்புக்குரியது. தனது இந்த முன்னெடுப்பிற்கு பிரமிட் நடராஜன் சாரும், ஆர்.பி. செளத்ரி சாரும் காரணமாக அமைந்ததாக தனது பேச்சில் குறிப்பிட்டார். அவர்களுக்கும் மிக்க நன்றி. திருப்பூர் சுப்ரமணியன் முன்வைத்த தீர்வு சதவீத அடிப்படையில் சம்பளம், சிறுசிறு பங்குதாரர்கள், விற்பனையில் பங்கு, வெளிப்படையான டிக்கெட் விற்பனை மற்றும் வெளிப்படையான நிதி நிர்வாகம் என்பதே.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் சதவீத அடிப்படையில் சம்பளம். யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பது படத்திற்குப் படம் மாறுபடும். அதை ஒவ்வொரு பட ஆரம்பத்திலும் பேசி முடிவு செய்து கொள்ளலாம். சம்பளம் முடிவு செய்த பிறகு வெளிப்படையான நிதிநிலை என்பதால் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை. நடிகர்களுக்கு தங்கள் பங்கு கிடைத்துவிடும். சதவீத அடிப்படையில் சம்பளம் என்பதால் தயாரிப்பாளர்கள் பல படங்களை எடுக்க ஆர்வத்துடன் முன்வருவார்கள். நிறைய படங்கள் வெளிவரும். வாய்ப்புகள் அதிகம் ஆவதால் நடிகர்கள் தங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கலாம்.

ஆப்ஷன்கள் அதிகமானால் அதன் பயன் நுகர்வோருக்குத்தானே! இங்கு நடிகர்களே நுகர்வோர்கள். பல படங்களில் நடிப்பதால் வருவாய் பெருகுவதற்கும் இது ஒரு அருமையான வாய்ப்பு. அதே நேரத்தில் பல புது தயாரிப்பாளர்களையும் ஊக்கம் பெற, பயப்படாமல் ஆர்வமுடன் வர இது வழிவகை செய்கிறது. இது நடிகர்கள் மட்டும் இல்லாமல், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், துணை நடிகர்கள் என ஆரம்பித்து அனைவருக்கும் வருமானம் பல்கி, பெருகி அவர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பணியாற்ற அற்புதமான பணி சூழ்நிலையை அளிக்கிறது. இதன் வழியாக படைப்பின் தரமும் மேம்படும்.

யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் அனைவரும் வாழ வழி செய்யும் சதவீத அடிப்படையிலான சம்பளத்தை சிறிய, பெரிய நடிகர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். பெரிய நடிகர்கள் இதற்கு ஒரு முன்மாதிரியாக இருந்து நடித்துக் கொடுத்தால் அவர்கள் சினிமாவை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வில் ஒளி ஏற்றுகிறார்கள். தங்களை வளர்த்த சினிமாவிற்கும் நன்றிக்கடன் ஆற்றுகிறார்கள், ரசிகர்கள் தங்களை பல படங்களில் கண்டு மகிழ்வதற்குமான வாய்ப்பினையும் வழங்குகிறார்கள்.

அடுத்து சிறுசிறு பங்குதாரர்கள். அடுத்தடுத்த சினிமாக்கள் வெளிவருவதற்கு மிகப்பெரிய தடையே முதலீடு தான். ஒரு படம் தோல்வி அடைந்தால் அதன் தயாரிப்பாளர் மொத்தமாக முடங்கும் அவலம் இப்போது இருக்கிறது. சினிமா துறைக்கு வருவதற்கு பலரும் அஞ்சக் காரணம் அது எதிர்பார்க்கும் பெரிய அளவிலான முதலீடுதான். அது இவ்வாறு சிறு சிறு பங்குகளாக பிரிக்கப்படும்போது மிகப்பெரிய உதவியாக அமையும். நலிந்த நிலையில் இருக்கும் பல தயாரிப்பாளர்களுக்குப் பேருதவியாக இது அமையும். முதலீட்டிற்கு ஏற்ப பங்கு பிரித்து அளிக்கப்படுகிறது. நஷ்டமும் பெரிதாக அவர்களைப் பாதிக்காது. ஒரு படம் தோல்வி அடைந்தாலும் அடுத்த முயற்சியில் ஈடுபடுவார்கள். இதில் சில சிக்கல்கள் இருக்கலாம், வரலாம். அதைக் களைவதற்கு ஒரே வழி, இது போன்ற முறையில் படங்கள் தொடர்ந்து தயாரிப்பதே. அப்போதுதான் குறைகளை அடையாளம் கண்டு தீர்க்க முடியும்.

வெளிப்படையான டிக்கெட் விற்பனை காலத்தின் கட்டாயம். ஒரு படத்தின் உண்மையான கிளைமாக்ஸ் என்பது தியேட்டர் டிக்கெட் விற்பனையில்தான் இருக்கிறது. அதுவும் இன்டர்நெட் உலகில் எதுவும் நொடியில் நம் கைகளில் கிடைக்கும்போது இது எப்போதோ செய்து இருக்கப்பட வேண்டிய விஷயம். கம்ப்யூட்டர் சர்வரில் இணைத்துவிட்டால் உட்கார்ந்த இடத்திலிருந்து கொண்டே தமிழகம் முழுவதும் உள்ள டிக்கெட் விற்பனையை நிமிடத்திற்கு நிமிடம் பார்க்க முடியும். இதனால் ஒரு படத்தின் வெற்றி/தோல்வி, லாப/நஷ்டம் துல்லியமாகக் கணக்கிடப் படுகிறது.

அதேபோல் திருப்பூர் சுப்ரமணியன் சொல்லும் இன்னொரு விஷயம் வெளிப்படையான நிதி அறிக்கை, அதாவது அனைத்து பணப் பரிமாற்றங்களும் வங்கியின் வழியே மட்டுமே. இந்த வெளிப்படைத்தன்மை படத்தில் முதலீடு செய்தவர்கள் ஆரம்பித்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை எல்லோருக்கும் சரியான தகவல் கிடைக்கப் பெறுகிறது. அவரவர் தங்கள் நியாயமான பங்கைப் பெற்றுக் கொள்ள வழி செய்யப்படுகிறது.

மேலே சொன்ன அனைத்துச் சீர்திருத்தங்களும் இதற்கு முன்பே பல வருடங்களாகப் பலரால் பேசப்பட்டவைதான். இரண்டு படங்களின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகிய நானும் சக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிக நண்பர்களிடம் பல சந்தர்ப்பங்களில் இதை எல்லாம் வலியுறுத்தி இருக்கிறேன். இந்தப் புதிய முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் பற்றி ஏற்கெனவே நிறைய விவாதித்து இருக்கிறோம். இந்தப் பேரிடர் காலத்தில் இதற்கு ஒரு வழி அமைந்ததாகவே நான் கருதுகிறேன். எத்தனையோ வருடங்களாக நான் இதுசம்பந்தமாக பலரிடம் பேசியும் வேண்டுகோள் விடுத்தும், ஏன் அந்த முயற்சியில் நானும் இறங்கியும் அடுத்த கட்டத்திற்கு நகராமல் வெறும் பேசுபொருளாகத் தேக்க நிலையிலேயே இருந்தது. சரி, எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும் அல்லவா!

இது வெறும் செய்தியாக மட்டும் கடந்துபோகாமல் வெற்றிகரமாக நடத்தப்பட வேண்டுமே என்பதுதான் சினிமாவை நேசிக்கும் அனைவரது எதிர்பார்ப்பும், ஆதங்கமும்.நேர்மையான முயற்சிகள் வெற்றிபெற வேண்டும்".

இவ்வாறு கே.எஸ்.தங்கசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x