Published : 19 May 2020 12:51 PM
Last Updated : 19 May 2020 12:51 PM

கிண்டல் செய்வார்களோ? தயங்கிய அஜித்; கே.எஸ்.ரவிகுமார் கொடுத்த உத்தரவாதம்

'வரலாறு' படத்தின் பெண்ணியம் கலந்த கதாபாத்திரத்துக்கு அஜித் தயங்கியதையும், பின்பு தான் அளித்த உத்தரவாதம் குறித்தும் கே.எஸ்.ரவிகுமார் பேசியுள்ளார்.

2006-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி வெளியான படம் 'வரலாறு'. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் அஜித், அசின், கனிகா, சுஜாதா, ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் அஜித் 3 கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதில் ஒரு கதாபாத்திரம் பெண்ணியம் கலந்து இருக்கும். அதில் நடித்தால் கிண்டல் செய்துவிடுவார்களோ என்று அஜித்துக்கு இருந்த பயத்தையும், பின்பு தான் அளித்த உத்தரவாதம் குறித்தும் கே.எஸ்.ரவிகுமார் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

" 'வரலாறு' படத்தில் அஜித் நடிப்பை நிறையப் பேர் பாராட்டினார்கள். 'வில்லன்' படம் பண்ணும்போதே அவர் பெரிய ஹீரோ. அதற்குப் பிறகு 2- 3 படங்கள் கழித்துதான் 'வரலாறு' பண்றோம். பெண்ணியம் கலந்த கதாபாத்திரம் பண்ணும்போது யாரும் கிண்டல் செய்துவிட மாட்டார்களே என்று அஜித்துக்கு ஒரு சந்தேகம் இருந்தது.

அப்போது எடுத்தவுடனே அந்தக் கதாபாத்திரத்தைக் காட்டவில்லை. பணக்கார அப்பா, ஜாலியான பையன், இடைவேளையில் ஒரு வில்லனைக் காட்டுகிறோம். இடைவேளைக்குப் பிறகுதான் பெண்ணியம் கலந்த அஜித்தைக் காட்டவுள்ளோம். ஆகையால் கிண்டல்கள் வராது என்று விளக்கமளித்தேன். ஒரு போட்டி வைத்துக் கொள்வோம். உனக்கு எதிரிகள் இருப்பார்கள். அவர்கள் இந்தப் படத்தைப் பார்க்கும்போது கூட இந்தக் கதாபாத்திரத்தைக் கிண்டல் செய்து திரையரங்கில் பேசமாட்டார்கள். இது உண்மை என்று சொன்னேன். நான் சொன்னதைப் போலவே அவர் சேரிலிருந்து எழுந்தவுடன் ப்ளாஷ்பேக், பின்பு ஒரு பிரமாதமான பாடல் என்றவுடன் அனைவருமே கைதட்டி ரசித்தார்கள்.

பரதநாட்டியம் மிகவும் கடினம். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் 2-3 முறை பயிற்சி செய்து நடனமாடிவிட்டார் அஜித். அவர் வேலை என்று வந்துவிட்டால் அதில் முழுமையாக இறங்கிவிடுவார். நாம் இப்படி நடந்துவர வேண்டும் என்று நடந்து காட்டினால் போதும். அப்படியே நடந்துவருவார். அவருடைய அழகு அவருக்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட். "எப்படி சார் இந்த இமேஜ் இருக்கும் போது இப்படியொரு கதாபாத்திரம் பண்ணினார்" என்று பலரும் படம் பார்த்துவிட்டுச் சொன்னார்கள். அதற்குப் பிறகு பலரும் பெண்ணியம் கதாபாத்திரம் பண்ணினார்கள். ஆனால், நல்ல ஒரு இமேஜில் இருக்கிற ஹீரோ பெண்ணியக் கதாபாத்திரத்தில் நடித்தது அஜித்தான். அதில் அவர் உடல் அசைவுகள் மட்டுமே பெண்ணியம் கலந்து இருக்கும்".

இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x