

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக அரசுக்கு விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் என்பது சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்னும் குறையவில்லை. தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள 4-வது ஊரடங்கில் கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் கரோனா அச்சுறுத்தலிலிருந்து தமிழகம் முழுமையாக மீளவில்லை. ஆனால், ஜூன் 1-ம் தேதியிலிருந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதற்கான அட்டவணையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக விவேக் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மன இறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப் பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயை செய்து பரிசீலிக்கவும்"
இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.