Published : 17 May 2020 03:35 PM
Last Updated : 17 May 2020 03:35 PM

'சிவாஜி' பாடல் படப்பிடிப்புக்காக இடம் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி

'சிவாஜி' படத்தின் பாடலுக்காக வெளிநாட்டில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி குறித்து இயக்குநர்கள் ஜே.டி.-ஜெர்ரி தெரிவித்துள்ளனர்.

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் அமைந்த முதல் படம் 'சிவாஜி'. ஏவிஎம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்தே இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து 'எந்திரன்', '2.0' எனப் பயணித்தது.

இந்தப் படத்தில் 'ஒரு கூடை சன்லைட்' பாடல் மிகவும் பிரபலம். 'சிவாஜி' படம் வெளியான சமயத்தில் இந்தப் பாடலில் ரஜினிக்கு போடப்பட்ட மேக்கப் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி குறித்து இயக்குநர்கள் ஜே.டி. - ஜெர்ரி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:

"இயக்குநர் ஷங்கருடன் சில நாட்கள். 2006 வருடம் ஜனவரி மாதம். ஒரு காலை இயக்குநர் ஷங்கரின் தி.நகர் அலுவலகத்தின் உயரமான கண்ணாடி ஜன்னல் வழியே தோட்டத்தைப் பார்த்தபடி, "நம்ம ஸ்டைல் பாடலுக்கு படுஸ்டைலான இப்படி சில இடங்கள் என்றபடி ஸ்பெயின் நகரின் பில்போ நகரின் GUGGENHEIM அருங்காட்சியகத்தைக் காட்டினார். உலகின் நீண்ட அருங்காட்சியகம். அதுவொரு நவீன கட்டிடக்கலை அதிசயம் என்று சொல்லலாம்.

டைட்டானியம் மற்றும் கண்ணாடிகள் கொண்டு செய்யப்பட்ட வினோதக் கலை வடிவம். இதே மாதிரி அட்டகாசமாய் இன்னும் 2 இடங்கள் வேண்டும். வேண்டும் என்றால் வேண்டும். கஷ்டம் என்றால் கண்டிப்பாக வேண்டும். இதுதான் ஷங்கர்.

ஏவிஎம் தயாரிப்பு. 'சந்திரமுகி' வெற்றிக்குப் பின் ரஜினி சார், 'அந்நியன்' வெற்றிக்குப் பின் ஷங்கர் சார். ஏ.ஆர்.ரஹ்மான், கே.வி.ஆனந்த், தோட்டா தரணி, சுஜாதா இவர்களுடன் உதவியாக இயக்குநருக்கு உறுதுணையாக நாங்கள்.

அத்தனை பேரும் தொடர் வெற்றியாளர்கள். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் காம்பினேஷன். 'சிவாஜி' படத்துக்கான படப்பிடிப்பு தேவையைக் கேட்டவுடன் ஏவிஎம் குகன் சார் குதூகலமானார். அது தொடர்பான இடங்கள் தேர்வு ஆய்வுக்குத் தயாரானோம். ஏவிஎம் குகன் சார் படத்துக்குத் தேவையானதைச் செய்ய எப்போதும் தயாராய் இருப்பார்.

உலகம் முழுவதும் சுத்தியிருக்கும் அனுபவம் வாய்ந்த பயணி ஏவிஎம் குகன் சார். உற்சாகமான மனிதர். எனக்கு இந்தப் பயணத்தில் வசதியான பயணம் பற்றிய பல சூட்சுமங்களை சகோதரனைப்போல் கற்றுத்தந்தார். இணையத்தைத் தேடி, புத்தகங்களை புரட்டி, ஸ்பெயின் தூதரகத்தில் விசாரித்து உள்ளூர் வழிகாட்டி உதவியுடன் பயணம் தயாரானது.

வேலையோடு வேலையாகத் தொடங்கிய பயணம் இப்படி பிரமாதமான அனுபவமாக அமையும் என்று அப்போது தெரியாது. 12 நாட்கள் பயணம். ஸ்பெயின் கூடவே இத்தாலியும். ஸ்பெயின் உலகப் பணக்காரர்களுக்கு முக்கியமாக ஹாலிவுட்காரர்களுக்கு பிடித்த சுற்றுலா இடம், ரொம்பவே விலை அதிகம். பயணம், உணவு, தங்குமிடம் என்று யூரோக்கள் தண்ணீராய் கரையும். வாய்க்குமெனில் தவறவிடக்கூடாத ஒரு இடம்.

நினைவுச் சின்னங்கள், பழைமையான அரண்மனைகள், சர்ச்சுகள், மசூதிகள் கூடவே நவீன கட்டிடக்கலை. மொத்த நாடே கலைப் பொக்கிஷம். ஸ்பெயின் என்றால் புல் ரிங், ஓபேரா ஹால், ஆலீவ் தோட்டங்கள் அதைத்தாண்டிப் பரந்த நிலப்பரப்புகள் என்று மட்டுமே அறிந்த நமக்கு அந்த உல்லாச புரியை நீள அகலம் பிரயாணம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது.

சாலையின் இருபுறமும் ஆரஞ்சு மரங்கள். மரமே அழகு. காய்ந்து குலுங்கினால் பேரழகு. மக்கள் மிக சாது. பெரும்பான்மையானவர்கள் நடுத்தர வர்க்கம் தான். பெண்கள் கரிய தலைமுடியுடன் கொஞ்சம் சதைப்பிடிப்பாய், ஆண்கள் ரோமானியர்களுக்கு ஈடான அழகன்களாய்".

இவ்வாறு ஜேடி-ஜெர்ரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x