

ட்வெய்ன் ஜான்சன், எமிலி ப்ளன்ட் நடிப்பில் உருவாகவுள்ள ’பால் அண்ட் செய்ன்’ படத்தை நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது.
ட்வெய்ன் ஜான்சன், எமிலி ப்ளன்ட் இருவரும் டிஸ்னியின் ’ஜங்கிள் க்ரூஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளனர். இந்த வருட ஜூலை வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம் கரோனா நெருக்கடி காரணமாக அடுத்த வருடம் ஜூலை மாதம் வெளியாகிறது. இதே ஜோடியை வைத்து ஒரு புதிய சூப்பர்ஹீரோ படம் திட்டமிடப்பட்டது. ஸ்காட் லாப்டெல் என்பவர் உருவாக்கிய ’பால் அண்ட் செய்ன்’ என்ற காமிக்ஸின் தழுவலாக இந்தப் படம் உருவாகவுள்ளது.
திருமணமாகி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் தம்பதிகளைப் பற்றிய கதை இது. ஆனால் சூப்பர் ஹீரோவாக மாறுவதற்கான சக்தி இவர்கள் ஒன்றாக இருந்தால் மட்டுமே இவர்களுக்குக் கிடைக்கும் என்பதுதான் இந்தக் கதையின் சுவாரசியம்.
இந்த தம்பதிகளாக ட்வெய்ன் ஜான்சனும் எமிலி ப்ளன்ட்டும் நடிக்கின்றனர். படத்தின் இணை தயாரிப்பாளர்களாகவும் இவர்கள் செயல்படவுள்ளனர். ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்ட கதாசிரியர் எமிலி வி கார்டன் இதற்கான திரைக்கதையை எழுதியுள்ளார்.
இன்னும் படப்பிடிப்பு கூட தொடங்காத இந்தப் படத்தின் உரிமைகளை இப்போதே நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது. எனவே படம் நேரடியாக ஸ்ட்ரீமிங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.