

கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை தரும், அவர்களைப் பார்த்துக் கொள்ளும் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட தேவையான பொருட்களை வாங்க அனைவரும் நிதி உதவி தர வேண்டும் என பாலிவுட் நட்சத்திரம் ஷாரூக் கான் கோரியுள்ளார்.
கரோனா நெருக்கடி காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்களால் முடிந்த பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக ஷாரூக் கான் தான் நடத்தி வரும் நிறுவனங்கள், ஐபிஎல் அணி சார்பாக கோடிக்கணக்கான பணத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும் மும்பையில் இருக்கும் தனது அலுவலகக் கட்டிடத்தை, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி தங்க வைக்க ஏதுவாக மொத்தமாக மாற்றி, மாநகராட்சியிடம் ஒப்படைத்துள்ளார்.
தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஷாரூக் கான், "கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் துணிச்சலான சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும், மருத்துவ அணிகளுக்கும் ஆதரவு தெரிவிப்போம். அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க நிதி தருவோம்.
நானும், மீர் அறக்கட்டளையும் இணைந்து, நமது மருத்துவப் போராளிகளைப் பாதுகாக்க உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் முயற்சியில் இனி நீங்களும் பங்காற்றலாம். நாங்கள் திரட்டும் நிதிக்கு பங்களியுங்கள். தனிப்பட்ட பாதுகாப்பு கவசம், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றை அவர்களுக்கு எடுத்துச் செல்ல உதவுங்கள்" என்று பகிர்ந்துள்ளார். அவர் நடத்தி வரும் மீர் அறக்கட்டளையின் நன்கொடைக்கான இணைப்பையும் இத்துடன் பகிர்ந்துள்ளார்.