சந்தோஷ் நாராயணன் பிறந்த நாள் ஸ்பெஷல்: தனித்துவம் வாய்ந்த இசையமைப்பாளர்

சந்தோஷ் நாராயணன் பிறந்த நாள் ஸ்பெஷல்: தனித்துவம் வாய்ந்த இசையமைப்பாளர்
Updated on
2 min read

தமிழ் சினிமாவின் தொடக்கக் காலம் தொட்டு ஒரு நெடிய இசைப் பாரம்பரியம் இங்கு செழித்து வளர்ந்துள்ளது. எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி, சங்கர்-கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா என பல இசையமைப்பாளர்கள் திரையிசையின் தரத்தைப் பல மடங்கு உயர்த்தியவர்கள். இவர்களைத் தொடர்ந்து இந்தத் தலைமுறை இசையமைப்பாளர்கள் பலர் குறுகிய காலத்தில் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றுவிட்டார்கள். கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் தனது அபாரத் திறமையாலும் இசை குறித்த தனித்தன்மை வாய்ந்த அணுகுமுறையாலும் ரசிகர்களின் நன்மதிப்பையும் பேரன்பையும் பெற்றிருப்பவரான சந்தோஷ் நாராயணன் இன்று (மே 15) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

ஸ்ரீரங்கத்தில் பிறந்து பொறியியல் பட்டம் பெற்றவரான சந்தோஷ் நாராயணன் இசைப் படைப்புகளுக்கான ரெக்கார்டிங் இன்ஜினீயர், அரேஞ்சர், ப்ரோக்ராமர் ஆகிய பணிகளைச் செய்தார். சுயாதீன இசைப் படைப்புகளை வெளியிடத் தொடங்கினார். பிறகு ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளராக இருந்து இசையமைப்பாளரான ப்ரவீன் மணியுடன் பணியாற்றினார். அதன் மூலம் ரஹ்மானின் பாடல்கள் சிலவற்றிலும் பணியாற்றினார்.

ஆட்டமும் அமைதியும்

2012-ல் வெளியான இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் அதிரி புதிரி ஹிட்டாகின. ‘ஆடி போனா ஆவணி’ போன்ற ஆட்டம்போட வைக்கும் பாடல்கள், ‘ஆசை ஓர் புல்வெளி’ போன்ற மென்மையான மெலடி பாடல்கள் என அனைத்து ஏரியாவிலும் தான் கில்லி என்பதை முதல் படத்திலேயே நிரூபித்தார். அதே ஆண்டு வெளியான கார்த்திக் சுப்புராஜின் ‘பீட்சா’ படத்துக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான ‘சூது கவ்வும்’, ‘குக்கூ’ போன்ற படங்கள் அவரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றன. குறிப்பாக ‘குக்கூ’ படம் வெற்றி பெற்றதற்கு அதன் இனிமையான பாடல்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்படிப்பட்ட படத்துக்கேற்ற மண் மனம் சார்ந்த இசையைத் தந்திருந்தார்.

இயக்குநர்களின் இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவில் இறவாப் புகழ்பெற்ற இயக்குநர்-இசையமைப்பாளர் கூட்டணிகள் பல உள்ளன. இன்றைய தேதியில் பல திறமையான இயக்குநர்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருப்பவர் சந்தோஷ். ரசிகர்கள் மட்டுமல்லாமல் படைப்பாளிகளுக்கும் பிடித்த இசையமைப்பாளர் அவரே என்பதே இதன் பொருள். 2012-ல் அறிமுகமான ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் இருவரும் முக்கியமான இயக்குநர்களாகிவிட்ட நிலையில் அவர்களின் ஆஸ்தான இசையமைப்பாளராகத் தொடர்கிறார் சந்தோஷ் நாராயணன். இவர்களைத் தவிர புகழ்பெற்ற இயக்குநர்களான ராஜுமுருகன், நலன் குமாரசாமி, மாரி செல்வராஜ் ஆகியோருக்கும் ஆஸ்தான இசையமைப்பாளராக இருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

பலவகை இசை ஜாலங்கள்

2012-க்குப் பிறகு வித்தியாசமான கதைக் களங்கள், புதுமையான படமாக்கம் ஆகியவற்றுடன் குறைந்த முதலீட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்குச் சற்று வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியது. ’சூது கவ்வும்’, ’எனக்குள் ஒருவன்’, ‘காதலும் கடந்து போகும்’ என இப்படிப்பட்ட படங்களுக்கு சந்தோஷின் இசை பெரும் ஈர்ப்பு சக்தியாக இருந்துள்ளன. ‘பரியேறும் பெருமாள்’ போன்ற சமூக-அரசியல் பிரச்சினைகளைப் பேசும் படங்களுக்கும் அவற்றின் தீவிரத்தன்மையை கச்சிதமாகக் கடத்தும் வகையிலான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியிருப்பார். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ‘கபாலி’, ‘காலா’, விஜய்க்கு ‘பைரவா’, தனுஷுக்கு ‘கொடி’, ‘வடசென்னை’ என சந்தோஷின் இசை அவர்களுடைய மாஸ் இமேஜுக்குத் தகுந்தபடியும் அந்த நடிகர்களின் ரசிகர் படையைத் திருப்திப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன.

தீம் இசையின் புதிய சாத்தியங்கள்

‘கபாலி’, ‘காலா’, ‘வடசென்னை’ படங்களில் அவருடைய தீம் இசை, பாடல்களுக்கு இணையான வெற்றியைப் பெற்றன. தமிழில் தீம் இசை என்ற வடிவத்தை மிகவும் பிரபலப்படுத்தியதோடு அதன் பல்வேறு சாத்தியங்களைக் காட்டியது சந்தோஷ் நாராயணனின் தனித்துவம் மிக்க சாதனை என்று சொல்லலாம்.

அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜின் ‘ஜகமே தந்திரம்’, மாரி செல்வராஜின் தனுஷுடனான திரைப்படம், உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் சந்தோஷ் நாராயணன் இன்னும் பல சாதனைகளைக் குவித்துத் திரை இசை வானில் மின்னும் நட்சத்திரமாக நிலைக்க அவரை மனதார வாழ்த்துவோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in