Published : 13 May 2020 07:05 PM
Last Updated : 13 May 2020 07:05 PM

கரோனா நெருக்கடியிலும் விஜய் டிவியின் தாராள மனது: நெகிழும் தொடர் தயாரிப்பாளர்

கரோனா நெருக்கடியிலும் விஜய் டிவியின் தாராள மனது குறித்து தொடர் தயாரிப்பாளரும் திரைக்கதை ஆசிரியருமான ரமணகிரிவாசன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் மார்ச் 19-ம் தேதியிலிருந்து கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு வெள்ளித்திரை, சின்னத்திரை பணியும் நடைபெறவில்லை. இதனால் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அவர்களுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஒன்றிணைந்து பெப்சி அமைப்பு மூலம் உதவிகள் செய்துள்ளனர்.

இதனிடையே, விஜய் தொலைக்காட்சியின் உதவி குறித்து ரமணிகிரிவாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இவர் இயக்குநர் அட்லியின் நெருங்கிய நண்பராவார். மேலும், 'தெறி', 'மெர்சல்' உள்ளிட்ட படங்களில் அட்லியுடன் இணைந்து திரைக்கதையமைப்பில் பணிபுரிந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொடர்கள் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர் ரமணகிரிவாசன் என்பது நினைவுகூரத்தக்கது.

தற்போது விஜய் தொலைக்காட்சியின் உதவி குறித்து ரமணகிரிவாசன் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

"கரோனா பிரச்சினையில் பாதிக்கப்பட்ட எத்தனையோ பணிகளில் ஒன்று தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகள் தயாரிப்பு. புதிய தொடர்கள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடியாமல் சேனல்கள் முடங்கியுள்ளன. விளம்பர வருவாய் இன்றி சேனல்கள் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.

விஜய் டிவியின் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நம்பி இருந்த பெப்சி யூனியனின் பல துறைகளைச் சேர்ந்த 750 பேர் ஏப்ரல் மாதம் முழுவதும் வேலை செய்ய செய்ய இயலாமல் போனது. அவர்கள் அனைவருமே தினசரி வருமானக்காரர்கள். அந்த 750 பேருக்கும் ஏறக்குறைய 75 லட்ச ரூபாயை விஜய் டிவி உதவித்தொகையாக வழங்கி இருக்கிறது. இது ஏறக்குறைய அவர்கள் ஏப்ரல் மாதம் முழுவதும் வேலை செய்து இருந்தால் என்ன வருமானம் கிடைத்திருக்குமோ அதற்கு சமமான தொகை என்றால் அது மிகையில்லை.

தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாக ஒவ்வொரு தொடரிலும் வேலை செய்யும் பணியாளர்களின் கணக்கை எடுத்து மொத்தத் தொகையை தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கி அவர்கள் மூலமாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் அந்தப் பணம் போய் சேருகிறதா என்பதையும் விஜய் டிவி உறுதி செய்திருக்கிறது. விஜய் டிவியில் இரண்டு தொலைக்காட்சி தொடர்களைத் தயாரித்துக் கொண்டிருப்பவன் நான். உதவி பெற்ற ஒவ்வொருவரும் அந்தப் பணத்தை நாங்கள் வழங்கியதாக எண்ணி தொலைபேசியில் எங்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் அந்த நன்றி விஜய் டிவிக்கே போய்ச் சேர வேண்டும். அவர்கள் இந்த உதவியைச் செய்ததை கூட விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. நன்றி எப்போதும் சரியான இடத்திற்குப் போய்ச் சேரவேண்டும் என்பதால்தான் இந்தப் பதிவு. மனிதநேயத்துடன் இந்த மாபெரும் உதவியைச் செய்த விஜய் டிவிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் விஜய் டிவி என்பது வெறும் வார்த்தையாக இல்லாமல் பிரச்சினையான சூழலில் நிஜமாகவே தொழிலாளர்கள் பக்கம் நின்று எங்கள் விஜய் டிவியாக அனைவரது இதயத்திலும் உயர்ந்து நிற்கிறது. இந்த மாபெரும் உதவிக்குப் பின்னால் மறைந்து இருக்கும் மனிதநேயம் மிக்க விஜய் டிவியின் பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டிக்கும், சீனியர் வைஸ் பிரஸிடெண்ட் பாலசந்திரனுக்கும், தலைமை நிகழ்ச்சிப் பொறுப்பாளர் பிரதீப் மில்ராய் பீட்டருக்கும் மனமார்ந்த நன்றிகள்".

இவ்வாறு ரமணகிரிவாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x