Published : 13 May 2020 05:05 PM
Last Updated : 13 May 2020 05:05 PM

தயவுசெய்து உணவின் மீது எரிச்சல் காட்டாதீர்கள்: நகராட்சி ஆணையருக்கு லாரன்ஸ் வேண்டுகோள்

தயவுசெய்து உணவின் மீது எரிச்சல் காட்டாதீர்கள் என்று வாணியம்பாடி நகராட்சி ஆணையருக்கு லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா ஊரடங்கில் தளவுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து வாணியம்பாடியில் நேரக் கட்டுப்பாட்டுடன் சில தொழில்கள் நடைபெற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

ராமநாயக்கன்பேட்டை, நவாஸ்மேடு போன்ற பகுதிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல் வியாபரம் நடைபெற்று வருவதாக நகராட்சி ஆணையர் சிசில்தாமஸூக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற ஆணையர் தடையை மீறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபாரிகளை எச்சரித்து அங்கிருந்த தள்ளுவண்டியில் இருந்த பழங்களை கீழே தூக்கி வீசி தள்ளுவண்டியைச் சாய்த்தார்.

மேலும், பழக்கடைகளில் இருந்த பழங்களை நடுரோட்டில் தூக்கி வீசி அந்தக் கடைகளுக்கு சீல் வைத்தார். நகராட்சி ஆணையரின் இந்தச் செயலை சிலர் செல்போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது பெரும் வைரலானது. இணையத்தில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வியாபாரிகளை நேரில் சந்தித்து காய்கறி தொகுப்பு, மளிகைப் பொருட்களையும் வழங்கி நகராட்சி ஆணையர் மன்னிப்பு கோரினார்.

சமூக வலைதளத்தில் வைரலான இந்த வீடியோ தொடர்பாக ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்த வீடியோவைப் பார்த்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். பல காவல்துறை அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் தன்னலமின்றி நமக்காகத் தினமும் சேவை செய்கின்றனர். அவர்கள் வாழ்க்கையையே பெரிய ஆபத்தில் வைத்துள்ளனர். இது போன்ற அதிகாரிகள் செய்யும் ஒரு தவறு கூட மற்றவர்களின் பெயரைக் கெடுத்துவிடும்.

அவர்கள் என்ன தவறு செய்திருந்தாலும் சரி, உணவை வீணாக்குவது மிகப்பெரிய தவறு. உணவின் மதிப்பு எனக்குத் தெரியும். ஒருவருக்கு உணவளிக்க நாங்கள் எவ்வளவு பாடுபடுகிறோம் என்பதும் தெரியும். அந்த அதிகாரிக்கு எனது வேண்டுகோள் இதுதான். பல காரணங்களுக்காக நீங்கள் எரிச்சலடைந்திருக்கலாம். தயவுசெய்து அதை உணவின் மீது காட்டாதீர்கள். நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்".

இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x