Published : 12 May 2020 02:23 PM
Last Updated : 12 May 2020 02:23 PM

இரக்கமுள்ள அன்னையைப் பார்த்தேன்: ஒடிசா பெண் காவலரை வீடியோ கால் மூலம் பாராட்டிய சிரஞ்சீவி

இரக்கமுள்ள அன்னையைப் பார்த்தேன் என்று ஒடிசா பெண் காவலர் சுபஸ்ரீயை வீடியோ கால் மூலம் பாராட்டியுள்ளார் சிரஞ்சீவி.

கரோனா அச்சுறுத்தல் காலத்தில் காவல்துறையினர் செய்யும் பணியை பல்வேறு இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் காவலர் சாலையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்குச் சாப்பாடு ஊட்டிவிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

தற்போது சுபஸ்ரீயிடம் தொலைபேசியில் வீடியோ காலில் பேசி தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி. இந்த வீடியோ பதிவையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் உள்ள சிரஞ்சீவி - சுபஸ்ரீ உரையாடல் இதோ:

சிரஞ்சீவி: வணக்கம் சுபஸ்ரீ... சில நாட்களுக்கு முன்பு, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நீங்கள் சாப்பாடு ஊட்டிவிடும் காணொலியைப் பார்த்தேன். அது என் கவனத்தை ஈர்த்தது. அதைக் கண்டு நான் நெகிழ்ந்துவிட்டேன்.

அப்போதிலிருந்தே உங்களிடம் பேச வேண்டும் என்று முயன்றேன். உங்களைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மனிதத்தை நீங்கள் காட்டிய விதம் மகிழ்ச்சியைத் தந்தது. எது உங்களை இப்படிச் செய்ய வைத்தது?

சுபஸ்ரீ: இதில் விசேஷமாக எதுவும் இல்லை. நான் உணவைத் தரும்போது அவரால் அதைக் கையில் எடுத்து சாப்பிட முடியவில்லை. ஏனென்றால் அவர் மனநல ரீதியாக பாதிக்கப்பட்டவர் மட்டுமல்ல, மாற்றுத் திறனாளியும் கூட.

சிரஞ்சீவி: உங்களிடம் ஒரு இரக்கமுள்ள அன்னையைப் பார்த்தேன். நிறையப் பேருக்கு உந்துதலாக இருக்கிறீர்கள். கண்டிப்பாக உலகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்து உங்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கும்.

சுபஸ்ரீ: ஆம். எங்கள் மாநிலத்தின் முதல்வர் பாராட்டினார். சட்ட ஒழுங்கைத் தாண்டி எங்கு, எப்போதெல்லாம் தேவை இருக்கிறதோ அப்போதெல்லாம் நீங்கள் பொறுப்புடன் சேவை செய்ய வேண்டும் என்று எங்கள் ஏடிஜிபி எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது இதுதான். எனக்கு இது பெரிய வெகுமதி.

நீங்கள் என்னைத் தொடர்பு கொள்ளப் போகிறீர்கள் என்று சொன்னதுமே நான் எப்போது உங்களிடம் பேசப் போகிறேனோ என்று அதிகமாக உற்சாகமடைந்தேன். நீங்கள் எளிமையானவர் என்பதைத் தாண்டி சமூக சேவை செய்பவர். நீங்கள் செய்த பல காரியங்களை நான் பார்த்திருக்கிறேன். நான் உங்கள் ரசிகை. உங்கள் ஆளுமை எனக்குப் பிடிக்கும்.

சிரஞ்சீவி: உங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.

இவ்வாறு அந்த உரையாடல் நிகழ்ந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x