Published : 12 May 2020 01:03 PM
Last Updated : 12 May 2020 01:03 PM

காவல்துறையினர் எல்லோருக்கும் எல்லைச்சாமி: சூரி

காவல் துறையினர் நாம் எல்லோருக்கும் எல்லைச்சாமி என்று அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கிவிட்டு சூரி தெரிவித்தார்.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே திரையுலகில் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்துகொண்டு, தங்களுடைய சமூக வலைதளம் மூலம் கரோனா விழிப்புணர்வு செய்து வந்தார்கள். இதில் கொஞ்சம் வித்தியாசமாக முதல் ஊரடங்கில் தொடர்ந்து 14 நாட்கள் தன் குழந்தைகளுடன் வீடியோ செய்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார் சூரி.

அதனைத் தொடர்ந்து பல்வேறு வகையில் உதவிகளும் செய்துவந்தார். தற்போது கரோனா ஊரடங்கிலும் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வரும் காவல்துறையினருக்கு நன்றி கூறும் விதமாக திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு இன்று (மே 12) காலை வருகை தந்திருந்தார்.

அங்கு பணியிலிருந்த காவல் துறையினரிடம் சூரி ஆட்டோகிராப் வாங்கினார். பின்பு அங்குள்ள அனைவரிடமும் தங்களுடைய உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பணிபுரிவது தொடர்பாகப் பாராட்டிப் பேசினார்.

பின்பு அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் சூரி பேசியதாவது:

"கரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், நமது உயிரைப் பாதுகாக்கும் விதிமுறைகளைத் தினந்தோறும் கூறி மக்களைக் காப்பதில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் காவல் துறையினர்.

தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல், 24 மணி நேரமும் நமது உயிர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழி நடத்திய அவர்களுக்குக் கோடி நன்றிகள். எங்கள் ஊரில் அய்யனார் சாமி தான் எல்லைச்சாமி. அதுபோல் தற்போது காவல் துறையினர் நம் எல்லோருக்கும் எல்லைச்சாமி போல் இருந்து நம்மைக் காத்து வருகின்றனர்.

கடவுளை அன்றாடம் வணங்கும் நாம் அனைவரும், சமீபகாலங்களாக காவல் துறையினரையும் வணங்க ஆரம்பித்துவிட்டோம். ஆனால் இந்தக் கரோனா காவல்துறை நண்பர்களையும் விட்டு வைக்கவில்லை. இது வரை 60 காவல் துறையினர் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

சினிமாவில்தான் நாங்கள் கதாநாயகர்கள், ஆனால் நிஜத்தில் காவல் துறையினர், மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகை நண்பர்கள் ஆகிய நீங்கள்தான் உண்மையான கதாநாயகர்கள். எனவே, நிஜ கதாநாயகர்களான இவர்களைச் சந்தித்து நன்றி கூறி, அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கியதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்த நாளை என் வாழ் நாளில் மிக முக்கியமான நாளாக நினைக்கிறேன். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு என்றென்றும் என் மனதில் நிலைத்திருக்கும்".

இவ்வாறு சூரி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x