Published : 11 May 2020 08:51 PM
Last Updated : 11 May 2020 08:51 PM

சர்ச்சையை ஏற்படுத்திய தயாரிப்பாளர்கள் குழு அறிக்கை; பெயரைப் பயன்படுத்தும் முன் அனுமதி கேட்பது நாகரிகம்: பாரதிராஜா காட்டம்

சர்ச்சையை ஏற்படுத்திய தயாரிப்பாளர்கள் குழு அறிக்கை தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா காட்டமாக பதிலளித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எப்போது நடைபெறும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்தத் தேர்தலில் டி.சிவா தலைமையிலான ஒரு அணியும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையிலான ஒரு அணியும் களத்தில் உள்ளனர். மூன்றாவதாக ஒரு அணி உருவாகியுள்ளது. அது தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதனிடையே இன்று (மே 11) மாலை 'தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்’ என்ற பெயரில் ஒரு அறிக்கை ஒன்று வெளியானது. அதில் திரைத்துறையைச் சரிசெய்ய ஒரு அணியாகத் தீர்வு காணலாம் என்றும், கரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பேரிழப்பைச் சரிசெய்ய முன்னாள் தலைவர்கள் ஒன்றிணைந்து குழு ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், தாணு, கேயார், டி.ஜி.தியாகராஜன், முரளிதரன் ஆகியோருடன் அனுபவம் வாய்ந்த 36 தயாரிப்பாளர்கள் அடங்கிய மொத்தம் 42 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள். இந்த அறிக்கை பலரையும் வியப்படைய வைத்தது.

ஏனென்றால், தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடும் அனைத்து அணியிலிருந்தும் இந்தக் குழுவில் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. பல தயாரிப்பாளர்கள் இதுகுறித்து தன்னிடம் கேட்கவே இல்லையே என்று கூறினார்கள். தற்போது இந்தக் குழு உருவாக்கம் குறித்து பாரதிராஜா காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"முன்னாள் தலைவர்கள் அனுமதியோடு ஒரு குழு அமைக்கப்பட்டதாகப் பட்டியலொன்றும் அதனோடு சேர்ந்த அறிக்கையும் பத்திரிகைச் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

நாகரிகம் என்பது பெயரைப் பயன்படுத்தும் முன் அனுமதி கேட்பது. ஆனால், நான் அறியாமல் எனது பெயரைப் பயன்படுத்தியது சரியல்ல.

தேர்தல் தள்ளிப் போடப்பட்ட நிலையில் பொதுவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவைத் தெரிந்துகொள்ளாது சுயமாக ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்து அவர்கள் திரையுலகின் பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் என் பெயரை என்னைக் கேட்காமல் பயன்படுத்தியது முற்றிலும் தவறான அணுகுமுறை.

பத்திரிகையாளர்கள் இச்செய்தி தவறானது என்பதை உணர்ந்து, எந்தவித அனுமதியும் பெறாமல் எனது பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x