Published : 11 May 2020 04:38 PM
Last Updated : 11 May 2020 04:38 PM

கதையில் வந்த சந்தேகம், மீனாவுக்கு பதில் ரேவதி: 'தேவர் மகன்' ரகசியங்கள்

'தேவர் மகன்' படத்தின் படப்பிடிப்பில் நடந்த சில சம்பவங்களைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் ராசி அழகப்பன்

1992-ம் ஆண்டு சிவாஜி, கமல், ரேவதி, நாசர், கெளதமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தேவர் மகன்'. பரதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் பெயர் வெளியான சமயத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

இப்போதும் இந்தப் படத்தின் 2-ம் பாகமாக 'தலைவன் இருக்கின்றான்' படத்தை உருவாக்கவுள்ளார் கமல். இதற்கான பணிகளை 'இந்தியன் 2' படத்தை முடித்துவிட்டுத் தொடங்கவுள்ளார். தற்போது 'தேவர் மகன்' படத்தில் பணிபுரிந்த இயக்குநர் ராசி அழகப்பன், அந்தப் படத்தில் நடந்த விஷயங்களை வீடியோவாக பேசி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது:

"'தேவர் மகன்' வெற்றி பெற்றதற்கு கமலின் முழு முயற்சியும் சிந்தனையும் தான். அந்தக் கதையின் அடிநாதம் கலைஞானத்துடையது, அதற்கான ஆதாரம் எல்லாம் அவரிடம் இருப்பதாக நண்பர் சொன்னார். எனக்கு அது தெரிய வாய்ப்பில்லை. கங்கை அமரன் அவர்கள் இயக்க 'அதிவீரராமபாண்டியன்' என்ற படம் ஒன்று ராஜ்கமல் நிறுவனத்தில் பூஜை போடப்பட்டது. கங்கை அமரனுடன் பணிபுரிய எனக்கு கமல் வாய்ப்பளித்தார். அவருடன் சில நாட்கள் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் படம் தொடங்கவில்லை.

'தேவர் மகன்' படம் பேசி முடிவாகி படப்பிடிப்பு தொடங்கி போது நான் இல்லை. முதலில் பொள்ளாச்சியில் 13 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அப்போது ரேவதி கதாபாத்திரத்தில் மீனா தான் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் பணிபுரிய கமல்ஹாசன் திடீரென்று என்னை அழைத்தார். உடனே சென்றேன். அந்தக் கதையைப் படித்துவிட்டு, இந்தக் கதையை முழுமையாக எழுத வேண்டும் என நினைக்கிறேன். சில இடங்களில் கூறியது குரலாக இருக்கிறது என எனது சந்தேகத்தைச் சொன்னேன். உடனே கமல் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்.

ஊட்டிக்கு 2 கார்களில் பயணித்தோம். அங்குச் சென்றவுடன் இந்தப் படத்தின் கதையை முழுமையாக எழுதி முடித்துவிட்டுத் தான் படப்பிடிப்புக்குச் செல்வது என்று அனைவருமே தீர்மானித்தோம். 40 நாட்கள் ஒவ்வொரு காட்சியாகப் பேசி தீர்மானிக்கப்பட்டு எழுதி முடித்தோம். அனைவருக்கும் அது கொடுக்கப்பட்டு, படித்து முடித்தார்கள்.

படப்பிடிப்புக்குப் போகலாம் என்று நினைக்கும் போது மீனாவின் கால்ஷீட் கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று என பேசிக் கொண்டிருக்கும் போது, ரேவதியை ஒப்பந்தம் செய்தோம். அதற்குப் பிறகு முழுமையாகப் படப்பிடிப்பு செய்து முடித்தோம். இப்போது நீங்கள் கொண்டாடும் படம் அது தான்.

கமல்ஹாசனுக்கு ஒரு பழக்கம் உண்டு. சரியில்லை என்று தோன்றிவிட்டால், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை தூக்கிப் போட்டுவிட்டு, மறுபரிசீலனை செய்வார். ரசிகனுக்கு நேர்த்தியாகக் கொடுக்க வேண்டும் என நினைப்பது அவரது வழக்கம்"

இவ்வாறு ராசி அழகப்பன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x