தன்னைப் பற்றிய புரளிகள்: பாடகி சுனிதா உணர்வுபூர்வப் பகிர்வு

தன்னைப் பற்றிய புரளிகள்: பாடகி சுனிதா உணர்வுபூர்வப் பகிர்வு
Updated on
1 min read

தன்னைப் பற்றிய புரளிகள் இணையத்தில் உலா வந்த நிலையில், அதுகுறித்து பாடகி சுனிதா உணர்வுபூர்வமாக விளக்கியுள்ளார்.

தெலுங்குத் திரையுலகில் பிரபலமான பாடகி சுனிதா. தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், டப்பிங் கலைஞர், நடிகை எனப் பன்முகம் கொண்டவர். ஃபிலிம்ஃபேர், நந்தி விருதுகள் எனப் பல்வேறு விருதுகளை வென்றிருப்பவர். விவாகரத்தான சுனிதா தனது மகனையும் மகளையும் வளர்த்து வருகிறார். இவரது மகள் ஷ்ரேயாவும் தெலுங்கில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் சுனிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய பல்வேறு புரளிகள் இணையத்தில் உலா வந்தன. தற்போது அது பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சுனிதா பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"காரணமே இல்லாமல் என்னை இலக்காக வைத்து சிலர் பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.

என்னை விட அனுபவம் குறைந்த பாடகர்கள் என்னைப் போல பாட முயன்று சொதப்பியதையும் அதற்கு ரசிகர்கள் கைதட்டியதையும் பார்த்திருக்கிறேன்.

என்னைப் பற்றி கிசுகிசுக்க மட்டுமே வாட்ஸ் அப் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறேன்.

இணையதளங்கள் என்னைப் பற்றி அவதூறுகள் எழுதியதைப் பார்த்திருக்கிறேன்.

தங்களது பயத்தினால் சிலர் என் வட்டத்திலிருந்து விலகியதைப் பார்த்திருக்கிறேன்.

என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமான புரளிகளை சில பெண்கள் பரப்புவதைப் பார்த்திருக்கிறேன்.

நான் வெற்றியை, ஏற்றங்களை, இறக்கங்களைப் பார்த்திருக்கிறேன்.

நான் போதுமான விஷயங்களைப் பார்த்திருக்கிறேன், எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்திருக்கிறேன்.

ஆணாதிக்க சமுதாயத்தைக் கையாண்டு கொண்டே தனியாகக் குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கும் கஷ்டத்தைப் பார்த்திருக்கிறேன்.

மொத்தமாகச் சொல்ல வேண்டுமென்றால் நான் வாழ்க்கையைப் பார்த்திருக்கிறேன்.

இது எல்லாமே இந்த நாளை நான் பார்க்கத்தான் என்று நினைக்கிறேன்.

அமைதியாக என்னை ரசித்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்கிறார்கள்,

என் கலையை ரசித்து, இவ்வளவு வருடங்கள் நான் செய்த தரமான பணியின் அளவை எனக்கு நினைவூட்டுகின்றனர். மேற்சொன்ன எந்த விஷயமும் என்னை, என் குடும்பத்தை, என் வாழ்க்கையைப் பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு அதே நேரத்தில் நான் வாழ்வதற்கான அர்த்தத்தையும் எனக்கு நினைவூட்டுகின்றனர்.

இது எல்லாம் சேர்ந்து எனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றன. இதற்காக எனது ரசிகர்களுக்கு நன்றி".

இவ்வாறு பாடகி சுனிதா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in