Published : 08 May 2020 04:35 PM
Last Updated : 08 May 2020 04:35 PM

கரோனா பாதிப்பு: 40% சம்பளத்தை விட்டுக்கொடுத்த உதயா

கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைச் சரிசெய்ய 40% சம்பளத்தைக் குறைத்துக் கொண்டார் உதயா.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை எப்படி சரி செய்யலாம் என்ற ஆலோசனையில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைச் சரிசெய்ய விஜய் ஆண்டனி, தான் நடித்து வரும் படங்களின் சம்பளத்தில் 25% விட்டுக் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண், இயக்குநர் ஹரி ஆகியோரும் சம்பளக் குறைப்பு தொடர்பாக அறிவித்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் உதயாவும் தனது சம்பளத்தைக் குறைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தற்போது தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து நிச்சயம் மீண்டும் வருவோம். மற்ற அனைத்துத் துறைகளை விட நம் திரையுலகம் இந்த கரோனா வைரஸால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நம் முதலாளிகள் அனைவரும் நன்றாக இருந்தால்தான் இந்த ஒட்டுமொத்தத் திரையுலகமும் நன்றாக இருக்கும்.

நான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'அக்னி நட்சத்திரம்' திரைப்படத்தில் தயாரிப்பாளரின் நலன் கருதி மிகக்குறைந்த சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது இந்த கரோனாவின் தாக்கத்தால் ஒட்டுமொத்தத் திரையுலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் நான் மீண்டும் தயாரிப்பாளருக்கு உதவிடும் வகையில் நான் ஒப்புக்கொண்ட சம்பளத்திலிருந்து மீண்டும் தற்போது 40% சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறேன்.

அதேபோல் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் 'மாநாடு' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் படத்திலும் எனக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்திலிருந்து 40% சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள சம்மதிக்கிறேன். இதற்கு முன்னோடியாக இருந்த நடிகர் விஜய் ஆண்டனி , ஹரிஷ் கல்யாண், இயக்குநர் ஹரி போன்றோர் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டிருக்க அதேபோல் நானும் எனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதில் பெருமைகொள்கிறேன்".

இவ்வாறு உதயா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x