Published : 07 May 2020 01:39 PM
Last Updated : 07 May 2020 01:39 PM

வருத்தம், பிரார்த்தனை: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு தொடர்பாக திரையுலகப் பிரபலங்கள் அதிர்ச்சி

விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு தொடர்பாக திரையுலகப் பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

விசாகப்பட்டினத்தின் வேங்கடாபுரம் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையின் ஸ்டைரீன் விஷவாயுக் கசிவினால் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆங்காங்கே மயக்கம் போட்டு விழுந்தனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அவை அனைத்துமே நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை உணர்த்தின.

விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு தொடர்பாக, தெலுங்குத் திரையுலகின் முன்னணிப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

சிரஞ்சீவி: விசாகப்பட்டினம் நச்சுக் கசிவு காரணமாக பலர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் குணமாகப் பிரார்த்திக்கிறேன். ஊரடங்குக்குப் பிறகு திறக்கப்பட்ட நிறுவனங்கள் குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மகேஷ் பாபு: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு பற்றிய செய்தி கேட்டு இதயம் கனத்துவிட்டது. அதுவும் இப்படியான சவாலான காலகட்டத்தில். இந்த நேரத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள், ஆறுதல்கள். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். உங்களூக்கு என் பிரார்த்தனைகள். விசாகப்பட்டின மக்கள் பாதுகாப்புடன் இருங்கள்

அல்லு அர்ஜுன்: என் வாழ்க்கையில் மிகவும் விசேஷமான இடமாக இருக்கும் விசாகப்பட்டினத்தின் நிலையைப் பார்க்கும்போது மனமுடைகிறது. இந்தக் கோரமான சம்பவத்தால் அதிக வருத்தத்தில் இருக்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.

ரவிதேஜா: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு பற்றிய செய்தி ஆழமாக என்னைப் பாதித்துள்ளது. நாளுக்கு நாள் (நம் வாழ்க்கை) மோசமாகி வருகிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். நீங்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இயக்குநர் அனில் ரவிப்புடி: விசாகப்பட்டினத்திலிருந்து வரும் காட்சிகளைப் பார்த்து அதிக வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்துக்கு என் அனுதாபங்கள். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

லட்சுமி மஞ்சு: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு சம்பவம் தொடர்பான காட்சிகள் பயங்கரமாக உள்ளன. ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் இருக்கும் எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தில் வேகமாக அமில வாயு கசிந்து அதனால் பலர் மயக்கமடைந்ததாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.

ரகுல் ப்ரீத் சிங்: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு பற்றிக் கேள்விப்பட்டு வருத்தப்பட்டேன். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் என் ஆறுதல்கள். சூழலைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று நம்புகிறேன். என் விசாகப்பட்டின மக்களே, பாதுகாப்பாக இருங்கள்.

தமன்னா: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு என்ற கொடூரமான செய்தியைக் கண் விழித்ததும் பார்த்தேன். தங்கள் குடும்பத்தினரை இழந்தவர்கள் அனைவருக்கும் என் அனுதாபங்கள். மருத்துவமனையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

ராம் பொத்தேனனி: விசாகப்பட்டின மக்களே பாதுகாப்பாக இருங்கள். பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் என் ஆறுதல்கள். வலிமையுடன் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.

லாவண்யா: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு தொடர்பான புகைப்படங்களைப் பார்த்து அதிக அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். யாரோ ஒருவரது அலட்சியம் பல உயிர்களைப் பலி வாங்கியுள்ளது. அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்திக்கிறேன்.

இஷா ரெப்பா: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் என் ஆறுதல்கள். அவர்கள் வேகமாகக் குணமடைய என் பிரார்த்தனைகள். தங்கள் குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு என் அனுதாபங்கள். இது மிகவும் சோகமான சம்பவம். வலிமையுடன் இருங்கள்.

சுதீர் பாபு: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு பற்றிய காட்சிகளைப் பார்த்ததும் மனம் கனக்கிறது. அந்த மக்களுக்கு என் ஆறுதல்கள். காலம் நம் மீது சற்று கனிவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x