பண்ணை வீட்டில் தங்கியிருந்தவர்களைப் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பி உதவிய பிரகாஷ்ராஜ்

பண்ணை வீட்டில் தங்கியிருந்தவர்களைப் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பி உதவிய பிரகாஷ்ராஜ்
Updated on
1 min read

தன்னுடன் பண்ணை வீட்டில் தங்கியிருந்தவர்களைப் பாதுகாப்பாக அவர்களுடைய ஊருக்குத் திருப்பி அனுப்ப உதவி செய்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கிய காலத்திலேயே, தனது பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரை சம்பளம் கொடுத்து விடுமுறை அளித்தார் பிரகாஷ்ராஜ். இது தொடர்பாக அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து தனது பிறந்த நாளன்று வீடின்றித் தவித்துக் கொண்டிருந்த கூலிப் பணியாளர்களுக்கு, தான் தங்கியுள்ள பண்ணை வீட்டிலேயே தங்க இடம் கொடுத்தார். மேலும், அவர்களுடைய குடும்பத்துக்குப் பண உதவியும் செய்தார்.

மேலும், தனது பிரகாஷ்ராஜ் அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளைச் செய்யத் தொடங்கினார். பல்வேறு இடங்களுக்குச் சென்று நலிவடைந்த குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கொடுத்தனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தெலங்கானாவில் கரோனா அச்சுறுத்தல் கொஞ்சம் குறையத் தொடங்கி போக்குவரத்து தொடங்கப்பட்டு இருப்பதால், தனது பண்ணையில் தங்கியிருப்பவர்களின் பயணத்துக்காக அதிகாரிகளுடன் பேசத் தொடங்கினார் பிரகாஷ்ராஜ். இது தொடர்பாக மே 4-ம் தேதி தனது சமூக வலைதளப் பதிவில், "ஊரடங்கு முதல் என்னுடைய பண்ணையிலிருந்த 31 குடிமகன்களின் பாதுகாப்பான பயணத்துக்கு அதிகாரிகளிடம் பேசி வருகிறேன். அவர்களுக்கு உறுதுணையாக இருந்ததில் மகிழ்ச்சி.

இன்னும் முடிந்து விடவில்லை. போகவேண்டிய தூரம் இன்னும் உள்ளது. தேவையுள்ளவர்களுக்குத் தொடர்ந்து உதவுவேன். மனிதத்தைக் கொண்டாடுவோம். வாழ்வுக்கு மீண்டும் உயிர் கொடுப்போம்" என்று தெரிவித்திருந்தார். பிரகாஷ்ராஜின் கோரிக்கையை ஏற்று தெலங்கானா அரசு பயணத்துக்கு உதவியுள்ளது.

இது தொடர்பாக தன்னுடன் பண்ணை வீட்டில் தங்கியிருப்பவர்கள் வண்டியில் ஏறும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது:

"பாதுகாப்பான பயணத்துக்கு நன்றி அமைச்சர் கே.டி.ராமா ராவ் மற்றும் தெலங்கானா காவல்துறை. 44 நாட்கள் என்னுடைய பண்ணையைப் பகிர்ந்து அவர்களுக்கு இடமளித்தேன். நான் அவர்களை மிஸ் செய்வேன். அவர்களின் கதைகளிலிருந்து ஏராளமானவற்றை கற்றுக்கொண்டேன். நான் அவர்களைக் கைவிட்டு விடவில்லை என்பதை நினைத்து ஒரு சக குடிமகனாகப் பெருமை கொள்கிறேன். அவர்களுக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டாடினேன்.. மகிழ்ச்சி".

இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in