Published : 06 May 2020 12:59 PM
Last Updated : 06 May 2020 12:59 PM

என்னை யாரும் தனிமைப்படுத்தவில்லை; உண்மை நிலவரம் என்ன? - பாரதிராஜா விளக்கம்

என்னை யாரும் தனிமைப்படுத்தவில்லை எனவும் உண்மை நிலவரம் என்ன என்பதையும் பாரதிராஜா வீடியோ வடிவில் விளக்கமளித்துள்ளார்.

சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு பயணப்பட்டார் இயக்குநர் பாரதிராஜா. தேனி மாவட்ட எல்லையில் அவரை சுகாதாரத்துறையினர் சோதித்தனர். இதில் பாரதிராஜாவுக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும் சிவப்பு மண்டலப்பகுதியில் இருந்து அவர் வந்ததால் வீட்டில் 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி தேனி நகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன்படி அவரது வீட்டில் இதற்கான தகவல் ஒட்டப்பட்டது.

இந்தத் தகவல் வெளியானதிலிருந்து ஊடகங்களிலும், சமூக வலைதளத்திலும் பெரும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பாக உண்மை நிலவரம் என்ன என்பதை பாரதிராஜா வீடியோ பதிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது:

"இன்றைய செய்திதாள்களிலும், தொலைகாட்சியிலும் பாரதிராஜா தேனியில் தன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் என்று ஊடகங்கள் பரபரப்பாக வெளியிட்டுள்ளன. ஏனென்றால், அவர்களுக்கு ஏதாவது ஒரு செய்தி பரபரப்பாக வேண்டும்.

நடந்தது என்னவென்றால், என் சகோதரி தேனியில் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக முறைப்படி அதற்கான அனுமதியுடன் சீட்டு ஒன்று வாங்கி நான் பல மாவட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன். இங்கு வந்து சகோதரியைப் பார்த்தேன். அவர் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டுள்ளார்.

பல மாவட்டங்களைக் கடந்து வந்த காரணத்தால், தேனி நகராட்சி சுகாதாரத்துறை அமைப்பிடம் தொலைபேசியில் பேசி "நான் பல மாவட்டங்கள கடந்து வந்துள்ளேன். தயவு செய்து என்னைச் சோதித்துக் கொள்ளுங்கள்" என்றேன். அவர்களும் வந்து முறையான சோதனைகள் எல்லாம் எடுத்தார்கள். இதுவரை மூன்று முறை சோதனை எடுத்துள்ளேன்.

சென்னையில் ஒரு முறை, வழியில் ஆண்டிப்பட்டியில் ஒரு முறை, தேனியில் ஒரு முறை. மூன்றுமே நெகட்டிவ். அப்படியிருந்தாலும் முறையாக செயல்பட வேண்டும் என்பதற்காக, நெகட்டிவ் தான் சார் செல்லலாம் என்றார்கள். என்னுடன் உதவியாளர்கள் இருவர் வந்தார்கள். அவர்களுக்கும் பரிசோதனை முடிந்தது. மகிழ்ச்சியாக தேனியில் இருக்கிறோம்.

எங்களை யாரும் தனிமைப்படுத்தவில்லை. நாங்கள் மக்கள் நலன் கருதி, எங்களை நாங்களே தனிமைப்படுத்திக் கொண்டோம். இது தான் நடந்த உண்மை. இதை பெரிதுபடுத்தி, பெரிய செய்தியாகச் சொல்லி மக்களைக் குழப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் மகிழ்ச்சியாக என் உதவியாளர்களுடன் இணைந்து, அடுத்த படத்துக்கான களத்தைத் தேர்வு செய்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு எவ்விதமான இடர்பாடும் கிடையாது. நாங்கள் சந்தோஷமாக, நலமுடன் இருக்கிறோம்"

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x