ஊரடங்கு முடியும் வரை காத்திருங்கள்: தயாரிப்பாளர்களுக்கு மல்டிப்ளக்ஸ் சங்கம் கோரிக்கை
திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடாமல் திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு இந்திய மல்டிப்ளக்ஸ் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
கரோன நெருக்கடி காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் கூட்டம் சேரும் எல்லா இடங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கால் தயாரிப்பில் இருக்கும் திரைப்படங்கள், இறுதிக் கட்டத்தில் இருக்கும் திரைப்படங்கள், அரங்கில் வெளியான திரைப்படங்கள் என அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த ஊரடங்கு தொடரும் என்றும், அப்படியே ஊரடங்கு ரத்தானால் கூட கரோனா அச்சம் காரணமாக மக்கள் மீண்டும் கூட்டமாகச் சேருவது கடினம் என்றும் கூறப்படுகிறது.
எனவே ஓடிடி தளங்களில் நேரடியாக திரைப்படங்களை வெளியிட சில தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி அமேசான் ப்ரைம் உள்ளிட்ட ஓடிடி தளங்கள், பெரிய நடிகர்கள் நடித்துள்ள இந்தி, தென்னிந்தியத் திரைப்படங்களை தங்கள் தளங்களில் நேரடியாக வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில் இந்திய மல்டிப்ளக்ஸ் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"சர்வதேச கரோனா கிருமி தொற்றால் திரையரங்குகள் மிகப்பெரிய அளவில் பணத்தை இழந்துள்ளன. தேசிய அளவில் ஆயிரக்கணக்கான திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன, திரையரங்குகள் மட்டுமல்லாது அது தொடர்பான பல்வேறு தொழில்களும், ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளனர். இந்தச் சூழல் இதுவரை இல்லாத ஒன்று.
எங்கள் நலனுக்கு எதிரான ஆபத்தை எதிர்கொள்ள ஒட்டுமொத்த துறையும் ஒன்று சேர்வது முக்கியம். ரசிகர்களின், இந்தத் தொழிலை நம்பி இருக்கும் மற்றவர்களின் நலனுக்காக இந்த நெருக்கடியை நாம் ஒற்றுமையுடன் கையாள வேண்டும்.
திரையரங்குகள் திறக்கப்படும் வரை உங்கள் திரைப்படங்களின் வெளியீட்டை நிறுத்தி வைத்து எங்களுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அனைத்து ஸ்டூடியோ நிர்வாகங்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள், திரையரங்க உரிமையாளர் தரப்பை எங்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
திரையங்க வெளியீடு என்ற, காலம்காலமாக சர்வதேச அளவிலிருந்து வரும் ஒரு நடைமுறையை மதிக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பையும் கேட்டுக் கொள்கிறோம். இந்த நெருக்கடி தீரும்போது, நல்ல படங்களுக்கான தேவையும், புதிய படங்களின் வருகையும் கண்டிப்பாக இந்த வியாபாரத்தை அதிகப்படுத்தும். நமது துறையை மீட்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கும். அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டமாகப் பெரிய திரையில் திரைப்படம் பார்க்கும் சமூக அனுபவம் பாதுகாக்கப்பட வேண்டும். இது சம்பந்தப்பட்ட அனைவரின் ஆதரவு இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்" இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் உலகக் கோப்பை வெற்றிப் பயணத்தைச் சொல்லும் '83' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகச் செய்திகள் பரவின. ஆனால் படம் கண்டிப்பாகத் திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஓடிடி தளத்தில் படத்தை நேரடியாக வெளியிடுவதற்குத் திரையரங்க உரிமையாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
