இளைஞர்களுடன் கைகோர்த்த லாரன்ஸ்

இளைஞர்களுடன் கைகோர்த்த லாரன்ஸ்
Updated on
1 min read

பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு வழங்குவதற்காக, இளைஞர்களுடன் கைகோர்த்துள்ளார் லாரன்ஸ்

கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இதனால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் தினசரித் தொழிலாளர்கள் பலரும் வேலையின்றி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் நிவாரண உதவி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் தமிழ்த் திரையுலகில் அதிகப்படியான நிவாரணத் தொகையை லாரன்ஸ் அறிவித்தார். அதுமட்டுமன்றி, பல்வேறு வகையில் உதவிகளும் செய்து வருகிறார். சமீபத்தில் திரையுலகப் பிரபலங்கள் மூலமாக பொருளுதவிப் பெற்று உதவி செய்யவுள்ளதாக அறிவித்தார். அதற்காக ரஜினி, பார்த்திபன் உள்ளிட்டோர் உதவிகள் செய்தனர்.

தற்போது இந்த பொருளுதவி மூலம் உதவிகள் செய்யத் தொடங்கியிருப்பது குறித்து லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது;

"நான் இப்போது ஒரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியிருக்கிறேன். தாய் அமைப்புக்காக பார்த்திபன் சார் 1000 கிலோ அரிசி அனுப்பியது குறித்து நீங்கள் அறிவீர்கள். அதிலிருந்து 500 கிலோ அரிசி கீழ குறிப்பிடப்பட்டுள்ள படித்துக் கொண்டே பணிபுரியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் தேவையுள்ள மக்களுக்கு விநியோகம் செய்வார்கள். அவர்களிடம் ஒப்படைப்பதில் ஒரு ஸ்பெஷலான காரணம் உள்ளது.

அவர்கள் சிறப்பாக சமூக சேவை செய்து வருவதாக நான் அறிந்தேன். இந்த இளைஞர்களை ஊக்கப்படுத்துவது மிகவும் முக்கியம், இதனால் அவர்கள் இன்னும் சிறப்பாக பணியாற்றுவார்கள். எனவே தனிப்பட்ட முறையில் அவர்களின் வங்கிக் கணக்குக்கு 25000 ரூபாயை அவர்களுடைய செலவினங்களுக்காகவும். உணவுப் பொருட்கள் வழங்கவும் அனுப்பவுள்ளேன்.

அவர்கள் நினைத்திருந்தால் கேம் விளையாடிக்கொண்டும், சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டும் இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் அடுத்தவர்களின் வலியை உணர்ந்து அவர்களுக்குச் சேவை செய்ய தீர்மானித்துள்ளார்கள். என்னை விட அவர்களே உயர்ந்தவர்கள். பொதுமக்களுக்குச் சேவை செய்யும் அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன்.

அதனால் தான் இந்த பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்துள்ளேன். அவர்கள் சிறப்பாக இதைச் செய்வார்கள் என்று நம்புகிறேன். சமூகத்துக்கு தங்களால் இயன்ற சேவையைச் செய்யும் ஒவ்வொரு இளைஞரையும் பாராட்ட வேண்டியது அவசியம். சேவையே கடவுள். மாநகராட்சியின் முறையான அனுமதி பெற்று உணவு விநியோகம் செய்யப்படுகிறது"

இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in