

'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமானதன் பின்னணி என்ன என்பதை ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ், மணிவண்ணன், ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'. தாணு தயாரித்த இந்தப் படம் 2000-ம் ஆண்டு மே 5-ம் தேதி வெளியானது. வரும் மே 5-ம் தேதியுடன் இந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன.
20 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' குறித்த நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் ராஜீவ் மேனன். இதில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்துக்கு முதலில் எந்தெந்த நடிகைகளிடம் எல்லாம் பேசினேன் என்று குறிப்பிட்டுள்ளார் ராஜீவ் மேனன்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
"தபுவைத் தான் முதலில் ஒப்பந்தம் செய்தோம். அவருக்குக் கதை மிகவும் பிடித்திருந்தது. அவரது தங்கை கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்பதில்தான் தடைகள் இருந்தன. முதலில் மஞ்சு வாரியரை அணுகினேன். அவருக்குக் கதாபாத்திரம் பிடித்திருந்தது. ஆனால் தனது முடிவைச் சொல்லாமல், தாமதம் செய்தார்.
அதன் பிறகு நான் சவுந்தர்யாவிடம் பேசினேன். ஒரு விளம்பரத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியதால் எனக்கு அவரை முன்னரே தெரியும். ஆனால் சவுந்தர்யாவின் சகோதரர் படத்தின் க்ளைமேக்ஸ் என்னவென்று கேட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் க்ளைமேக்ஸை நாங்கள் முடிவு செய்யவில்லை.
படப்பிடிப்புத் தேதி நெருங்கிக்கொண்டே வந்தது. எனக்குப் பதற்றம் அதிகரித்தது. ஒரு நாள் திடீரென என் மனைவி ஐஸ்வர்யா ராயின் பெயரைச் சொன்னார். ஐஸ்வர்யா ராய்க்கு குறைவான நேரமே இருந்தாலும் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். எனவே அதற்கு ஏற்றார் போல தேதிகளைச் சமாளித்துக் கொண்டார்".
இவ்வாறு ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.
- ஸ்ரீனிவாசா ராமானுஜம் (தி இந்து ஆங்கிலம்)