Published : 30 Apr 2020 03:59 PM
Last Updated : 30 Apr 2020 03:59 PM

எனது வாழ்க்கையில் ஈடு இணையற்ற ஒரு வெற்றிடம்: கரண் ஜோஹர் உருக்கம்

ஈடு இணையற்ற ஒரு வெற்றிடம் எனது வாழ்க்கையில் ஏற்பட்டுவிட்டதைப் போல உணர்கிறேன் என்று ரிஷி கபூர் மறைவு தொடர்பாக கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே புற்றுநோய்க்கு எதிராக சிகிச்சை எடுத்து வந்தார் ரிஷி கபூர். நேற்று (ஏப்ரல் 29) அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இன்று (ஏப்ரல் 30) காலை 8:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ரிஷி கபூருக்கு வயது 67. இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார். இவரது மறைவு இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிஷி கபூர் மறைவு தொடர்பாக இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான கரண் ஜோஹர் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"எனக்கு 7 வயது இருக்கும் போது, 'துனியா மேரி ஜப் மெய்ன்' படத்தின் பிரத்தியேக காட்சிக்கு எனது பெற்றோர் செல்லவிருப்பதை ஒட்டுக் கேட்டு தெரிந்து கொண்டேன். அதில் நடித்தது எனக்குப் பிடித்தமான ரிஷி கபூர். அடுத்த நாள் பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்பதால் எனது அம்மா நான் வரக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார்.

சிண்டூ கபூரின் படத்தைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்பதால் அவ்வளவு கலாட்டா செய்தேன். ஒருவழியாக எனது பெற்றோர் ஒப்புக்கொண்டனர். நான் ரிஷி கபூரை திரையில் பார்க்கும் போதெல்லாம் எப்படி என் கண்கள் மின்னுமோ அப்படி அதே கண்களுடன் அங்கு சென்றேன். அவர் என் நாயகன்.

மிக அழகான, தனித்துவமான கவர்ச்சி கொண்ட, என்றும் ரொமாண்டிக்கான ரிஷிகபூர். என் பிள்ளைப் பருவமே அவரது பாடல்களைப் பார்க்க அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. நான் அவர் அணிந்தது போன்ற உடைகளைப் போட்டுக்கொண்டு எனது படுக்கையறையில் அவர் பாடல்களுக்கு நடனமாடுவேன். 'டஃப்லி வாலே' பாடலை கையில் தட்டை வைத்துக் கொண்டு எனது பள்ளி நண்பர்களுடன் பாடுவேன்.

ஒரு வழியாக எனது அப்பாவின் 'துனியா' படப்பிடிப்பில் அவரை நேரில் பார்த்தபோது கிட்டத்தட்ட மயக்கம் போட்டுவிட்டேன். பார்த்து அதிசயித்துக் கொண்டே இருக்க வேண்டிய ஒரு நினைவுச் சின்னம் போல அவரைப் பார்த்தேன். 'ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்' படத்தில் அவரை என் இயக்கத்தில் நடிக்க வைத்த போது, அவரது முதல் ஷாட் முடிந்த பின் எனக்குள் அமைதியாக (ஆனந்தக்) கண்ணீர் சிந்தினேன். சிறுவயதில் நான் கண்ட மிகப்பெரிய கனவு ஒன்றை அப்போது நனவாக்கியிருந்தேன்.

இன்று, ஈடு இணையற்ற ஒரு வெற்றிடம் எனது வாழ்க்கையில் ஏற்பட்டுவிட்டதைப் போல உணர்கிறேன். நான் வளர்ந்த பருவத்தில் ஒரு பகுதி பறிக்கப்பட்டு விட்டதைப் போல. அவரை நேசித்ததை, அவருக்குப் பரிச்சயமானதை, அவருடன் சேர்ந்து அருந்தி, பழைய காலங்கள் பற்றிப் பேசியதைக் கவுரமாக நினைக்கிறேன். என்று நினைப்பேன். இந்திய சினிமாவின் ரொமான்ஸ் எப்படி நம்மை விட்டு நீங்க முடியும்? என்றும் நடக்காது. மனம் வலிக்கிறது. இருந்தாலும் இந்த சகாப்தத்தின் மரபு என்றும் நீடிக்கும்"

இவ்வாறு கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x