Published : 30 Apr 2020 04:57 PM
Last Updated : 30 Apr 2020 04:57 PM

அஜித் மீதான விமர்சனங்கள் எந்த அளவு நியாயமானவை?

ரசிகர்கள் சிலரின் தவறுக்காக அளவுக்கு அதிகமாக விமர்சிக்கப்படுபவர்களின் பட்டியலில் அண்மைய ஆண்டுகளில் இணைந்திருப்பவர் நடிகர் அஜித் குமார். தமிழ் சினிமாவில் மிக அதிக எண்ணிக்கையில் மிகத் தீவிர ரசிகர்களைக் கொண்ட சில நடிகர்களில் இவரும் ஒருவர். ‘தல’ என்ற ஒற்றைச் சொல்லுக்காக எதையும் தியாகம் செய்யத் துணிபவர்கள் இருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் இப்படிப்பட்ட ரசிகர்கள் சிலரின் விரும்பத்தகாத செயல்பாடுகளில் இவற்றைக் கவனிக்கும் பொதுப் பார்வையாளர்கள் ஒட்டுமொத்தமாக அஜித் ரசிகர்கள் மீதும் அஜித் மீதும் ஒவ்வாமை கொண்டுவிடுகிறார்கள். எனவே சமூக ஊடகங்களில் அளவுக்கதிகமாக விமர்சிக்கப்படுபவராகவும் ஆகியிருக்கிறார் அஜித்.

அஜித்தின் திரைப் பயணம். அவருடைய சாதனைகள், சிறப்புகள் பலவும் கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக அலசப்பட்டுவிட்டன. எனவே அவருடைய 49 ஆம் பிறந்த நாளை (2020, மே 1) ஒட்டி அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் எந்த அளவுக்கு நியாயமானவை என்றும் இந்த விமர்சனங்களின் அடிப்படையில் அவருடைய வருங்காலத் திட்டங்கள் என்னவாக இருக்கக்கூடும் என்பதையும் பார்க்கலாம்.

விமர்சனம் - அஜித் தன் ரசிகர்களைக் கட்டுப்படுத்துவதில்லை

உண்மை நிலை – ரசிகர்கள் செய்யும் தவறுகள் தீய விளைவுகளை ஏற்படுத்தும்போது நடிகர்கள் அவற்றுக்குப் பொறுப்பேற்று தம் ரசிகர்களைக் கண்டித்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக நிலவுகிறது. ஆனால் பிரபலமான ஒருவர் எத்தனை முறைதான் அதைச் செய்துகொண்டிருக்க முடியும்?. 2011-ம் ஆண்டிலேயே தனது ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் கலைத்ததன் மூலம் திரையரங்கில் படம் பார்த்து ரசிப்பதைத் தவிர ரசிகர்கள் தனக்காக வேறெதையும் செய்ய வேண்டியதில்லை என்பதைச் சொல்லிவிட்டார் அஜித். ஆனால் அதன் பிறகுதான் அவரது ரசிகர் படை பன்மடங்கு பெருகியது.

இதையும் தாண்டி அவ்வப்போது அஜித் தன் ரசிகர்களின் தவறுகளைக் கண்டித்துக்கொண்டுதான் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய்யின் படம் ஒன்று நன்றாக இல்லை என்று சொன்னதற்காகப் பெண் பத்திரிகையாளர் ஒருவரை விஜய் ரசிகர்கள் சிலர் சமூக ஊடகங்களில் இழிவாக வசைபாடினார்கள். இது பெரும் சர்ச்சையானது. அப்படிச் செய்தவர்களைக் கண்டித்து விஜய் அறிக்கை வெளியிட்டார். அப்போது அஜித்தை விமர்சிப்பவர்களையும் சில அஜித் ரசிகர்கள் இழிவுபடுத்துகிறார்கள் என்ற விமர்சனமும் பொதுப் பார்வையாளர்களால் முன்வைக்கப்பட்டது. இதை உணர்ந்து 2017இல் ‘விவேகம்’ படம் வெளியாவதற்கு ஒரு சில நாட்கள் முன்பு தன் படங்களையோ தன்னையோ விமர்சிப்பவர்களை இழிவாக வசைபாடுபவர்களுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொன்னதோடு அப்படிப்பட்ட வசைத் தாக்குதலுக்கு ஆளானவர்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இதைவிட ஒருவர் தன் பெயரில் ரசிகர்கள் சிலர் நிகழ்த்தும் தவறுகளுக்கு என்ன செய்துவிட முடியும்?

விமர்சனம் - அஜித் பொதுப் பிரச்சினைகளில் அக்கறை செலுத்துவதில்லை

உண்மை நிலை – பிரபலங்கள் அனைவரும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் எதிர்வினை ஆற்றவில்லை என்பதை வைத்து அவர்களுக்கு அந்தப் பிரச்சினைகளில் அக்கறை இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. தம்மைப் பின்பற்றுபவர்களைத் தீயவழியில் நடத்திச் செல்லாமல் இருப்பதே பிரபலங்கள் பொதுச் சமூகத்துக்குச் செய்யும் ஆகப் பெரிய நன்மை. அஜித் எந்த வகையிலும் தன் ரசிகர்களைத் தீய வழியில் செலுத்தியிருப்பதாகச் சொல்ல முடியாது. திரைப்படங்களில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளால் ரசிகர்களுக்குத் தவறான முன்னுதாரணமாகிவிடுகிறது என்ற விமர்சனத்தை அடுத்து அதுபோன்ற காட்சிகளும் அவருடைய அண்மைக் காலப் படங்களில் இருப்பதில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் அவருடைய ரசிகர்கள் சிலர் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததாக வதந்திகள் பரவியபோது உடனடியாக தனது பெயரை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதற்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதே அறிக்கையில் தனக்கு அரசியலில் ஈடுபடும் நோக்கம் அறவே இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். திரைப்படங்களின் மூலம் தனக்கு உருவான ரசிகர் படையை மற்ற நோக்கங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற தெளிவு அவருக்கு உள்ளது. அதனால்தான் அவர் விளம்பரங்களிலும் நடிப்பதில்லை. ஒருவர் சமூகப் பொறுப்புள்ளவர் என்று அங்கீகரிக்கப்பட இதற்குமேல் வேறென்ன வேண்டும்?

விமர்சனம் – சினிமா திறமைகளை விட தனிப்பட்ட குணநலன்களுக்காகவே அஜித்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்

உண்மை நிலை – இந்தியச் சூழலில் பிரபலங்களும் தனிப்பட்ட குணநலன்களும் சொந்த வாழ்க்கையில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதும் பொதுச் சமூகத்தால் கவனிக்கப்படுவதும் அவை சார்ந்து அந்தப் பிரபலங்கள் குறித்த மதிப்பீடு உருவாவதும் புதிதல்ல. எம்ஜிஆர், ரஜினிகாந்த், விஜயகாந்த்,ஏ.ஆர்.ரகுமான் எனப் பல சினிமா பிரபலங்கள் அவர்களுடைய தனிப்பட்ட குணநலன்களுக்காகவும் ரசிகர்களாலும் பொதுப் பார்வையாளர்களாலும் கொண்டாடப்படுகிறார்கள். சினிமா பின்னணி இல்லாத எளிய குடும்பத்திலிருந்து வந்து சினிமாத் துறையில் சாதித்தவர். பல்வேறு விபத்துகள், உடல்நிலைக் கோளாறுகளைத் தாண்டி முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தவர், தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர், ரசிகர்களை தன் சுயநல நோக்கங்களுக்குப் பயன்படுத்தாதவர், கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு தன்னாலான உதவியை விளம்பரம் இல்லாமல் செய்துவருபவர் என்று தனிப்பட்ட குணநலன்கள் சார்ந்த பல காரணங்களுக்காக அஜித்தைப் பலர் பாராட்டுகிறார்கள் என்பது உண்மை. ஆனால் இந்த குணநலன்கள் அனைத்தும் அவருக்கு இருப்பதும் உண்மையே.

இன்றைக்கு இருக்கும் ஊடகப் பரவலால் அண்மைக் காலங்களில் அஜித் மற்றவர்களுக்கு உதவி செய்யும் செய்திகள் எப்படியாவது கசிந்துவிடுகின்றன. சில நேரம் ரசிகர்கள் சிலர் அஜித் செய்த உதவிகள் சார்ந்த மிகையான தகவல்களைப் பரப்பிவிட்டுவிடுகிறார்கள். இதனாலெல்லாம் 'விளம்பரம் இல்லாமல் உதவி செய்பவர்' என்ற அஜித்தின் பிம்பம் பலரால் கிண்டலடிக்கப்படத் தொடங்கிவிட்டது. ஆனால், தான் செய்யும் உதவிகளுக்குக் கிடைக்கும் பாராட்டு, அவற்றின் மீதான விமர்சனம் என எதையும் பொருட்படுத்தாமல் அஜித் உதவிகளைச் செய்துகொண்டேதான் இருக்கிறார் என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது.

தவிர இந்த தனிப்பட்ட குணநலன்களுக்காக மட்டுமே அஜித்துக்கு இத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று அவருக்குத் திரைப்படத் துறை சார்ந்த திறமைகளோ தனிச் சிறப்புகளோ எதுவும் இல்லை என்ற பொய்ப் பிரச்சாரமும் சிலரால் கட்டவிழ்க்கப்படுகிறது. ’காதல் கோட்டை’, ‘ஆசை’, ‘அமர்க்களம்’, ‘வாலி’, ‘முகவரி’, ‘தீனா’, ‘சிட்டிசன்’, ‘வில்லன்’, ‘வரலாறு’, ‘பில்லா’, ‘மங்காத்தா’, ‘வீரம்’, ‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’, ‘நேர்கொண்ட பார்வை’ என அவருடைய திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இது முற்றிலும் பொய் என்பது தெரியும். திறமையும் உழைப்பும் இல்லாமல் தனிப்பட்ட குணநலன்களினால் கிடைத்த புகழை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவர் 25 ஆண்டுகள் கடந்தும் முன்னணி நட்சத்திரமாகக் கோலோச்சிக்கொண்டிருக்க முடியாது என்பது சிறுவர்களுக்குக்கூடத் தெரியும்.

விமர்சனம் – அஜித் தன் ரசிகர்களுக்கான படங்களில் மட்டுமே நடிக்கிறார்

உண்மை நிலை – எந்த ஒரு நடிகராலும் தன் ரசிகர்களுக்காக மட்டும் என்று திட்டமிட்டு படங்களில் நடிக்க முடியாது. எவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் திரையரங்குக்கு வரும் பார்வையாளர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே. அனைத்து பிரிவினரையும் திருப்திப்படுத்தினால் மட்டுமே தான் நடிக்கும் திரைப்படம் வெற்றி பெறும் என்பது எல்லா நடிகர்களுக்கும் தெரியும். அஜித்துக்கும் இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனவே வேண்டுமென்றே அவர் திட்டமிட்டு தன் ரசிகர்கள் மட்டும் பார்த்தால் போதும் என்ற எண்ணத்தில் கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்க வாய்ப்பில்லை. பிரச்சினை என்னவென்றால் ரசிகர்களை மனதில் வைத்து அவர்களுக்காகவே வைக்கப்படும் காட்சிகள் அதிகமாகிவிட்டால் பொதுப் பார்வையாளர்களுக்கு அவை அந்நியமாகிவிடுகின்றன. கவனக்குறைவால் நடக்கும் இந்தப் பிழை பல முன்னணி நடிகர்களுக்கு நடந்ததுண்டு. அண்மைக்கால அஜித் படங்களிலும் இது நடந்திருக்கிறது. ஆனால் இதை அவர் கவனித்துத் திருத்திக்கொள்ளத் தொடங்கிவிட்டார் என்பதற்கு அவருடைய கடைசி இரண்டு திரைப்படங்கள் சாட்சியாக உள்ளன.

விமர்சனம் – அஜித் ஒரே மாதிரியான கதைகளில் நடிக்கிறார்

உண்மைநிலை- அண்மைய ஆண்டுகளில் அஜித் நடித்த திரைப்படங்கள் இந்த விமர்சனத்துக்கு ஓரளவு நியாயம் சேர்ப்பதாகவே அமைந்துவிட்டன. கடந்த சில ஆண்டுகளில் வெளியான திரைப்படங்கள் அவர் ஒரே மாதிரியான கதைகளில், சூழல்களில் கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்ற விமர்சனத்துக்கு வழிவகுத்துவிட்டன. அஜித் தன் மிகை நாயக பிம்பத்துக்கேற்ற கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார் என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது. ஆனால் 2015-ல் வெளியான ‘என்னை அறிந்தால்’ பட உருவாக்கத்தின்போது தன் இமேஜுக்கு ஏற்ற காட்சிகளையோ வசனங்களையோ வைக்க வேண்டாம் என்று அஜித் வலியுறுத்திக்கொண்டே இருந்தார் என்று அப்படத்தின் இயக்குநர் கெளதம் மேனன் பலமுறை சொல்லி இருக்கிறார். அதை விமர்சகர்கள் பொருட்படுத்துவதில்லை. இந்த விமர்சனத்துக்கு அவர் முகம் கொடுக்கத் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.

2018-ல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘விஸ்வாசம்’ படத்தில் ஒரு நடுத்தர வயதுத் தந்தையாக நடித்து எல்லா தரப்பு ரசிகர்களிடமும் குறிப்பாக குடும்ப ரசிகர்களிடம் மீண்டும் செல்வாக்கு பெற்றுவிட்டார்.

அதற்கு அடுத்ததாக அவர் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ பெரும் ரசிகர் பட்டாளத்தை உடைய மாஸ் நட்சத்திர நடிகர்களுக்கு ஒரு புதிய முன்னுதாரணமாக இருந்தது. இந்தியில் வெளியாகி விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ‘பிங்க்’ படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.

இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார் என்பதாலும் அந்தப் படத்தில் பெண்கள் தொடர்பாகப் பேசப்பட்ட கருத்துகள் பலவும் தமிழ் பொதுச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதாலும் தமிழ்ப் பதிப்பில் கதையில் பல மாற்றங்களைச் செய்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘நேர்கொண்ட பார்வை’ வெளியானபோது இந்தச் சந்தேகங்கள் அனைத்தும் பொய்யாகின. ஒரு பெண் யாராக இருந்தாலும், எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவர் உறவுக்கு வர மறுத்தால் அவரை வற்புறுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் ‘No Means No’ என்ற ஆதாரச் செய்தி எந்த வகையிலும் நீர்த்துப் போகாத வகையில் தமிழிலும் அப்படியே கடத்தப்பட்டிருந்தது. முதல் பாதியில் ஒரு சில வசனங்கள் மட்டுமே பேசி, இரண்டாம் பாதியில் மட்டுமே அதிக காட்சிகளில் பெர்ஃபார்ம் செய்வதற்கான வாய்ப்புள்ள கதாபாத்திரத்தை ஏற்றதன் மூலம் நல்ல கதை என்றால் இமேஜைப் பற்றி கவலைப்படாதவர் என்பதை நிரூபித்தார் அஜித். அதோடு மாறுபட்ட, புரட்சிகரமான உள்ளடக்கங்களைக் கொண்ட கதைகளை மாஸ் நடிகர்களை வைத்தும் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் படம் விதைத்தது. பல வகைகளில் ‘நேர்கொண்ட பார்வை’ அஜித்தும் அவருடைய ரசிகர்களும் பெருமைகொள்ளத்தக்கப் படம் என்பதில் ஐயமில்லை.

வருங்காலம் என்ன?

அடுத்ததாக இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் ‘வலிமை’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஜித். ’சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’ என்று தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுத்துவரும் இளம் இயக்குநரான ஹெச்.வினோத்தின் இந்தப் படமும் அஜித்தின் திரை வாழ்வில் மறக்க முடியாத படங்களில் ஒன்றாக அமையும் என்று உறுதியாக நம்பலாம். ஹெச். வினோத் போன்ற இயக்குநருடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் அஜித் நடித்திருப்பது இந்தத் தலைமுறையின் திறமையான இளம் இயக்குநர்களுடன் இணைவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்ற நம்பிக்கையையும் விதைத்திருக்கிறது.

இந்த நம்பிக்கைகளின் வெளிச்சத்தில் அஜித்தின் வருங்காலப் படங்கள் அனைத்தும் சிறப்பாக அமையவும் அவரை அன்புடன் நேசிப்பவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கவும் அவரை மனதார வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x