Published : 29 Apr 2020 01:55 PM
Last Updated : 29 Apr 2020 01:55 PM
இர்ஃபான் கான் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து தங்களுடைய சமூக வலைதளத்தில் கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர்.
சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான். அதற்குப் பிறகும் மீண்டும் சில படங்களில் நடித்தார். இதனிடையே நேற்று (ஏப்ரல் 28) அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
இதனிடையே, இன்று (ஏப்ரல் 29) காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இர்ஃபான் கான் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு:
ஆமிர் கான்: எங்களின் அன்பார்ந்த சக நடிகர் இர்ஃபான் பற்றிக் கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். எவ்வளவு சோகமான, வருத்தமான விஷயம். அவ்வளவு அற்புதமான திறமை. அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபங்கள். உங்கள் நடிப்பின் மூலமாக எங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் கொண்டு வந்த அத்தனை சந்தோஷத்துக்கும் நன்றி இர்ஃபான். நீங்கள் அன்புடன் நினைவுகூரப்படுவீர்கள்.
சிரஞ்சீவி: இர்ஃபான் கான் மறைந்த மோசமான செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தேன். சர்வதேச அங்கீகாரம் பெற்ற அற்புத நடிகர். அவருக்கு மாற்றே கிடையாது. அவரது தீர்க்கமும், அழகான அணுகுமுறையும் என்றும் நம் மனதில் அச்சடித்தாற் போல நிலைத்திருக்கும். அன்பார்ந்த இர்ஃபான், நீங்கள் இல்லாத குறையை நாங்கள் உணர்வோம். நீங்கள் என்றென்றும் நினைவில் இருப்பீர்கள்.
ஷாரூக் கான்: என் நண்பர், என் ஆதர்சம், நம் காலகட்டத்தின் மிகச்சிறந்த நடிகர். அல்லா உங்கள் ஆன்மாவை ஆசிர்வதிப்பார் இர்ஃபான் பாய். உங்கள் இழப்பை உணரும் அதே நேரத்தில் நீங்கள் எங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்ததை என்றும் மகிழ்ச்சியுடன் நினைப்பேன்.
காஜல் அகர்வால்: கண்டிப்பாக உங்கள் இழப்பு அதிகம் உணரப்படும். உங்களது அற்புதமான திரை நடிப்பை நாங்கள் என்றும் மகிழ்ச்சியுடன் நினைவில் வைத்திருப்போம். அவரது குடும்பத்துக்கு இந்த இழப்பைத் தாங்கும் வலிமை கிடைக்கட்டும். இதைவிட மோசமான செய்தி இருக்க முடியாது.
நீத்து சந்திரா: இர்ஃபானுடனான எனது நினைவுகளில் சிரிப்பும், புன்னகையும் மட்டுமே நிறைந்திருக்கும். என்னால் இன்னமும் இந்தச் செய்தியை ஏற்க முடியவில்லை. இர்ஃபான் கான் போல ஒரு எளிமையான நடிகர், நண்பர் இனி பிறக்கவே முடியாது. இந்த பெரிய, எதிர்பாராத இழப்பை எதிர்கொண்டிருக்கும் அவரது மகன்களுக்கும், மனைவிக்கும் எனது பிரார்த்தனைகள், எண்ணங்கள்.
ப்ரித்விராஜ்: உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் இர்ஃபான் கான். இந்திய சினிமாவுக்கு உங்களால் ஆன பங்களிப்பை, எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் இழப்பு உணரப்படும்.
த்ரிஷா: இன்று கண் விழித்ததும் நிறைய சோகம், அதிர்ச்சி. ஆன்மா சாந்தியடையட்டும் இர்ஃபான் கான். உங்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. நீங்கள் நடித்த படங்கள், உங்கள் திறமை, கண்ணியம் கண்டு நான் எப்போதும் ஆச்சரியமடைவேன். அவரது குடும்பத்துக்கு இந்த இழப்பைத் தாங்கும் வலிமை கிடைக்கட்டும்
பிரியங்கா சோப்ரா: நீங்கள் செய்த ஒவ்வொரு பணிக்கும் நீங்கள் கொண்டு வந்த அழகு, ஒரு மாயாஜாலம். உங்களது திறமை, பலருக்கு, பல வழிகளில் வாய்ப்புகளைக் கொடுத்தது. எங்களில் பலருக்கு நீங்கள் ஆதர்சம். உங்கள் இழப்பு கண்டிப்பாக உணரப்படும் இர்ஃபான் கான். அவரது குடும்பத்துக்கு இரங்கல்கள்.
ராஜசேகர்: நம்பமுடியவில்லை. இனி அவரைப் போல ஒரு நடிகரை என்றும் பார்க்க முடியாது. நீங்கள் ஒரு இரத்தினம். உங்கள் இழப்பு உணரப்படும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்
ரசூல் பூக்குட்டி: என் அன்பு இர்ஃபான். சீக்கிரம் விட்டுச் சென்றுவிட்டாய். புனே திரைப்படக் கல்லூரியின் சிறிய அறையிலிருந்து சினிமாவின் சர்வதேச மேடைக்கு நாம் இருவரும் இணைந்தே பயணித்தோம். நீ எங்களை விட்டுச் சென்றதை நம்ப முடியவில்லை. இவ்வளவு சீக்கிரம், இவ்வளவு விரைவாகவா. நீ ஒரு அரிய திறமையாளன். உலக சினிமா என்றுமே உன்னை நினைவில் வைத்திருக்கும். சுதபாவுக்கு எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும்.
ரித்தேஷ் தேஷ்முக்: நமது இழப்பு, சொர்க்கத்துக்கு ஆதாயம். ஆன்மா சாந்தியடையட்டும் இர்ஃபான் கான். திரையில் நீங்கள் செய்த அனைத்து மாயங்களுக்கும் நன்றி. அவரது குடும்பத்துக்கும், நெருக்கமானவர்களும் என் இரங்கல்கள்
கியாரா அத்வானி: புரட்சிகரமான நடிப்போடு உலகம் முழுவதும் ஒரு தலைமுறைக்கே ஊக்கமாகத் திகழும் நடிகர். மனமுடையும் இழப்பு. உங்கள் குடும்பத்துக்கு வலிமை கிடைக்கப் பிரார்த்திக்கிறோம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் இர்ஃபான் கான் சார்
இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன்: சென்று வாருங்கள் சகாப்தமே. அதிர்ச்சியான செய்தி. நமது தலைமுறையின் மிகச்சிறந்த நடிகர். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் இர்ஃபான் கான்
மாதவன்: இது மிகப்பெரிய சோகம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் இர்ஃபான் சார். அற்புதமான கலைஞனை, மனிதனை துறை இழந்துவிட்டது. உங்கள் இல்லாமை உணரப்படும். சொர்க்கத்தில் மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.
சசி தரூர்: ஒரு மனிதனின் மரணம் என்னை அளவிடமுடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நான் அவரை சந்தித்ததே இல்லையென்றாலும் என் மனதுக்கும், லட்சக்கணக்கானோரின் மனதுக்கும் தனது திறமிக்க நடிப்பால் மகிழ்ச்சியூட்டியவர். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் இர்ஃபான் கான். கலைக்கு அவர் இன்னும் நிறைய சேவை செய்யத் தயாராக இருந்தாலும் சீக்கிரம் நம்மைப் பிரிந்துவிட்டார்.
சந்தோஷ் சிவன்: இர்ஃபான் கான், மிகச் சிறந்த திறமை, அற்புதமான மனிதர். கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும்.
லட்சுமி ப்ரியா : எனக்கு மிகப்பிடித்தமான நடிகர்களில் ஒருவர். இது மிகவும் வருத்தத்தைத் தருகிறது. ஒரு நடிகராக நீங்கள் செய்த அத்தனைக்கும், உங்களது அசாதாரணமான திறமையால் பலருக்கு ஊக்கம் தந்ததற்கும் நன்றி. இவ்வளவு சீக்கிரம் (பிரிந்திருக்க வேண்டாம்).
ஃபர்ஹான் அக்தர்: இர்ஃபான் கான் தனித்துவமான ஒரு நடிகர். திரையில் அவர் கொண்டு வந்த மாயத்தை, அவர் இல்லாத குறையை நாங்கள் கண்டிப்பாக உணர்வோம். ஆன்மா சாந்தியடையட்டும்
சுஜித் சர்கார்: என் அன்பு நண்பா இர்ஃபான். நீ போராடினாய், போராடினாய், போராடினாய். நான் என்றுமே உன்னை நினைத்துப் பெருமை கொள்வேன். நாம் மீண்டும் சந்திப்போம். சுதாபா மற்றும் பாபிலுக்கு எனது அனுதாபங்கள். நீங்களும் போராடினீர்கள். சுதாபா, இந்தப் போராட்டத்தில் நீ உன்னால் முடிந்த அத்தனையையும் கொடுத்தாய். இர்ஃபானுக்கு என் வணக்கங்கள். அமைதி நிலவட்டும். ஓம் சாந்தி.
தனஞ்ஜெயன்: இந்த சோகமான செய்தியைப் படிக்கும்போது அதிர்ச்சியடைந்தேன். ஒரு அற்புதமான நடிகரின் இழப்பை நாம் உணரப்போகிறோம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் இர்ஃபான் கான். உங்களது அழகான திரைப்படங்கள் மூலமாக என்றும் உங்களை நினைவில் வைத்திருப்போம்.
ரகுல் ப்ரீத் சிங்: மிகச் சிறந்த நடிகரையும், அதையும் தாண்டி ஒரு அன்பான மனிதரையும் நாம் இழந்துவிட்டோம் என்பதை நினைத்து அதிகம் வருத்தப்படுகிறேன். நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் இருப்பீர்கள் சார். அவரது குடும்பத்துக்கு இழப்பைத் தாங்கும் பலம் கிடைக்கட்டும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் இர்ஃபான் கான்.
ஹரிஷ் சங்கர்: இர்ஃபான் கான் மறைந்ததைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன், சோகமுற்றேன். இதைப் பார்ப்பது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். ஒரு சகாப்தம் இல்லாத குறையை நாம் கண்டிப்பாக உணர்வோம் என்பதில் சந்தேகமில்லை.
கீர்த்தி கர்பண்டா: மனமுடையும், அதிர்ச்சியான செய்தி. இர்ஃபான் சார் இல்லை என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது. மிகச் சிறந்த நடிகர். அற்புதமான, உணர்ச்சிகரமான மனிதர். உங்கள் இழப்பை உணர்வோம் சார்.
அஜய் தேவ்கன்: இர்ஃபானின் திடீர் மரணம் பற்றிக் கேள்விப்பட்டு மனமுடைந்துவிட்டேன். இந்திய சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது மனைவிக்கும், மகன்களுக்கும் என் அனுதாபங்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் இர்ஃபான் கான்
நிவின் பாலி: இர்ஃபான் கானின் மரணச் செய்தி கேட்டதில் அதிர்ச்சி, வருத்தம். எவ்வளவு அற்புதமான நடிகர் அவர். நீங்கள் தந்த நினைவுகளுக்கு நன்றி சார். சகாப்தமே, இந்தியா உங்களது இழப்பை உணரும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்
பிரகாஷ் ராஜ்: அதிக வலியைத் தருகிறது. இது மிகவும் சீக்கிரம் இர்ஃபான். சர்வதேச கலைக்கு உங்களது பங்களிப்புக்கு நன்றி. உங்களது இழப்பை உணருவோம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.
அக்ஷய் குமார்: மிக மோசமான செய்தி. இர்ஃபான் கானின் மரணம் பற்றிக் கேள்விப்பட்டு சோகமடைந்தேன். நம் காலகட்டத்தின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். இந்தக் கடினமான நேரத்தில் அவரது குடும்பத்துக்கு கடவுள் வல்லமை தரட்டும்.
மகேஷ் பாபு: இர்ஃபான் கானின் திடீர் மரணம் பற்றிய செய்தியால் ஆழ்ந்த வருத்தமடைந்துள்ளேன். ஒரு அற்புதமான நடிகர் நம்மை சீக்கிரம் பிரிந்து சென்றுவிட்டார். கண்டிப்பாக அவர் இல்லாத குறையை உணருவோம். அவரது குடும்பத்துக்கும், நெருக்கமானவர்களுக்கும் எனது மனமார்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT